இணைப்புகளால் ஏற்றம் பெறுமா வங்கித் துறை?

By நீரை மகேந்திரன்

விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்று வங்கிளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாராக்கடன் மீட்பு நட வடிக்கையாகவும், கடன் வசதிகளை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இந்த இணைப்பின் மூலம் நாட்டின் 3-வது மிகப்பெரிய வங்கியாக புதிய வங்கி உருவாகும். குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு அடுத்து பெரிய, ஸ்திரமான வங்கியாக உருவாக உள்ளது.

தற்போது, வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து, வங்கிகளின் சொத்துகள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலிமை அடையும் என அறிவிப்பின்போது குறிப்பிட்டார் ஜேட்லி.

இந்த இணைப்பினால் 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும், முக்கியமாக வங்கியின்  பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என்கிற குறிப்பினையும் ஜேட்லி அளித்துள்ளார்.

இணைப்பு அவசியமா?

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் தத்தளித்து வரும் நிலையில் அதிலிருந்து மீட்கும் நடவடிக்கையாக மூன்று வங்கிகளையும் இணைக்க அரசு திட்டமிடுகிறது. கடந்த ஆண்டில் இதே காரணத்தை முன்வைத்து பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தாலும், இந்த இணைப்பின் மூலம் கிடைத்த ஆதாயத்தை விட, இழப்புகளே அதிகம் என்கின்றன விவரங்கள். இந்த நிலையில்தான் அடுத்த கட்டமாக விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மூன்றையும் இணைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது.

இந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு என தனித் தனியான கட்டமைப்பை கொண்டுள்ளன. இவற்றின் பணிக் கலாச்சாரத்தை ஒன்றாக இணைப்பது நிர்வாக ரீதியாக சவாலானது. பேங்க் ஆப் பரோடா வங்கி குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையான  சந்தையை வைத்துள்ளது. தேனா வங்கிக்கு தெற்கிலும் வடக்கிலும் 1,557 கிளைகள்தான் உள்ளன. ஆனால் மேற்கு பகுதியில் மட்டும் 2,205 கிளைகளை வைத்துள்ளது.  இந்த நிலையில் புதிதாக உருவாகும் வங்கி இந்த கட்டமைப்பு பலத்தை இழக்கும். விஜயா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுமார் 500 வங்கி கிளைகளை மூடவேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

முதலில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைக்கப்பட்டு, அதன் பின்னர் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வங்கிகளின் கோர் பேங்கிங் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மென்பொருளை கையாளுகின்றன. இதனால் சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் இன்ஸ்ட்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம். வங்கிகளின் இணைப்பு குறித்து அரசு அறிவித்த இரண்டு நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளன.

குறிப்பாக பட்டியலிடப்பட்டுள்ள 22 வங்கிகளின் சந்தை மதிப்பில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டது. இதுபோன்ற இணைப்பு நடவடிக்கைகள் வரும் காலத்தில், இதர வங்கிகளிலும் நடக்கலாம் என்கிற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவாகியுள்ளது. இணைக்கப்படும் வங்கியின் கடன் சுமை, தாங்கள் பங்கு வைத்துள்ள வங்கியின் கடன் சுமையோடு சேர்ந்தால் வங்கியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்பது முதலீட்டாளர்களின் கணிப்பு. இதனால் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள வங்கிப் பங்குகளை விற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சம்பந்தபட்ட வங்கிகளின் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது.

திவால் நடவடிக்கை தீர்வுகள்

இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பு தற்போது 21000 கோடி டாலர் (14,70,000 கோடி ரூபாய்) என தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இதனால் நீண்ட காலமாக உள்ள வாராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல வழிமுறைகளை வங்கிகளுக்கு அளித்து வருகிறது. குறிப்பாக திரும்ப பெறக்கூடிய நிலையில் உள்ள ரூ. 3.6 லட்சம் கோடி வாராக் கடனை வசூலிப்பதற்கான மறுசீரமைப்பு திட்டங்களுக்கு வங்கிகளை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி வாராக்கடனை வசூலிக்க நிறுவனங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவதும், நிறுவனத்தை மறுசீரமைத்து கடனை வசூலிக்கவும் திவால் தீர்வுகள் சட்டப்படி (Insolvency and Bankruptcy Code)  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரமைக்க முடியாத நிறுவனமாக இருந்தால் வேறு நிறுவனங்களிடம் விற்று இருக்கும் கடனை வசூலிக்கவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட தற்போது இணைப்பு மற்றும் கையகப்

படுத்தல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இதன் மூலம் வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டு 3500 கோடி டாலருக்கும் குறைவான இணைப்புகளே நடந்தன. ஆனால் 2018-ம் ஆண்டில் இதுவரை 11000 கோடி டாலருக்கு மேல் இணைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன. இந்த போக்கு தொடரும் என்கிறது பிடபிள்யூசி நிறுவனம்.

இதன்படி வாராக்கடன் அதிகம் வைத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், முகேஷ் அம்பானியின் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன், எஸ்ஸார் ஸ்டீல், பூஷான் ஸ்டீல், ருச்சி சோயா என பட்டியல் தொடர்கிறது. தற்போது ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் மோர் சில்லரை வர்த்தக அங்காடியும் இந்த பட்டியலில் இணைகிறது.

விஜயா வங்கி தனது வாராக்கடனை குறைத்து வருகிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.34 சதவீதமாக இருந்த வாராக்கடனை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.19 சதவீதமாக குறைத்துள்ளது. தேனா வங்கி தொடர்ச்சியாக வாராக்கடன் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் 22.69 சதவீத கடனை 22.04 சதவீதமாக குறைத்துள்ளது.

வங்கியல்லாத நிறுவனங்களின் வளர்ச்சி பல்வேறு வகையிலும் மோசடிகள், வாராக்கடன்களால் பொதுத்துறை வங்கிகள் திணறும் நிலையில்,  ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும்  அபாரமான வளர்ச்சியில் உள்ளன. உலகின் மிக மோசமான வங்கிகள் கொண்ட இந்தியாவில்தான், உலகின் மிக சிறப்பான வங்கிகளும் உள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ்  வங்கிகளின் வளர்ச்சி 47 சதவீதமாக உள்ளது என சுட்டிக் காட்டுகிறது. மூன்று வங்கிகளின் இணைப்புக்கு பின்னர் இந்த வங்கிகளின் சொத்து மதிப்பு உயரும். ஆனால் அதே அளவுக்கு சிக்கல் உருவாகும் என்கிறது கோட்டக் ஆய்வு.  தேனா வங்கியின் நிகர மதிப்பு புதிய வங்கியின் சொத்து மதிப்பினை உயர்த்தும். அதேநேரத்தில் பேங்க் ஆப்பரோடாவும், விஜயா வங்கியும் சிறந்த கடன் கட்டமைப்பை வைத்துள்ளன.

ஆனால் இணைப்புக்கு பின்னர் ஒட்டுமொத்த வராக்கடன் ரூ.80,000 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். இதை வசூலிப்பதற்கே புதிய வங்கி முன்னுரிமை அளிக்கும். இதனால் கார்ப்பரேட் கடன் அளிப்பதும் சவாலானது.  இணைப்புக்கு பின்னர் வங்கியின் கடன் வர்த்தகம் 6.4 சதவீதமாகவே இருக்கும்.

தொழில்சங்க அச்சம்

மத்திய அரசு செய்யும் மூலதன உதவிக்காக இந்த இணைப்பு நடவடிக்கை அவசியமாக இருக்கலாம். ஆனால் வங்கிகளின் சொத்து மதிப்பில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்கின்றன தொழில்சங்கங்கள். எஸ்பிஐ இணைப்பினால் சாதகமான அம்சங்கள் எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் வாராக்கடன் அதிகரித்துள்ளது, ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர், வர்த்தகம் குறைந்துள்ளது என தொழில்சங்கங்கள் கூறுகின்றன.

அதே அச்சம் இப்போதைய இணைப்பிலும் இருப்பதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆக, இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி அமைப்பிலும் சிக்கல் இல்லை என்பதுடன், ஒவ்வொரு தனித்த வங்கியினுடைய நிர்வாகம் சார்ந்த சிக்கலாகவே இருக்கிறது என்பதும் உண்மை. இதை புரிந்து கொண்டால் வங்கி கட்டமைப்பை சரிசெய்ய இணைப்பு நடவடிக்கை தீர்வாக இருக்குமா என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

- maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்