எனது நண்பர் ஒருவர். படித்தவர். கெட்டிக்காரர். ஒரு நல்ல நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார். திறமைசாலியான அவருக்கு ஒரே குறை அவரது குணம் தான். யாரைப் பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் குறை சொல்வார், சண்டை பிடிப்பார்! அதுவும் வெகு சீக்கிரம்!!
சினிமாவுக்குப் போனால் இரண்டு கைகளையும் சீட்டின் இரு பக்கமும் வைத்துக் கொண்டு விடுவார். அருகில் இருப்பவர் ஒடுங்கித் தான் உட்காரணும். தனக்கு கையை அப்படி வெகுநேரம் வைத்திருப்பது வலித்தாலும் பரவாயில்லை, அடுத்தவருக்கு இடம் கொடுக்
கக் கூடாது எனும் எண்ணம்! அப்புறம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்வார். இவர் செய்யும் கலாட்டாவில் படம் பார்க்க வந்தவர்கள் எரிச்சலடைந்து பேச, ஏச, குடும்பத்தினர்க்கு இனிய மாலைப் பொழுது பாழாகும்! அது சரி, நீங்களாகவே அவர் பெயரை குமார் என்று வைத்துக் கொண்டு விட்டீர்களா?
உணவு விடுதிக்குச் சென்றால், குமார் சர்வருடன் போடும் சண்டை உட்கார்ந்தவுடன் தொடங்கி, பணம் கட்டி வெளியே வரும் வரை நீடிக்கும். சர்வர்களுக்கு மேஜைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டார். உள்ளே தோசை எடுக்கச் சென்ற சர்வர் வரும் வரை பொறுக்க மாட்டார்.
`சண்டை போட்டுக்கொள்ள இருவர் வேண்டும், ஆனால் அதை முடிவிற்குக் கொண்டு வர ஒருவரே போதும்' என்று ஆங்கிலேயக் கவிஞர் மாத்யூ ப்ரையர் சொல்வது நாம் யாரும் மறக்கக்கூடாத உண்மை! நீங்களும் இந்த மாதிரியான குமார்களைப் பார்த்து இருப்பீர்கள்.
இவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால், ‘எங்களுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?' என்று கேட்பார்கள். அவர்கள் நம் வீட்டிற்கு வரும் சந்தர்ப்பங்கள் இருக்குமே என்கிறீர்களா? அது சமயம், நம்மிடம், ‘உங்கள் வீட்டிற்கு வராதவர்கள் வந்து இருக்கிறோம். எங்களுக்குச் சிறப்பாக என்ன கொடுக்கப் போகிறீர்கள்?' என நம்மைக் கேட்பார்கள்!
துணிக் கடைக்குப் போனால் தனக்கு நல்ல புதிய டிஸைன்களைக் காட்டவில்லை என்பார்கள். பூங்காவிற்குப் போனாலும், கோவிலுக்குப் போனாலும் குறை குறையாகச் சொல்வார்கள். அங்கிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். ‘ஒரு ஆண் அல்லது பெண்ணின் வளர்ப்பு, அவர்கள் ஒரு வாக்குவாதம் செய்யும் பொழுது தெரிந்து விடும்' என்கிறார் பெர்னார்ட் ஷா! இந்தச் சண்டை போடும் குணம் உள்ளவர்களைப் பார்த்தால் யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா?
அவர்களுடன் இருப்பதை, நேரம் செலவிடுவதைத் தவிர்க்கப் பார்ப்பார்கள் இல்லையா? எனவே அத்தகையவர்கள் வியாபாரம் செய்தால் வாடிக்கையாளர்கள் ஓடிப் போய்விடுவார்கள். அவர்கள் அலுவலகத்தில் இருந்தால் நல்ல பதவிகள் கிடைக்காது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
மொத்தத்தில் அவர்களால் வாழ்க்கையை ரசித்து வாழ முடியாது. (Cant live the moment) வாய்ப்புகள் கிடைக்காது. கிடைத்தாலும் பலன் இருக்காது. ‘ஊதாரித் தனமாக செலவு செய்பவன், தங்கும் இடமற்றவன், சண்டைக்குணம் உடையவன், பெண்ணாசை கொண்டவன்' ஆகிய நான்கு வகை மனிதர்களுக்கு விரைவில் அழிவு ஏற்படும்' என்கிறார் சாணக்கியர்.
உண்மை தானே? சண்டைக்குணம் நல்ல வாழ்க்கையைத் தட்டிப் பறித்துவிடும். ஊதாரித்தனமும் பெண்ணாசையும் எங்கு போய் முடியும் என்பதும் தெரிந்ததுதான். ஆனால், தங்கும் இடமற்றவனும் அழிந்து போவான் என்கிறாரே சாணக்கியர், அது ஏன்? இது ஒன்றும் சொந்த வீடு, வாடகை வீடு பற்றியதாக இருக்க முடியாதில்லையா?
`அவன் ஒரு போக்கத்தவன்’ என்று சொல்வார்கள், கேட்டிருப்பீர்கள். சிலருக்கு வாழ்க்கையில் எந்த ஒரு நோக்கமும் இருக்காது. அதனை அடைய இதனைச் செய்கிறோம் எனும் தெளிவு இருக்காது. உதாரணமாக, சம்பந்தமேயில்லாத விஷயங்களில் 7, 8 பட்டங்கள் வாங்கி வைத்திருப்பவர்களைப் பார்த்து இருப்பீர்கள். முதலில் பேராசிரியர் ஆகிறேன் என கணிதத்தில் முதுகலைப் பட்டம். பின்னர் கணக்காளர் (C A). அதை முடிக்க முடியாமல் மேலாளர் ஆகிறேன் என்று சுமாரான கல்வி நிறுவனத்தில் MBA. அதற்கும் வேலை கிடைக்காததால் வக்கீல் ஆகிறேன் என்று LLB. மீண்டும் பேராசிரியர் ஆக Ph D. என்று எதை எதையோ செய்து கொண்டிருப்பார்கள்.
ஏன் என்று அவர்களுக்கே தெரியாது. இவர்கள் எப்படி வெற்றி அடைய முடியும்? ஆற்று நீரில் அலைக்கழியும் பூ, இலை போலவும், காற்றில் அங்கும் இங்குமாய் அலையும் நூலறுந்த பட்டம் போலவும் நகர்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த இலக்கையும் அடைய மாட்டார்கள்!
எதைச் செய்தாலும், அதற்குக் காரணம் இருக்கணும், கவனக் குவிப்பு (focus)இருக்கணும் என்கிறார் சாணக்கியர். ‘நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று ' என்று வள்ளுவர் சொல்வதற்கு ஒப்பானது இது! என்ன சரி தானே? சாணக்கியர் சொல்லும் இந்த நான்கு குணங்கள் இருந்தால் நல்வாழ்வு கிடைக்காதில்லையா?
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago