‘செய்துவிட்டு வேண்டுமானால் வருத்தப்படுவேனே ஒழிய ஒன்றை செய்யாமல் வருந்தமாட்டேன்’ என்றார் அமெரிக்க நடிகை ‘லூசில் பால்’.
பலருக்கு தொழில் துவங்க வேண்டும் என்று ஆசை இருக்க அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று இறங்குபவர்கள் சிலர் மட்டுமே. அந்த சிலரில் நீங்கள் ஒருவர் எனில் ஸ்டார்ட் அப் துவங்க நீங்கள் ரெடியா என்று தெரிந்துகொள்ள உதவும் ஒரு சில விஷயங்கள் பற்றி பேசுவோம்.
நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை செய்பவர் எனில் வேலைப் பளு, பணி அழுத்தம், முசுடு மேலதிகாரி போன்ற காரணங்களுக்காகப் பணியை ரிசைன் செய்து ஸ்டார்ட் அப் துவங்கப்போகிறேன் என்றால் அது அநியாயத்திற்கு தப்பாட்டம்.
ஸ்டார்ட் அப் துவங்க தேவை அசாத்திய Passion தேவை. உங்கள் பாதாதிகேசமும் அது தீபமாய் பிறந்து தீயாய் வளர்ந்து தீவட்டியாய் பற்றிக்கொண்டு எரிய வேண்டும். மனதை ஒரு பிசினஸ் ஐடியா போட்டு வாட்டு வாட்டென்று வாட்ட வேண்டும். இருக்கும் வேலையின் மீது உள்ள வெறுப்பு மட்டுமே ஸ்டார்ட் அப் துவங்க காரணமாய் இருக்கக் கூடாது.
யாரும் மேற்பார்வையிடாமல் உங்களால் வேலை செய்ய முடியுமா? ’எப்படி செய்வது என்று சொல்லித் தந்தால் அந்த வேலையைப் பிரமாதமாய் செய்வேன்’ என்பவர்கள் ஸ்டார்ட் அப் பக்கம் தலைவைத்து படுக்காமல் இருப்பது நலம்.
இன்னொருவருக்கு கைகட்டி சேவகம் செய்யும் போது அது சரியில்லை, எப்படி செய்வது தெரியவில்லை, இதற்கு பணமில்லை என்று ஆயிரம் குறை சொல்லலாம். ஸ்டார்ட் அப் துவங்குபவர் ஸெல்ஃப் ஸ்டார்டராக இருக்க வேண்டும். எதை செய்வது, எப்படி செய்வது என்று சுய ஊக்கம் சுயம்புவாய் கிளம்புபவர் மட்டுமே ஆடவேண்டிய ஆட்டம் ஸ்டார்ட் அப்.
ஸ்டார்ட் அப் தொடங்க தியாகம் செய்ய தயாராக இரு என்பார்கள். எதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும். அதோடு எல்லாவற்றுக்கும் தயார் செய்துகொண்டு பிறகு தொழிலில் இறங்கு என்பார்கள். இது சாத்தியப்படாதது மட்டுமல்ல, அவசியம் இல்லாதது.
எல்லாவற்றையும் தயார் செய்துகொண்டு தொழில் செய்ய வரமுடியாது. ஸ்டார்ட் அப் என்பது இருட்டு அறையில் முரட்டு குத்து. எங்கிருந்து எது வரும், எப்பொழுது வரும், எவ்வாறு வரும் என்று யாராலும் நூறு சதவீதம் அனுமானிக்க முடியாது.
அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் முடியாது. எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அனைத்தையும் தெரிந்துகொண்டு ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கு பதில் கடல் அலை ஓய காத்திருந்து குளிக்கலாம். எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுதான் தொழிலில் இறங்க வேண்டும் என்பதில்லை.
தொழிலில் வெற்றி பெற்றவர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டு தொழிலில் இறங்கவில்லை. மலையிலிருந்து குதித்து கீழே விழும்போது பறக்கக் கற்றுக்கொண்டார்கள்! ஸ்டார்ட் அப் செய்ய பேஷன் இருந்தால் மட்டும் பத்தாது.
உங்களுக்கு விற்கத் தெரிந்திருக்க வேண்டும். கடை கடையாய் சென்று உங்கள் பொருளை விற்பது பற்றி சொல்லவில்லை. அதுவும் தெரிந்திருக்க வேண்டும். ஸ்டார்ட் அப்தொடங்கப் போவதை விளக்கி உங்கள் குடும்பத்தாரின் சம்மதத்தை சப்போர்ட்டை பெறும் அளவுக்கு அவர்களிடம் பேசி கன்வின்ஸ் செய்ய தெரிய வேண்டும்.
முதலீட்டாளர்களிடம் உங்கள் ஐடியாவை விற்று முதலீடு பெறத் தெரிய வேண்டும். கரடுமுரடான பிசினஸ் பாதையை உங்களோடு தோளோடு தோள் சேர்ந்து பயணிக்கத் தயாராய் இருக்கும் ஊழியர்களை சேர்க்கத் தெரிய வேண்டும்.
விற்பனை திறன் அபரிமிதமாக இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் சமாச்சாரம் ஸ்டார்ட் அப். ஸ்டார்ட் அப் தொடங்க முதலீடு கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஜீவனம் நடத்த தேவையான பணம் இருக்கிறதா உங்களிடம்? ஒரு கம்பெனியில் முழு நேர வேலை செய்கிறேன். வரும் சம்பளத்தில் ஜீவிதம் நடத்தி பார்ட் டைமில் ஸ்டார்ட் அப் துவங்கலாம் என்பது பேச நன்றாக இருக்கும்.
ப்ராக்டிகலாக ஒத்து வராது. ஸ்டார்ட் அப் ஒரு முழு நேர வேலை. நாட்களை மொத்தமாய் தின்று இரவுகளை முழுவதுமாய் குடிக்கும் ராட்சச பசி கொண்ட பகாசுரன். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று இரண்டு பெண்டாட்டிகாரன் கதை அரங்கேறாத அரங்கம் ஸ்டார்ட் அப். அடுத்த மாத செலவைப் பற்றி கவலையோடு கவனிக்க வேண்டிய கலையல்ல ஸ்டார்ட் அப்.
ஏகப்பட்ட ஈகோ உள்ளவரா நீங்கள். வியாபாரத்தில் ஈகோ வேலைக்காகாது. எப்பொழுது எதையும் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எனக்குத் தெரியும் என்ற ஈகோ இருந்தால் அதை யூ கோ என்று முதலில் மனதிலிருந்து துரத்தவும். ஸ்டார்ட் அப் உங்களை தாழ்மைப்படுத்தும் அனுபவம்.
நீங்கள் ஹோட்டல் நடத்துபவராக இருந்தால் கல்லாவில்தான் அமர்வேன் என்று அடம் பிடிக்காமல் டேபிளை துடைக்க தெரிய வேண்டும். தேவைப்பட்டால் பாத்ரூம் அலம்பவும் தயாராய் இருக்க வேண்டும். அய்யே என்பவர்கள் திண்டுக்கல் சென்று பூட்டு வாங்கிக்கொண்டு ஸ்டார்ட் அப்புக்கு பூட்டு போட்டுவிடுவது உசிதம்!
எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று. தம் கட்டி ஓட முடியுமா உங்களால். ஸ்டார்ட் அப் என்பது நூறு மீட்டர் ரேஸ் அல்ல. ஓடிச் சென்று ரிப்பன் தொட்டு மூச்சு வாங்க. அது முடிவே இல்லாத மாரத்தான். மூச்சு உள்ளவரை ஓடவேண்டும். ஸ்டார்ட் அப்புக்கு தொடக்கம் உண்டு. முடிவு என்பதே இல்லை!
- satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago