மறுவிற்பனை போன் சந்தையாகும் இந்தியா

By நீரை மகேந்திரன்

ந்தியாவின் நுகர்பொருள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கேற்ப சர்வதேச உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சந்தையை இந்தியாவில் உறுதி செய்யும் முயற்சிகளில் உள்ளன. குறிப்பாக தற்போது நுகர்பொருள் சந்தையில் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியா, 2025-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ரூ. 4 லட்சம் கோடி சந்தையைக் கொண்டிருக்கும். இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்துவதற்கு ஏற்ப சர்வதேச பிராண்டுகள் பலவும் இந்தியாவில் உற்பத்தி ஆலை உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

புத்தம் புதிய பொருட்களுக்கான சந்தையை போலவே பயன்படுத்திய இரண்டாம் நிலை பொருட்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட (Refurbished) பொருட்களுக்கான சந்தையும் இணையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது தனிச் சந்தையாகவே உள்ளது என்றாலும் இந்தியாவில் தற்போதுதான் தனி சந்தையாக முறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த சந்தை 2018-ம் ஆண்டில் ஒரு முறைக்குள் வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரண்டாம் நிலை சந்தையை பயன்படுத்துவதிலும் நிறுவனங்களிடையே போட்டி உருவாக உள்ளது.

சந்தை மதிப்பு

இந்த துறையில் ஏற்கெனவே வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல மின்னணு பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஹோம் தியேட்டர் போன்ற சாதனங்கள் விற்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அளவிலான நேரடி சந்தையை தவிர்த்து ஆன்லைன் நிறுவனங்களும் இதில் தற்போது இறங்கியுள்ளன. அமேசான் நிறுவனம் பிரத்யேகமாக விற்பனை செய்து வருகிறது. பல பிராண்டுகளை இதில் விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் நிறுவனங்களும் இந்த முயற்சிகளில் உள்ளன. தவிர ஓவர்கார்ட், கிரீன்டஸ்ட், டோகோபோகோ போன்ற ஆன்லைன் நிறுவனங்களும் ஏற்கெனவே பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

செல்போன் சந்தை

மின்னணு வீட்டு உபயோகப் பொருட்களைத் தாண்டி தற்போது இரண்டாம் நிலை மொபைல் போன் சந்தை சர்வதேச நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் மறுசீரமைப்பு போன் சந்தை 300 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் 1400 கோடி டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 7 கோடி மறு சுழற்சி போன்கள் இந்தியாவில் புழங்கினாலும் இதுவரை முறைப்படுத்தப்படவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். இதன் ஆண்டு வளர்ச்சி 35 சதவீதமாகவும் உள்ளது.

இதற்கான சந்தையில், தனிநபர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றன. செயலி மூலம் மருத்துவச் சேவைகளை வழங்கும் சில மருத்துவமனைகள் பழைய போன்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. தவிர மெட்ரோ நகரங்களிலும், ராஜஸ்தான், குஜராத், உபி, மத்திய பிரதேசம் மஹாராஷ்டிரா மாநிலங்களில் அதிக சந்தை வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஆப்பிள்

இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் சத்தமில்லாமல் தனது மறுவிற்பனை போனுக்கான சந்தையை இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க அரசிடமிருந்து பல சலுகைகளை எதிர்பார்க்கிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்பட்சத்தில் அதுபோல பல நிறுவனங்களுக்கும் சலுகைகளை அளிப்பதில் முன்னுதாரமாகிவிடும் என்பதால் தற்போது வரை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தனது மறுசீரமைக்கப்பட்ட ஐபோன்களை இந்தியாவில் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக இன்கிராம் மைக்ரோ, ஹெச்சிஎல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

செயலிழந்த போன்களின் உதிரிபாகங்களை மாற்றி, புதியதுபோல உருவாக்கித் தருவதை புதுப்பிக்கப்பட்ட போன்கள் என்கிற முறையில் உலகம் முழுவதும் இந்த நிறுவனங்கள் வழியாக ஆப்பிள் நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து பழைய போன்களை இறக்குமதி செய்வதை இந்தியா தடை செய்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே பழைய ஆப்பிள் போன்களை வாங்கி, அவற்றை மறுசீரமைப்பு செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்கிராம் மைக்ரோ நிறுவனம் ஐபோன்களை மறுசீரமைப்பு செய்து தனது பிராண்டின் கீழ் விற்பனை செய்யும்.

விலை குறைவு

இந்த போன்கள் புதியவற்றை விட விலை குறைவாக இருக்கும். குறிப்பிட்ட காலத்துக்கு வாரண்டியும் அளிக்கப்படும். இந்த நிறுவனங்கள் ஆப்பிள் போன்களை மட்டுமல்ல, சாம்சங் போன்ற பிராண்டுகளின் மறுசீரமைப்பு போன்களையும் விற்பனை செய்து வருகின்றன. இவர்கள் இந்தியா முழுவதும் உள்ள செல்போன் விற்பனை முகவர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி இதற்கான சந்தையை உருவாக்க உள்ளனர். இந்த துறையில் ஏற்கனவே உள்ள ரெடிங்டன் மற்றும் போன்அப் நிறுவனங்களும் இந்தியாவில் பிரான்சைஸி அடிப்படையில் தொழிலைத் தொடங்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மறுசீரமைக்கப்பட்ட போன்களுக்கு என்றே விற்பனையகங்களை திறக்க உள்ளனர்.

ஆனால் மறு சுழற்சி போன்களை பொறுத்தவரையில் எல்லா பிராண்டுகளும் மறுவிற்பனைக்கு வரவில்லை. உயர் ரக பிராண்ட்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளன. இந்த வகையில் ஏற்கெனவே சாம்சங், ஜியோமி, லீஇகோ, மோட்டோரோலோ, ஒன்பிளஸ் போன்கள் விற்பனையாகின்றன. இவற்றின் விலை ஒப்பீட்டளவில் பழைய போன்களின் விலையில் இருந்து 40 முதல் 60 சதவீதம் வரை குறைவாக உள்ளன. புதிய பொருட்களுக்கு அளிக்கப்படும் வாரண்டி சலுகை போல, இந்த போன்களுக்கும் குறிப்பிட்ட அளவு சலுகை கிடைக்கும்.

இ-வேஸ்ட்

ஆனால் வெளிநாடுகளில் இருந்து பழைய போன்களை இறக்குமதி செய்வதை, மின்னணு கழிவுகள் என்கிற வகையில் அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. அதனால்தான் ஆப்பிள் உள்ளிட்ட பிராண்டுகளின் பழைய போன்கள் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை.

போக்குவரத்து டேமேஜ், தயாரிப்பு குளறுபடி போன்ற காரணங்களால் திரும்ப வரும் பொருட்களை சரி செய்து திரும்ப விற்பனை செய்தால் மட்டுமே இந்த சந்தை வெற்றிபெறும் என்கின்றனர் இந்த துறையினர். சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் சிறு சிறு குறைபாடு, கலர் சரியில்லை போன்றவற்றால் திருப்பம் செய்வார்கள். அவற்றை சரிசெய்துதான் இதுவரை விற்பனை செய்து வருகிறோம் என்கின்றனர். தவிர மிகவும் மோசமான இ-வேஸ்டுகளை மறுசீரமைக்கவும் முடியாது என்று கூறுகின்றனர்.

மறுசீரமைப்பு போன் சந்தை சூடுபிடித்தால் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். ஆனால் தங்களுக்கு பிடித்தமான பிராண்ட் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்துவதும் பலரது விருப்பமாக உள்ளது. தவிர போன் ரிப்பேர் ஆகிவிட்டால் இ-வேஸ்ட் என்பதை தாண்டி மறு விற்பனைக்கும் இதன் மூலம் வாய்ப்பு உருவாகிறது. சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையே இந்த துறையின் மூலதனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்