2017 – 18 நிதி ஆண்டுக்கான வரித்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 71 சதவிகிதம் உயர்ந்து 5.42 கோடி அளவில் உள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் எந்தவிதபலனும் அளிக்கவில்லை, மாறாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள்தான் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் சாடி வரும் நிலையில், இந்த வரித்தாக்கல் எண்ணிக்கை உயர்வு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
பணமதிப்பு நீக்கப்பட்ட உயர் மதிப்பு நோட்டுக்களில் 99.3 சதவிகிதப் பணம் அதாவது 15.3 லட்சம் கோடி மீண்டும் வந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மீண்டும் கணக்கில் சுழற்சி பெற்றதால் வரித்தாக்கல் செய்யப்பட்டதாக ஒருதரப்பு கூறுகிறது.
வரித் தாக்கல் அதிகரிப்பு எப்படி?
வரி இலாகாவின் தொடர் முயற்சிகள், விழிப்புணர்வு கூட்டங்கள், அதிகரிக்கப்பட்ட அபராதம் போன்றவை வரித்தாக்கல் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
1. நிதியாண்டு 2017-18 முதல் உரிய தேதிக்குப் பிறகு வரித்தாக்கல் செய்தால் அதற்குக் கட்டாய அபராதமாக அதிகபட்சம் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும் என்ற சட்டத்திருத்தம் பெரும்பான்மையான வரிதாரர்களை உரிய தேதிக்குள் தாக்கல் செய்ய நிர்பந்தித்தது.
2. 2017 ஜுலை 1 முதல் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி காரணமாகப் பெரும்பான்மையான பரிவர்த்தனைகள் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சிறு நிறுவனங்களும் வரித்தாக்கல் செய்துள்ளன. உத்தேச அடிப்படையில் அதாவது ஆண்டிற்கு 2 கோடிக்குக் கீழே வருமானம் ஈட்டுவோர் தங்களது மொத்த வருமானத்தில் 8 சதவீதத்தை (வங்கி மூலம் இருந்தால் 6%) வருமானமாக அறிவித்து அதற்குரிய வரிகட்டினால் போதுமானது. மேலும் இந்த சிறு நிறுவனங்கள் கணக்குப் புத்தகங்கள் பராமரிக்கத் தேவையில்லை.
இந்த எளிமைப்படுத்துதலால் உத்தேச அடிப்படையில் வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 8 மடங்காக உயர்ந்துள்ளது. எளிமைப்படுத்தினால் வரி செலுத்துவதற்கும் தாக்கல் செய்வதற்கும் ஒத்துழைப்போம் என்கிற மறைமுக செய்தியை மக்கள் அரசுக்குக் கொடுத்துள்ளனர்.
3. பழைய ஆண்டுகளின் வரித்தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு 31.03.2018 என்று அறிவித்ததன் மூலம் ஏராளமான முந்தைய ஆண்டுக்கான வரிப்படிவங்களை தாக்கல் செய்தனர்.வரிமதிப்பீட்டு முறையில் மாற்றங்கள் ( Assesment Procedings): கடந்த ஆண்டு வரை வரித் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளில் சில அடிப்படைகளின்படி குறிப்பிட்ட வரிதாரர்களது கணக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரி ஆய்வுக்குஉட்படுத்தப்படுகிறது.
(SCRUTINY ASSESSMENT) வருமான வரி அதிகாரிகளிடம் ஆடிட்டரோ, வரிதாரரோ நேரில் சென்று ஆவணங்களையும் விளக்கங்களையும் கொடுத்து வரி மதிப்பீடு நிறைவு செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துநேரில் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. கம்ப்யூட்டர் மூலம் விளக்கங்களை கொடுக்கவேண்டும். ஆவணங்கள் பதிவேற்றம் என்ற புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 7 பெரு நகரங்களில் சில பெரிய வரிதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தமுறை தற்போது இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க வரிமதிப்பீடு இதனால் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தில் ஏராளமான நடைமுறை சிரமங்கள் இந்த ஆண்டு உள்ளது. வரி இலாகாவும் வரிதாரர்களும் கம்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் ஆவணங்களின் அளவிற்கு தகுந்தாற் போல கம்யூட்டரில் உள்வாங்
கும் திறன் இல்லாமல் இருக்கிறது. நேரில் சென்று தெரிவிக்கும் கேள்விகளுக்கான பதில்களிலேயே பல வரிச் சச்சரவுகள் இருக்கின்ற நிலையில் கம்யூட்டர் மூலம் கொடுக்கப்படுகின்ற பதில்கள் ஆரம்பக் காலத்தில் அதிக வரிச் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் வரும் ஆண்டுகளில் இந்த குறைபாடு சரியாகும் என்று நம்பலாம். இதுதவிர வரும் ஆண்டுகளில் பெயரற்ற முகமற்ற முறையில் (Nameless and Faceless) மதிப்பீடு செய்யப்படும்.
வரிதாரரது பெயரும் முகவரியும் இல்லாமல் வேறு ஊரில் உள்ள அதிகாரிகள் குழு கேள்வி கேட்டு அதற்கான பதிலை வைத்து வேறு ஒரு அதிகாரி வரிமதிப்பீடு செய்வார். வரும் சில ஆண்டுகளில் வரி இலாகாவில் பெரும்மாற்றங்களை காணலாம். அமெரிக்காவில் வரி அதிகாரிகள் வரிதாரர்களது அலுவலகத்திற்கே சென்று கணக்குகளைப் பார்க்கும்முறையும் சில கணக்குகளை தங்களது அலுவலகத்திற்கு கொண்டு வந்து பார்க்கும் முறையும் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில்தான் வரிக்குற்றங்களுக்கு ஜெயில் தண்டனை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில் வரி சட்டத்தில் சிறைதண்டனைக்கான சட்டப்பிரிவு இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் பெரிய அளவில் நடைமுறைப்படுத்தவில்லை.
ஆனால் தற்போது வரித்தாக்கல் செய்யாதவர்கள், வரி ஏய்ப்பில் ஈடுபட்டோருக்கு சிறைதண்டனை விதிகளை நடைமுறைப்படுத்த கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. தவிர சிறைதண்டனை பரிந்துரை செய்ய வரிஅதிகாரிகளுக்கு அதிகாரம் இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அபராத சட்டங்களிலும், புதிய பிரிவு 270A ன் படி வருமானத்தைக் குறைத்துக் காண்பித்தால் கட்டாய அபராதமாக வரியில் 50%, வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நிருபணமானால் வரித்தொகையில் 200% கட்டாய அபராதம் விதிக்கப்படும்.
வரித்துறையின் வியூகம் என்ன?
திட்ட உள்நோக்கு (Project Insight) : புதிய தகவல் திரட்டவும், திரட்டிய தகவல்களை வரித் தாக்கல் செய்த படிவங்களோடு ஒப்பிடவும் நவீன தொழில்நுட்ப இணையதளம் மட்டும் வலைதளம் போன்றவற்றைப் புதுப்பித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பல நூறு கோடி ரூபாய் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதற்கு 360 டிகிரி நோக்கு (360 Degree Profile) என்று பெயர். இதுபோன்ற திட்டம் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
இது தவிர வருமானவரி பரிவர்த்தனை ஆய்வு மையம் (Incometax Transaction Analysis Centre) INTRAC, வரி இணக்க மேலாண்மை அமைப்பு (Compliance Management Cpc),கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை (Operation Clean Money) போன்ற பன்முனை தகவல் திரட்டல் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வீடு, இடம்வாங்குவோர், அதிக செலவில் திருமணம் நடத்துவோர், கடன் அட்டை அதிகம் உப யோகிப்போர், வெளிநாடு பயணம் செய்வோர் போன்ற பல்வேறு செலவுகளை வருமானவரிப் படிவத்தில் ஒப்பிட்டு உடனுக்குடன் விபரங்கள் கேட்கப்படும்.
சமூக வலைதளங்கள் மற்றும் வலைதளங்களில் ஏராளமான தகவல்களைத் திரட்டி வரிதாரருடைய வருமானத்தோடும் செலவுகளோடும் ஒப்பிட்டு தேவையான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
தகவல் அளிப்போருக்கு சன்மானம்
கணக்கில் காட்டாத வருமானம், பினாமிச் சொத்துக்கள் குறித்து ரகசிய தகவல்கள் அளிப்போருக்கு ரூபாய் 5 கோடி வரை வெகுமதி என்று சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது. தகவல்கள் அளிப்பவர்களின் பெயர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்வதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் கூட இந்த விபரங்களைப் பெற முடியாது.
அந்தக் காலத்தில் ஒற்றர்களிடமிருந்து அரசர்கள் செய்திகளைப் பெற்றதைப் போல வருமானவரி ஏய்ப்புத் தகவல்களைப் பெறுவதும் தகவல்கள் கொடுத்தவருக்குப் பாதுகாப்பும் பெரிய சன்மானமும் கொடுப்பதும் வரி நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது புதுமையான ஒன்று. இதையெல்லாம் பார்க்கும்போது மறக்காத அபிமன்யூ வியூகம் போல வருமானவரி இலாகா முழுமையான வியூகம் வகுத்து வருவது போலத்தான் தெரிகிறது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் வரிச்சட்டங்களும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டு வரி இலாகா சேவை மையங்கள் போலச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
“வரு முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தது போல” என்பது போல தாமாக முன்வந்து வரியைச் செலுத்தினால் தேவையற்ற வட்டி, அபராதங்களைத் தவிர்க்க முடியும். மேலும் கணக்கில் காட்டப்பட்ட பணம் வியாபார அபிவிருத்திக்கும் சொத்துக்களைப் பெருக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
முத்தொள்ளாயிரத்தில் அரசன் ஆறில் ஒரு பங்கு ஆட்சி செலவுக்கு வரி வசூலிக்கலாம் என்று அக்காலத்தில் கூறியது போல அரசும் வரி விகிதத்தை கூடிய விரைவில் குறைக்கும் என்று நம்பலாம்.
- karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago