மிகப் பெரிய சந்தையைக் கொண்ட இந்தியாவுக்கு அந் நிய முதலீடுகள் அதிகம் வரு வது புதிய விஷயமில்லை. ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினை, தொழில் தொடங்க அனுமதி பெறுவதில் சிக்கல், ஊழல், கடுமையான போட்டி என பல விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவதில்தான் திறமை இருக்கிறது. எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனாலும் எல்லோருக்கும் வெற்றி சாத்தியமாவதில்லை. மிகப் பெரிய அந்நிய முதலீடு என்ற பெருமையுடன் தொடங்கப்பட்ட என்ரான் இந்தியா நிறுவனத்தின் தபோல் பவர் கம்பெனி ஊழல், சுற்றுச்சூழல் சர்ச்சையில் சிக்கி மூடப்பட்டது. இப்போது பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தும் கடுமையான போட்டி காரணமாக தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.
ஏர்செல் நிறுவனம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, ஏகப்பட்ட கோடிகளை முதலீடு செய்த முதலாளியையும் கண்ணீர் விட வைத்துவிட்டது. கொஞ்சம் நஞ்சமல்ல. 700 கோடி டாலர். சுமார் 45,500 கோடி ரூபாய் முதலீடு. 12 ஆண்டு உழைப்பு. 8000 ஊழியர்களின் வியர்வை.. அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.
அனந்த கிருஷ்ணன். ஆசியாவின் 6-வது மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர். இலங்கை பூர்வீகம். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்தான். ஹார்வர்டு பல்கலையில் படித்தவர். அவரின் மேக்ஸிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மலேசியாவில் சக்கைப் போடு போடுகிறது. உஷாகா டெகாஸ் நிறுவனம் மூலம் லாட்டரி, டிவி, மின் உற்பத்தி என பல துறைகளில் கால் பதித்து வெற்றி பெற்றவர். ஆனாலும் ஏர்செல் -மேக்ஸிஸ் பிரச்சினை வெடித்த பிறகுதான் இந்த அனந்த கிருஷ்ணன் யார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.
2006-ம் ஆண்டில் சிவசங்கரனிடம் இருந்து ஏர்செல் நிறுவனத்தை வாங்கினார் அனந்த கிருஷ்னன். 80 கோடி டாலர்தான் அப்போது அதன் விலை. அதற்கு முன் ஆர்பிஜி செல்லுலார் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தை சிவசங்கரன் வாங்கி, ஏர்செல் என பெயர் மாற்றி நடத்தி வந்தார். இப்போதுதான் எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. அப்போது 10 சதவீதம் பேரிடம்தான் இருந்தது.
இன்கமிங் காலுக்கு 7 ரூபாயும் அவுட்கோயிங் காலுக்கு 14 ரூபாயும் வசூலித்த காலம் அது. அந்த வெறுப்பில் இந்தியர்கள்தான் மிஸ்டு காலை கண்டுபிடித்ததாகவும் சொல்வார்கள். ஆனாலும் செல்போன் வசதி இல்லாத மீதமுள்ள 90 சதவீதம் பேரை மனதில் கொண்டு வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதை அறிந்தார் அனந்தகிருஷ்ணன்.
செல்போன் துறையில் மலேசியாவில் பெற்ற வெற்றி இவருக்கு தெம்பூட்டியது. இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தை மிகப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார். மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முதலில் 340 கோடி டாலரை முதலீடு செய்தது. அடுத்தடுத்து 120 கோடி டாலர் பங்குகளிலும் 160 கோடி டாலர் மதிப்புள்ள முன்னுரிமைப் பங்குகளிலும் முதலீடு செய்தது. இப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் அனந்த கிருஷ்ணன் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்த மொத்த தொகை 700 கோடி டாலர்.
அனந்த கிருஷ்ணன் எதிர்பார்த்ததைப் போல, இந்தியாவில் செல்போன் துறை வளர்ச்சி அடைந்தது. பல வெளிநாட்டு நிறுவனங்களும் களத்தில் குதித்தன. ஒரு கட்டத்தில் மக்கள்தொகையை விடவும் அதிக எண்ணிக்கையில் செல்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். காரணம் அலுவலக பயன்பாட்டுக்கு ஒன்று.. சொந்த பயன்பாட்டுக்கு ஒன்று என பலரும் இரண்டு நம்பர்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததுதான். செல்போன் இல்லாத ஆளே இல்லை என்ற அளவுக்கு அதன் வளர்ச்சி இருந்தது. ஆனால் அதுவே, பின்னாளில் பிரச்சினையாகவும் மாறியது.
krish தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன்மலேசியா போன்ற சிறிய நாடுகளில் போட்டி குறைவு. இந்தியா அப்படி அல்ல. கடுமையான போட்டி நிறைந்த நாடு. அதிலும் அடுத்தடுத்து பல நிறுவனங்கள் டெலிகாம் துறையில் குதித்தன. கட்டணம் குறைந்தது. ஒரு நேரத்தில் உலகிலேயே மிகக் குறைந்த அழைப்பு கட்டணம் உள்ள நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது. அந்த அளவுக்கு போட்டி. வாடிக்கையார் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் கட்டணக் குறைப்பால் வருமானம் குறைந்தது. இருந்தாலும் சமாளித்தது ஏர்செல்.
ஆனால் 2016-ல் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு பிரச்சினை இறுக்கியது. காரணம் ஜியோ. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்களால் டெலிகாம் துறையே ஆட்டம் கண்டது. பெரிய நிறுவனங்களின் வரிசையில் இருந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்களே ஆடிப்போயின. அடிக்கிற காத்துல அம்மியே பறக்கும்போது, ஏர்செல் எம்மாத்திரம். இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு சேவையைத் தொடர்ந்தது. ஆனாலும் வலிக்காத மாதிரியே எத்தனை நாளைக்குத்தான் நடிக்க முடியும்?
வருமானம் பாதிப்பு, வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஏர்செல்லை இணைக்க முடிவு செய்தார் அனந்த கிருஷ்ணன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. காரணம் சிவசங்கரன். தன்னை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வைத்ததாக, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மீது சிபிஐ-யில் அவர் கொடுத்த புகாரால், வழக்கு விசாரணையில் இருக்கும்போது, பங்குகளை விற்பனை செய்ய முடியாது என தடை விதித்தது நீதிமன்றம். கடந்த ஆண்டு அக்டோபரில் கடைசியாக இருந்த ஒரு வாய்ப்பும் கைவிட்டுப் போனது.
கடைசியில் ஏகப்பட்ட நஷ்டம், சட்ட ரீதியான சிக்கல்கள், தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியாத அளவுக்கு கடன்கள் என பல காரணங்களால் கடந்த வாரம் திவால் நோட்டீஸ் கொடுத்து விட்டது ஏர்செல்.
ஒரே தொழில். டெலிகாம். அதே தொழிலதிபர். அனந்த கிருஷ்னன். நாடுகள்தான் வேறு. மலேசியாவில் பெற்ற வெற்றியை இந்தியாவில் அவரால் பெற முடியவில்லை. அதற்கு காரணம் தொழில் போட்டி. இந்தியாவில் தொழில் தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாமல் நஷ்டம் காரணமாக மூடப்பட்ட பெரிய நிறுவனங்கள் மிகக் குறைவுதான். அன்று என்ரான் நிறுவனம். இன்று ஏர்செல்.
அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனம் என்ரான் கார்ப்பரேஷன். அதன் முதல் தோல்வி இந்தியாவில்தான். 1992-ல் தபோல் பவர் கார்ப்பரேஷன் என்ற பெயரில் 300 கோடி டாலர் முதலீட்டில் மகாராஷ்டிராவில் மின்னுற்பத்தி திட்டத்தை தொடங்கியது. எரிவாயு மூலம் மின்னுற்பத்தி செய்வதுதான் திட்டம். இந்திய வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய முதல் அந்நிய முதலீடு. தபோல் கிராமத்தில் ஜெனரல் எலக்ட்ரிக், பெக்டெல் நிறுவனங்களுடன் இணைந்து என்ரான் இந் நிறுவனத்தை தொடங்கியது.
dabhol தபோல் மின்னுற்பத்தி நிலையம் (கோப்புப் படம்)rightஆரம்பமே சரியில்லை. திட்டச் செலவை வேண்டுமென்றே அதிகமாகக் காட்டியதாகவும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் என்ரான் மீது புகார் எழுந்தது. நிலத்தை கையகப்படுத்தியதில் முறைகேடு, நீர் வளத்தை சுரண்டியது, எதிர்த்த கிராம மக்களை போலீஸ் உதவியுடன் அடித்து நொறுக்கியது என பல புகார்கள். 2001-ல் மகாராஷ்ட்ரா அரசு, மின்சாரத்தை வாங்கிக் கொள்வதற்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காரணம் அதிக விலை.
1999-ல் தபோல் இந்தியா உற்பத்தியை துவக்கியது. மகராஷ்ட்ரா அரசு ரூ.1607 கோடிக்கு மின்சாரத்தை வாங்கியது. ஆனால் இதே அளவு மின்சாரத்தை உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து வாங்கினால் ரூ.736 கோடிதான் செலவாகும். ஏறக்குறைய 1000 கோடி ரூபாய் அதிகம். 1998-ல் லாபத்துடன் இயங்கிய மகாராஷ்ட்ரா மின்வாரியம் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.1681 கோடி நஷ்டம் அடைந்தது.
இதனால் தபோல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மாநில அரசு ரத்து செய்துவிட்டது. இருந்த ஒரே வாடிக்கையாளரே மாநில அரசுதான். மொத்தம் உற்பத்தி செய்யும் 2,550 மெகாவாட் மின்சாரத்தையும் அதுவே வாங்கிக் கொள்வதாகத்தான் ஒப்பந்தம். அதுவே விலகிக் கொண்டால் யாருக்கு மின்சாரத்தை சப்ளை செய்வது? அதோடு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பும் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்காவின் தாய் நிறுவனமான என்ரான் நிதி நெருக்கடியில் சிக்கியது. 2001 ஜூன் மாதத்தில் தபோல் நிறுவனத்தின் 90 சதவீத பணிகள் முடிந்த நேரம் அது. நவம்பரில் தாய் நிறுவனம் திவால் ஆனது. அதோடு இந்தியாவில் மிகப் பெரிய மின்னுற்பத்தி நிறுவனமாக மாறும் தபோல் நிறுவனத்தின் கனவும் சிதைந்தது.
டெயில் பீஸ்: என்டிபிசி, கெயில் நிறுவனங்கள் இந்நிறுவனத்தை சீரமைத்த பிறகுரயில்வேத் துறைக்கு 330 மெகாவாட் மின்சாரத்தை தபோல் நிறுவனம் உற்பத்தி செய்து தருகிறது. மொத்த உற்பத்தி திறனை இது எட்டுமா என்பதற்கு காலம்தான் பதிலாக இருக்கும். அதேபோல ஏர் செல் நிறுவனம் மீண்டும் செயல்படுவதும் காலத்தின் கையில்தான் உள்ளது.
-ravindran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago