யு டர்ன் 22: லெகோ – சூ மந்திரக்காளி!

By எஸ்.எல்.வி மூர்த்தி

லெகோ தன் தயாரிப்புகளுக்குக் காப்புரிமை வாங்கியிருந்தார்கள். இந்தக் கவசத்தால், லெகோ தனிக்காட்டு ராஜா. 1988 – இல் இந்தக் காப்புரிமைகளின் காலம் முடிந்தது. பல புதியவர்கள் களத்துக்கு வந்தார்கள். கனடா நாட்டிலிருந்து மெகா பிளாக்ஸ் (Mega Blocks), போலந்திலிருந்து கோபி (Cobi), சீனாவிலிருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பிரிக்ஸ் (Oxford Bricks) லெகோ போலவே தயாரித்தார்கள்.

சிலர் சொந்தக் கற்பனையோடு, பலர் போலிகளை. தரம் சுமார். ஆனால், விலை லெகோவில் பாதி. ஆயிரக் கணக்கான கஸ்டமர்கள் புதியவர்களுக்கு மாறினார்கள். அடுத்து வந்தது இன்னும் பெரிய சவால். பொழுதுபோக்கு உலகில் மாபெரும் மாற்றங்கள். 1980-ன் பிற்பகுதி. ஆப்பிள், ஐ.பி.எம்.

போன்றோரின் மலிவு விலையும், பயன்படுத்தும் எளிமையும் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய வீடுகளின் அத்தியாவசியப் பொருட்களாயின. எங்கும், எதற்கும் கம்ப்யூட்டர் என்னும் புதுயுகம் பிறந்தது. வீடியோகேம்ஸ், அதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே வந்துகொண்டிருந்த கார்ட்டூன் படங்கள் ஆகியவை கம்ப்யூட்டர் திரையில் வந்தன.

லெகோ Bricks கொண்டு பலமணி நேரங்கள் பொறுமையோடு செய்யும் பாலங்கள், கட்டிடங்கள் ஆகியவை அரை மணி நேரத்துக்கும் குறைந்த காலத்தில், மெளஸைச் சொடுக்கினால், கம்ப்யூட்டர் திரையில் பள்ளிச் சிறுவர், சிறுமிகள் லெகோவிலிருந்து கம்ப்யூட்டர் புதுமைகளுக்கு மாறத் தொடங்கினார்கள். லெகோ விற்பனை சரியத் தொடங்கியது.

இளைய தலைமுறையின் பொழுதுபோக்குப் பழக்கங்களில் வந்த அடிப்படை மாற்றத்தை லெகோ கம்பெனி புரிந்துகொள்ளவில்லை. விதவிதமான புதிய மாடல்களை உருவாக்குவதற்கு அதிகப் பணம் ஒதுக்கினார்கள். புதுத் தயாரிப்புகள் ஏராளமாக வந்தன. ஆனால், இவை அத்தனையும் பழைய பாணியில். ஆகவே, செலவுகள் அதிகமானதுதான் பலன். விற்பனை ஒரு அடிகூட முன்னே எடுத்துவைக்கவில்லை.

தொடர் வெற்றிகள் காணும் பாரம்பரிய நிறுவனங்களுக்கு, அந்த வெற்றிகள் எப்போதுமே ஒரு சுமை. புதிய பாதை போடத் தயங்குவார்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டினாலும், திறக்கமாட்டார்கள். லெகோவிலும் அப்படி ஒரு அனுபவம்.

1977. அப்போது வளர்ந்துவந்த இயக்குநரான ஜார்ஜ் லூக்காஸ், ஸ்டார் வார்ஸ் படம் இயக்கத் தொடங்கினார். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு. லூக்காஸ் சம்பளம் ஆறரை மில்லியன் டாலர்கள். (அன்றைய மதிப்பில் 33 கோடி ரூபாய்) விண்வெளியில் நடக்கும் கதை. ஏராளமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ். படம் பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று வார்னர் பிரதர்ஸ் பயந்தார்கள், இயக்குநருக்கு ஒன்றரை மில்லியன் மட்டுமே தருவதாகச் சொன்னார்கள்.

மீதிப் பணத்துக்குப் பதிலாக, ஸ்டார் வார்ஸ் காமிக்ஸ், பொம்மைகள் விற்பனை உரிமையை லூக்காஸ் கேட்டார். படமே ஓடாது, இந்த அழகில் காமிக்ஸும், பொம்மைகளும் எங்கே விற்கும் என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் சம்மதித்தார்கள். ஒரே வருடம். சிரித்தார் லூக்காஸ். முதல் வருடமே 4 கோடி பொம்மைகள் விற்றன. 10 கோடி டாலர்கள் லூக்காஸ் வங்கிக் கணக்கில். அடுத்து, ஸ்டார் வார்ஸ் வரிசையில் 1980, 1983 – ல்

இரண்டு படங்கள். சூப்பர் ஹிட். ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டார் வார்ஸ் பொம்மைகள். சிறுவர், சிறுமியர் மனங்களில் வன்முறை, பகைமை போன்ற எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் எந்த பொம்மையும் தயாரிக்கக்கூடாது என்பது லெகோ கொள்கை. ஆகவே, யுத்தம் என்ற பெயர் கொண்டிருக்கும் ஸ்டார் வார்ஸ் பொம்மைகளிலிருந்து விலகி நின்றார்கள். பணம் சேர்ப்பதைவிட, வருங்கால சந்ததியினருக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக இருக்கவேண்டும் என்னும் உயர்ந்த கொள்கை.

1998. 66 வருட லெகோ வரலாற்றில், முதன் முதலாக நஷ்டம். டென்மார்க்கில் போல் ப்ளோமான் (Poul Ploghmann) என்னும் மேனேஜ்மென்ட் மேதை இருந்தார். பள்ளத்தில் விழுந்த பல கம்பெனிகளைக் கைதூக்கிவிட்ட அனுபவசாலி. ``பிசினஸ் மந்திரவாதி” என்று புகழ் பெற்றவர். இவரை சி.இ.ஓ–வாக 1999-ல் ஜெல்ட் நியமித் தார்.

ப்ளோமான் வந்த நேரம் நல்ல நேரம். ஸ்டார் வார்ஸ் நான்காம் பாகம் வெளியீட்டுக்குத் தயார். லூக்காஸ் ஃபிலிம்ஸ் லெகோவைத் தொடர்பு கொண்டார்கள் – எங்கள் கதாபாத்திரங்களின் பொம்மைகள் தயாரிக்கிறீர்களா என்று. வழக்கம்போல், லெகோ தரப்பிலிருந்து மறுப்பு.

குழந்தைகளின் நண்பன், வழிகாட்டி என்று தங்களுக்கு இருக்கும் பிம்பம் குலைந்துவிடுமோ என்னும் பயம், குழப்பம். ப்ளோமான் இதற்கு ஒரு தீர்வு கண்டார் - “பெற்றோர்களிடம் நாம் ஸ்டார் வார்ஸ் பொம்மைகள் தயாரிக்கலாமா என்று கேட்போம். குழந்தைகளுக்கு எந்தப் பாதகமும் வராது என்று அவர்கள் நினைத்தால் தொடருவோம். இல்லாவிட்டால், கைவிடுவோம்.” எல்லோரும் சம்மதித்தார்கள்.

நடந்தது கருத்துக் கணிப்பு. பெரும்பான்மையான பெற்றோர்களின் தீர்ப்பு – ஸ்டார் வார்ஸ் நல்ல சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் யுத்தம். இதில் நல்லவர்கள் ஜெயிக்கிறார்கள். ஆகவே, ஸ்டார் வார்ஸ் இளைய தலைமுறைக்கு நல்ல பாடம் கற்பிக்கிறது.

பெற்றோர்களின் ஒருமித்த ஆதரவோடு லெகோ அறிமுகம் செய்த ஸ்டார் வார்ஸ் பொம்மைகள் விற்பனையில் சாதனை படைத்தன. இதே பாணி

யில், வால்ட் டிஸ்னி படைப்புகள், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்கள் போன்ற பொம்மைகளையும் லெகோ அறிமுகம் செய்தார்கள். தத்தளித்துக்

கொண்டிருந்த கம்பெனிக்குக் கிடைத்தது ஆக்சிஜன். லெகோ போன்ற கம்பெனிகளின் முக்கிய பலம் அவர்களின் கற்பனைத்திறன் என்பது ப்ளோ மானின் உறுதியான நம்பிக்கை.

மனோதத்துவ மேதைகளின் ஆராய்ச்சிப்படி, மனிதர்களின் சிந்தனைகள் அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரப் பின்புலத் தாக்கங்களின் அடிப்படையில் அமையும், ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பில் தனித்துவமானவன்.

ஆனால், ஒரே நாட்டவரின் எண்ண ஓட்டங்களில், அடிப்படையாக ஒரு ஒற்றுமை இழையோடும். லெகோவின் வடிவமைப்பாளர்கள் அத்தனை பேரும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதனால், அவர்கள் கற்பனை, ``டென்மார்க் சிந்தனை” என்னும் வேலியைத் தாண்டவில்லை. லெகோ விற்பனை செய்வது உலகக் குழந்தைகளுக்காக. ஆகவே, வடிவமைப்பிலும், உலகளாவிய கற்பனை இருக்கவேண்டுமென்று ப்ளோமான் முடிவு செய்தார்.

அனைவரும் எதிர்த்த போதும், தன் முயற்சிகளைத் தொடர்ந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வடிவமைப்பாளர்கள் மையங்கள் தொடங்கினார். பல்வேறு கலாசாரத் திறமைசாலிகளின் சங்கமம்! வந்தன ஆச்சரியமான படைப்புகள்.

அமெரிக்கக் குழந்தைகள் எலெக்ட்ரானிக் பொம்மைகளுக்கு மாறிக்கொண்டிருந்தார்கள். ப்ளோமானின் லெகோ Bricks பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொம்மைகள் அறிமுகம் செய்தார். லெகோ எக்ஸ்ப்ளோர் (Lego Explore) என்னும் பிரான்டில் வந்த இந்த பொம்மைகள் கம்பெனியின் அமெரிக்க மார்க்கெட்டை மறுபடியும் பிடித்தன. ஜப்பானிலும், தென் கொரியாவிலும், பெற்றோர்களுக்குப் பொம்மைகள் வெறும் விளையாட்டு சாதனங்களல்ல, அறிவு வளர்க்கும் கருவிகள்.

ப்ளோமான், தென்கொரியாவின், லேர்னிங் டூல்ஸ் (Learning Tools) என்னும் கம்பெனியோடு கை கோர்த்தார். கணிதம், அறிவியல், பொறியியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் ஆகியன கற்பிக்கும் லெகோ மாடல்களைத் தயாரித்தார். தென் கொரியாவிலும், ஜப்பானிலும் 20 மையங்கள் திறந்து, குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பயிற்சி தந்தார்.

உலகமே கம்ப்யூட்டர் மயமாகிக்கொண்டிருக்கிறது, லெகோவும் அந்தப் பாதையில் பயணித்தால் மட்டுமே எதிர்காலம் உண்டு என்று ப்ளோமான் சரியாகக் கணித்தார். பிரம்மாண்டக் கம்ப்யூட்

டர்கள், சாஃப்ட்வேர் வல்லுநர்கள் என டிஜிட்டல் லெகோ Bricks வடிவமைப்பு ஆரம்பமானது. ஆரவார வரவேற்பு, அடுத்த கட்டமாக, கஸ்டமர்களே கம்ப்யூட்டரில் தங்கள் கற்பனை மாடல்களை உருவாக்கும் வசதி வந்தது. பொம்மைகளை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கிருக்கிறது என்னும் திருப்தி கஸ்டமர்களுக்கு வந்தது. அவர்களுக்கு லெகோவுடனிருந்த உறவுச்சங்கிலி இறுகியது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பல உருவப் பொம்மைகளுக்குக் குழந்தைகளிடையே ஹீரோ மதிப்பு. பல பொம்மைத் தயாரிப்பாளர்கள் இந்தப் பொம்மைகளைத் தயாரித்து லட்சக்கணக்கில் விற்றார்கள். லெகோவும் இந்தக் காற்றில் தூற்றிக்கொள்ள முடிவெடுத்தார்கள். ஆனால், காப்பியடித்தல்ல, தங்கள் தனி ஸ்டைலில்.

மற்றவர்கள் செய்வதைத் தலைகீழாய். பிறர் தொலைக்காட்சி நிகழ்ச்சி உருவங்களைப் பொம்மைகளாக்கினார்கள். லெகோ, காலிடோர் (Galidor) என்னும் புதிய பொம்மையை வடிவமைத்தார்கள். பிரபல ஹாலிவுட் இயக்குநர் தாமஸ் லின்ச் (Thomas Lynch) என்பவரிடம் தொலைக்காட்சி சீரியல் தயாரிக்கச் சொல்லி, ஒளிபரப்பு செய்தார்கள்.

லெகோ தலைமையகம் இருந்த பில்லுண்ட் கிராமத்தில் 1968 முதல், லெகோலாண்ட் (Legoland) என்னும் பெரிய பொழுதுபோக்கு மையம் இருந்தது. பிரம்மாண்ட வடிவங்கள் முதல் குட்டி மாடல்கள் வரை சகல லெகோக்களும் இங்கே உண்டு. நாள் முழுக்கக் குழந்தைகள் விளையாடலாம். வருடம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை.

1999 – ல், லண்டன் அருகே ப்ளோமான் இரண்டாம் மையம் திறந்தார். அடுத்த மூன்றுவருடங்களில், அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் மையங்கள்.

ப்ளோமான், லெகோவின் 15 சொந்த விற்பனைக் கடைகள் திறந்தார். அடுத்த இரண்டு வருடங்களில் 300 லெகோ ஸ்டோர்ஸ் திறக்கும் திட்டம். 2002. லெகோ லாபம். தான் பொறுப்பேற்ற நான்கே வருடங்களில் ``மந்திரவாதி” , ப்ளோமான் தன் சித்துவேலைகள் அத்தனையையும் களமிறக்கிவிட்டார். சொன்னார்,``லெகோவுக்கு இது நல்ல வருடம். அடுத்த வருடமும் இந்த வளர்ச்சி தொடரும்.

பிறந்தது 2003. பல நூறு சிவமணிகளின் ஒருங்கிணைத்த அதிரடி டிரம்ஸ். அடுத்த நொடி நிசப்தம்…..என்ன நடக்கப்போகிறதோ என்று எகிறும் பல்லாயிரம் லப் டப்கள். ப்ளோமான் கழற்றுகிறார். தன் மாஜிக் தொப்பியை. சுழற்றுகிறார் கையில் இருக்கும் மந்திரக் கோலை. தொப்பிக்குள் கை விடுகிறார். வண்ண வண்ணப்பூக்கள் வரும் என எல்லோர் எதிர்பார்ப்பு.

வந்தவை, ஸ்ஸ்ஸ்ஸ்… சீறும் கருநாகங்கள்!

புதிய பாதை போடுவோம்!

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்