‘ஸ்டார்ட் அப் துவங்கலாம் என்றிருக்கிறேன், நல்ல ஐடியா கிடைக்கமாட்டேங்குது’ என்பவரா நீங்கள். சாரி, குதிரைக்கு முன் வண்டியை கட்டுகிறீர்கள். வண்டி நகராது. குதிரையே சிரிக்கும்! மணமகள் தேவை போல் ஸ்டார்ட் அப் ஐடியா தேவை என்று விளம்பரமெல்லாம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.
வாழ்க்கையில் நீங்களும் உங்களைச் சுற்றியிருப்பவர்களும் சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள், அதற்கு தோன்றும் எளிதான தீர்வுகள், அதுதான் ஸ்டார்ட் அப் ஐடியா. உங்களிடமிருந்து தள்ளி நின்று உங்களைப் பாருங்கள். உங்கள் பிரச்சினையும் தெரியும், அதற்கான தீர்வும் புரியும். அவசரத்துக்கு வெளியே செல்ல டாக்ஸி ஆட்டோபிடிப்பது பலருக்கு பிரச்சினையாகயிருக்க, அவர்களிடம் இருந்த ஸமார்ட்
ஃபோனையும் கூகுள் மேப்பையும் டாக்ஸி, ஆட்டோக்களோடு ஆப் மூலம் இணைத்து வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து வாசலில் வந்து நிற்க வைத்த ‘ஓலா’வின் ஐடியாவை அடுத்த முறை புக் செய்யும்போது நினையுங்கள்.
நான் சொல்வது புரியும்! நாம் சந்திக்கும் பிரச்சினைகளைக் கடைசிவரை பிரச்சினை என்றே நினைத்து கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அல்லது இதற்கெல்லாம் தீர்வு இல்லை என்று விட்டேத்தியாய் விடுகிறோம். அதனால்தான் தீர்வு நமக்கு தெரிவதில்லை.
‘நம்பிக்கையற்றவனுக்கு வாய்ப்புகளில் இருக்கும் பிரச்சினைமட்டுமே தெரிகிறது, நம்பிக்கையுள்ள வனுக்குத்தான் பிரச்சினையில் உள்ள வாய்ப்பு புரிகிறது’ என்றார் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’. ஸ்டார்ட் அப் ஐடியாவை நீங்கள் எங்கும் தேட வேண்டாம். கண், காது, மனம் மூன்றையும் திறந்து வையுங்கள். அதுவே உங்களைத் தேடி வரும். வரும்போது கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு புதிய தொழில் துவங்குங்கள்.
`சிறந்த ஸ்டார்ட் அப் ஐடியாக்களில் மூன்று தன்மைகள் இருப்பதை காண்கிறேன்’ என்கிறார் `பால் கிரஹாம்’. தொழில் தொடங்கியவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்பு தேவைப்பட்டிருக்கும். அவர்களே அதை தயாரிக்க முடிவு செய்திருப்பார்கள். ஆனால், அவர்களுடைய கண்டுபிடிப்பின் மதிப்பு மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்
திருக்காது. ‘ஆப்பிள்’, ‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘யாஹூ’, ‘ஃபேஸ்புக்’ என்று பல வெற்றி ஸ்டார்ட் அப்ஸ்கள் தொடங்கியது இப்படித்தான் என்று பட்டியலிடுகிறார். வரும் வருடமும் யாராவது ஒருவர் உங்களுக்கு தேவையான ஒரு புதிய பொருளை அல்லது சேவையை கண்டுபிடித்து விற்கத்தான் போகிறார்.
நீங்களும் அதை வாங்கத்தான் போகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் வாங்கும் போது ‘சே, இந்த ஐடியா எப்படி எனக்குத் தோனாமாப் போச்சு’ என்று அலுத்துக்கொள்ளத்தான் போகிறீர்கள். ஏனெனில் பல நேரங்களில் இது நம் பிரச்சினை இல்லையே என்று இருந்துவிடுவோம். நம்முடைய பிரச்
சினையோ, மற்றவர் பிரச்சினையோ, நாம் தொடங்கும் தொழில் ஒரு பிரச்சினையை தீர்த்துவைப்பதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதும். அதாவது உங்கள் ஸ்டார்ட் அப் ஐடியா ஒரு பிரச்சினைக்கு தீர்வாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் பொருளுக்கு மார்க்கெட் கிடைக்கும். யாருக்கும் இல்லாத பிரச்சினையை தீர்க்க கிளம்புவதால்தான் பல ஸ்டார்ட் அப் தொழில்கள் தோல்வியடைகின்றன.
‘ஒரு ஐடியாவின் மதிப்பு அதன் உபயோகத்தில் இருக்கிறது’ என்றார் ‘தாமஸ் ஆல்வா எடிசன்’. இது தெரிந்தும் ஏன் எதற்கும் தீர்வு தராத தொழில்களைத் தொடங்குகிறார்கள்? ஏனெனில் அவர்கள் ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்று
முடிவு செய்து அதற்காக மெனெக்கெட்டு ஐடியா தேடுகிறார்கள். அதனாலேயே கிடைக்கும் ஐடியாவைக் கொண்டு அல்லது இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு ஸ்டார்ட் அப் துவங்குகிறார்கள்.
ஆளே இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார்கள். கடைசியில் விற்க முடியாமல் ஷட்டரை மூடிவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். ஸ்டார்ட் அப் தொடங்க ஒரு ஐடியா கிடைத்தால் உங்களை நீங்களே சில கேள்விகள் கேளுங்கள். இந்த புதிய பொருள் யாருக்கு வேண்டும்? யாருக்கு
இதன் பயன் பெரிதாகத் தெரியும்? நீங்கள்அளிப்பது சுமாரான தீர்வாய் இருந்தாலும் அதை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா? எல்லா கேள்விகளுக்கும் விடை ‘இல்லை’ என்றால் அது ஸ்டார்ட் அப் ஐடியாவே இல்லை.
முதல் காரியமாய் அந்த ஐடியாவை தலையைச் சுற்றி தூர எறியுங்கள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்று விடை கிடைத்து தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் தொழில்கள் மட்டும்தான் வெற்றியை பெற்றுள்ளன!
வெற்றி பெற்ற தொழில் நிறுவனர்கள் தங்கள் மனதை ஸ்டார்ட் அப் ஐடியாவிற்கு தயாராய் வைத்திருந்தார்கள். மண் தயாராய் இருந்தால் மட்டுமே அதில் விழும் விதை விருட்சமாய் வளரும். ஸ்டார்ட் அப் ஐடியாவை ரூம் போட்டு யோசிக்காதீர்கள். உங்களைச் சுற்றிப் பாருங்கள்.
தீர்வுகளைத் தேடி பிரச்சினைகள் பல காத்திருப்பதைப் பார்ப்பீர்கள். துணி தோய்த்து அயர்ன் செய்ய நேரமில்லாத போது ‘யாராவது இந்த கர்மத்தை எடுத்துட்டு போய் நல்லா தோய்ச்சு அயர்ன் பண்ணி தந்தா எவ்வளவு சவுகரியமா
இருக்கும்’ என்று அலுத்துக்கொண்டது ஞாபகம் இருக்கிறதா? சரியான App ஒன்றை தயார் செய்து வாடிக்கையாளரை அதன் மூலம் ஆர்டர் செய்ய வைத்து நீங்களே அதை ஒரு தொழிலாய் செய்தால் அடுத்த ‘ஓலா’ நீங்கள் தானே!
‘இனிமே தானா இவனுக்கு எவளாவது பிறந்து வரப் போறா? எங்கேயோ பிறந்திருக்கா, அவளை தேடிப் பிடிக்கனும்’ நமக்கு பெண் தேடும்போது வீட்டிலுள்ளவர்கள் யாராவது இதைச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதேபோல்தான் உங்களை அடுத்த ‘பில் கேட்ஸ்’ ஆக்கும் ஸ்டார்ட் அப் ஐடியா உங்களை சுற்றிதான் எங்கோ இருக்கிறது. தேடுங்கள். கிடைப்பாள்!
- satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago