யு டர்ன் 24: டி. ஐ. சைக்கிள் - ஆடியது அரியாசனம்!

By எஸ்.எல்.வி மூர்த்தி

தமிழ்நாட்டின் தொழில் முன்னோடிகளில் முக்கியமானவர் ஏ.எம்.முருகப்ப செட்டியார் (சுருக்கமாக ஏ.எம்.எம்). 1900 – ல் இவர் தொடங்கிய முருகப்பா குழுமம், நாட்டுக்கே பெருமை தரும் 119 ஆண்டுகால சாதனைச் சரித்திரம்.

தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்கள், தண்ணீர், சர்க்கரை, நெட்லான் கொசுவலை, உரம், சைக்கிள், ஸ்டீல் குழாய்கள், கார் பாகங்கள், கியர்கள், அப்ரேஸிவ்ஸ் என்னும் தேய்ப்புப் பொருட்கள், நிதி ஆலோசனை, இன்ஷூரன்ஸ் போன்ற 28 வகையான பிசினஸ்கள். டி.ஐ. சைக்கிள், பாரி, சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டியூப் இன்

வெஸ்ட்மென்ட்ஸ், கார்பொரன்டம், சாந்தி கியர்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், உத்ராகான்ட் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, தெற்கு ஆப்பிரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்கள் போன்ற நாடுகளிலும் தொழிற்சாலைகள். 234 நகரங்களில் 32,000 - க்கும் அதிகமான ஊழியர்கள்.

ஏ.எம்.எம், 1884 –ம் ஆண்டு செட்டி நாட்டுப் பள்ளத்தூரில் பிறந்தார். அப்பாவின் லேவாதேவிக் கடையில் ஆரம்பப் பயிற்சி. அடுத்து, பர்மாவில் மாமா நடத்திய லேவாதேவிக் கடையில் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டார். சொந்தக் காலில் நிற்கும் வெறி.

தன் 31–ம் வயதில், பர்மாவில் வங்கி தொடங்கினார். அடுத்த 20 வருடங்களில் கிடுகிடுவென்று வளர்ச்சி. இலங்கை, மலேஷியா, வியட்நாம் நாடுகளில் வங்கிக் கிளைகள், ரப்பர் தோட்டங்கள், டெக்ஸ்டைல் மில், இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தைச் சேவைகள் என முருகப்பாவின் சாம்ராஜ்ஜியம் பிரம்மாண்டமானது.

தன் 50–ம் வயதில் பிறந்த பொன்னாட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தார். கோயம்பத்தூரில் நூற்பாலை தொடங்கினார்; கேரளத்தில் ரப்பர் தோட்டங்கள் வாங்கினார். அடுத்துச் சென்னை திருவொற்றியூரில், ஸ்டீல் பீரோக்கள், தேய்ப்புத் தாள் ஆகியவை தயாரிக்கும் அஜாக்ஸ் புராடக்ட்ஸ் தொழிற்சாலை ஆகியவை பிறந்தன, ஏ.எம்.எம் 1949–ல், தன் 65-ம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் தனிக்குணம், கட்டுக்கோப்பு. அவர் மகன்கள் ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார், ஏ.எம்.எம். அருணாச்சலம் ஆகியோர் குழுமப் பொறுப்பை ஏற்றார்கள்.

விடுதலை பெற்ற இந்தியாவில், அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தேவை அதிக வளர்ச்சி காணும் என்று கணித்தார்கள். அவர்கள் தேர்வு - சாமானியரும் பயன்படுத்தும் சைக்கிள்.

ஹெர்குலிஸ், பிலிப்ஸ் ஆகிய புகழ்பெற்ற பிராண்ட் சைக்கிள்கள் தயாரிக்கும் இங்கிலாந்தின் டி. ஐ. குழுமத்தின் (T. I. Group) கூட்டுறவோடு சென்னை அம்பத்தூரில் தொழிற்சாலை தொடங்கினார்கள். இந்தியாவின் முதல் சைக்கிள் தயாரிப்பாளர்கள் முருகப்பா குழும டி. ஐ. தான்.

ஆரம்ப நாட்களில், இங்கிலாந்தின் கூட்டாளிக் கம்பெனியிலிருந்து பாகங்கள் வாங்கி அசெம்பிள் மட்டுமே செய்தார்கள். அடுத்தகட்டமாக, சைக்கிள் பிரேம்களுக்கான டியூப்கள், செயின், விளக்குகள் ஆகியவற்றைத் தாங்களே தயாரிக்க ஆரம்பித்தார்கள். இவை ஹெர்குலிஸ், பிலிப்ஸ் என்னும் இரண்டு பெயர்களில் விற்பனையாயின. முழு சைக்கிளையும் தயாரித்த ஒரே இந்தியக் கம்பெனி என்னும் பெருமை!

1964-ல், பி.எஸ்.ஏ – எஸ்.எல்.ஆர் (BSA – SLR) என்னும் எடை குறைந்த ஸ்போர்ட்ஸ் சைக்கிளை அறிமுகம் செய்தார்கள். ஹெர்குலிஸ், பிலிப்ஸ், பி.எஸ்.ஏ.- எஸ்.எல்.ஆர் ஆகிய மூன்று தயாரிப்புகளுக்கும் மாபெரும் வரவேற்பு. தொடர் வளர்ச்சி. இதைக் கண்ட பல புதியவர்கள் களத்தில் நுழைந்தார்கள்.

1950 – ல், அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனம் பஞ்சாப் மாநிலம் சோனேபட்  என்னும் இடத்தில் வந்தது. 1951 – ல், அதே பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அவோன் (Avon) சைக்கிள்ஸ், 1956–ல், லூதியானாவில் இன்னொரு புதுமுகம் - ஹீரோ சைக்கிள்ஸ். இவர்கள் மூவரும் பெரும்பாலான பாகங்களை வெளியாரிடமிருந்து வாங்கி, சைக்கிள்களை அசெம்பிள் செய்து விற்றார்கள். தங்கள் சப்ளையர்களிடம் பேரம் பேசிக் குறைந்த விலை பெற்றார்கள்.

ஆகவே, இவர்களின் தயாரிப்புச் செலவு டி. ஐ – யை விட மிகக் குறைவு. கஸ்டமர்களுக்குக் குறைந்த விலையில் தந்தார்கள். விலை வித்தியாசத்தால், 1970 வரை இந்தியாவின் நம்பர் 1 ஆக இருந்த டி.ஐ. முயல் பின்தங்கியது. ஹீரோ, அட்லஸ், அவோன் ஆமைகள் முந்தின.

செலவுகளைக் குறைக்க எத்தனைதான் முயற்சிகள் எடுத்தாலும், அவோன், அட்லஸ், ஹீரோ ஆகியோரின் அளவுக்கு விலை குறைக்க டி.ஐ – யால் முடியவில்லை. அவர்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபோதும், போட்டியாளர்கள் இன்னும் வேகமாக முந்திக்கொண்டிருந்தார்கள்.

தாக்குப்பிடிக்க என்ன செய்யலாம் என்று டி.ஐ. – ல் தீவிர ஆலோசனைகள்... பிற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் சைக்கிள்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு ஜப்பானில் நூற்றுக்கு 84 பேர்; அமெரிக்காவில் 56 பேர்; ஐரோப்பாவில் 50 பேர்; மலேஷியாவில் 34 பேர்; சீனாவில் 18 பேர்; இந்தியாவில் நூற்றுக்கு 10 பேர்.

நம் நாட்டில் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டிருந்தது. இதனால், சைக்கிள்கள் வாங்குவோர், மொபெட்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். இதனால், சைக்கிள்களின் தேவை வளர்ச்சி இன்னும் மந்தமாகும் என்று பொருளாதார மேதைகள் கணித்தார்கள்.

இதே சமயம், ``ஸ்பெஷல்ஸ்” என்று அழைக்கப்படும் ஸ்போர்ட்ஸ், உடற்பயிற்சி, குழந்தைகள் சைக்கிள்கள் தேவை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. 1996 – ல் டி.ஐ. இந்தத் தயாரிப்பில் இறங்கினார்கள்.

கரடுமுரடுப் பாதைகளுக்கான ``ஹெர்க்குலிஸ் MTB (Mountain Terrain Bike), இளைய தலைமுறைக்காக “ஸ்ட்ரீட் காட்” (Streetcat) என்னும் ஸ்டைல் சைக்கிள், ராக் ஷாக் (Rockshock) என்னும் கியர் வைத்த சைக்கிள் ஆகியவற்றைக் களத்தில் இறக்கினார்கள். இங்கேயும், சில ஆண்டுகளில் குறைந்த விலையோடு ஹீரோ வந்து துரத்தினார்கள்.

தொடக்க நாட்களில் டி. ஐ, ஆப்பிரிக்காவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்கள். 1988–ல் இன்னொரு வாய்ப்புக் கதவு திறந்தது. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு இறக்குமதியில் சலுகைகள் தந்தன.

அவர்களின் உயர்ந்த தரக் கட்டுப்பாடுகளை டி.ஐ. மட்டுமே நிறைவேற்ற முடிந்தது, இந்த வளர்ச்சிக் காற்றைப் பயன்படுத்த, 1993–ல், பாரி ஓவர்சீஸ் (Parry Overseas) என்னும் நிறுவனம் பிறந்தது. 1995. பல பிரச்சினைகள் தலை தூக்கின.

விற்பனை ரூ.208 கோடி. நஷ்டம் ரூ.2.8 கோடி. வரலாற்றில் முதன் முதலாக நஷ்டம். வந்த ஆர்டர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களில் சப்ளை செய்யமுடியாமல் தாமதங்கள்.

ஹீரோவும், அட்லஸும் ஏற்றுமதியிலும் டி.ஐ. க்குப் போட்டியாக இருந்தார்கள். ஐரோப்பிய அப்பத்துக்கு மூன்று பூனைகளும் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அந்த அப்பம் போயே போச். இறக்குமதியால், ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் சைக்கிள் தொழில் பாதிக்கப்பட்டது. இறக்குமதி வரிகளை உயர்த்தினார்கள்.

இது போதாதென்று, சீன, தைவான் நாடுகளின் அடிமாட்டு விலை. ஏற்றுமதிக்காகவே தொடங்கப்பட்ட பாரி ஓவர்சீஸ் நிறுவனம் தலைக்கு மேல் நஷ்ட வெள்ளம். 1995 – ல் மூடப்பட்டது. இதற்காக ஆரம்பித்த தனித் தொழிற்சாலைக்கும் பூட்டு. ஏற்றுமதியில் ஒரு கோடி நஷ்டம்.

முருகப்பா குழுமத் தலைவரும், குடும்பத்தில் ஒருவருமான வெள்ளையன் சொன்னார், ``பஞ்சாப் தவிர்த்த வேறு மாநிலங்களிலிருந்து சைக்கிள் தயாரித்து லாபம் பார்க்க முடியாது என்று தோன்றியது. இந்த பிசினஸே வேண்டாமோ என்று நினைக்கத் தொடங்கினோம்.”

கம்பெனியைக் கரையேற்ற வேண்டும். ஃபைனான்ஸ் துறை ஜெனரல் மேனேஜராக இருந்த ராம்குமார் தலையில் கிரீடம் வைக்க முருகப்பா குடும்பத்தினர் முடிவெடுத்தார்கள். ராம்குமார் 38 வயது இள ரத்தம். மகா திறமைசாலி.

காஸ்ட் அக்கவுன்ட்டிங் படித்த பின், அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மென்டில் எம்.பி.ஏ. படித்தவர். அவர் மனதில் முதலில் தயக்கம், குழப்பம். தன் நெருங்கியவர்களிடம் ஆலோசனை கேட்டார். எல்லோரும் சொன்ன ஒருமித்த பதில், “இது நெருப்போடு நடத்தும் விளையாட்டு. வேண்டாம் இந்தப் பதவி.”

ஆனால், ராம்குமார் சவாலை ஏற்க முடிவெடுத்தார். இந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் ஒருமுறை சொன்னார், “கம்பெனியில் அடிமட்டம் முதல் தலைமை வரை வருங்காலம் பற்றிய அவநம்பிக்கை, கேள்விக்குறிகள். ஹீரோ அசைக்க

முடியாத நம்பர் ஆகிவிட்டார்கள். உள்நாட்டு விற்பனையில் தேக்கம். குறிப்பிட்ட நாளில் சப்ளை செய்ய முடியாத உற்பத்தித் தாமதங்கள். ஐரோப்பிய ஏற்றுமதி ஆர்டர்களிலும் சுணக்கம். ஆனால், இந்த இருட்டிலும் சில நம்பிக்கை ஒளிக்கதிர்கள். டி.ஐ. நாடறிந்த பெயர். உயர் தரம். இந்தியா முழுக்க விநியோகஸ்தர்கள். இவற்றை அடித்தளமாக்கி, இழந்த பெருமையை மீட்கவேண்டும்.”

ராம்குமார் தன் தலையில் வைக்கப்பட்ட முள் கிரீடத்தை மலர் மகுடமாக்கினார். எப்படி?

(புதிய பாதை போடுவோம்!)

- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்