`மரியாதை சம்பாதிக்கப்படுவது, நேர்மை பாராட்டப்படுவது, நம்பிக்கை சிறுகச் சிறுக வளர்க்கப்படுவது, விசுவாசமோ, விசுவாசத்தால் மட்டுமே பெறக் கூடியது' என்பது சாணக்கியர் நீதி.
உண்மை தானே? மரியாதையைக் கேட்டா வாங்க முடியும்? அதைக் கேட்டு வாங்கும் நிலை வந்தால் அது அசிங்கம் தானே? நேர்மையோ, அழகு போல இயற்கையில் அமைவது அல்ல.ஒருவர் தெரிந்து , தேர்ந்து எடுக்கும் கொள்கை அது.எனவே அரிதானது, போற்றப்பட வேண்டியது.
நம்பிக்கை என்பது யார் பாலும் உடனே வருவதில்லை, வரக்கூடாது.தொடர்ந்து அவர் நடந்து கொள்வதைப் பொறுத்தது அல்லவா அது? அதனால் தானே நம்பிக்கை ஊட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டது இது. அவர் கோவையில் ஒரு வங்கியின் கோட்ட மேலாளராக இருந்த பொழுது ஒரு வாடிக்கையாளர், தன் மகன் திருமணத்திற்கு சேலம் வரும்படி அழைத்து இருக்கிறார். நண்பருக்கு அடிக்கடி இந்த மாதிரி பல அழைப்புகள் வரும். எனவே வர முயற்சிப்பதாகச் சொல்லி வந்தவரை அனுப்பி விட்டார்.
ஆனால் அந்த வாடிக்கையாளரோ , கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர் மீண்டும் நண்பரைத் தொடர்பு கொண்டு, தங்குவதற்கு என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டாராம். `நான் வரும்பட்சத்தில் நானே அதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அதை மறுத்து விட்ட நண்பர், தனது அலுவலகத்தில் அந்த வாடிக்கையாளரைப் பற்றி விசாரித்து இருக்கிறார். அவருக்குக் கடன் ஒன்றும் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்தது.
நண்பருக்குச் சின்னக் குழப்பம். `நாம் அந்த ஆளை, அவர் கல்யாணப் பத்திரிகை கொடுக்கும் பொழுதுதான் முதன் முதலில் பார்த்தோம்.நம்மை இப்படி வலியுறுத்துகிறார் என்றால், பின்னால் எதுவும் உதவி எதிர்பார்க்கிறார் போலும்’ என நினைத்துக் கொண்டார்!
அக்கல்யாணத்தை அவர் அத்துடன் மறந்துவிட்டாலும், கல்யாணத்திற்கு முதல் நாள் சேலத்திற்கு எதேச்சையாகச் செல்ல வேண்டியதாயிற்று. உடனே உள்ளூர் வங்கி மேலாளர், `இன்று மாலை திருமண வரவேற்பில் தலையைக் காட்டி விட்டு வந்து விடுவோம்’ என்று சொன்னதால், இரவு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு அங்கு சென்றனர்.
கல்யாண மண்டபத்தை அடைந்தவருக்கு அதிர்ச்சி, ஆனந்த அதிர்ச்சி! நுழைவாயிலில் நண்பரது 15 அடி கட் அவுட். கீழே அவரது வங்கிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லை. அவர் காரை விட்டு இறங்கியதும் பாண்ட் வாத்தியம் முழங்கியது. அவரை மேள தாளத்துடன் மாலையிட்டு வரவேற்றனர். வாடிக்கையாளரின் குடும்பத்தினர் அவரை நடுவில் நிறுத்தி அழைத்துச் சென்றனர். மண்டபத்தில் வந்திருந்தவர்களிலேயே மிக மிக முக்கியமானவராக நடத்தப்பட்டார்!
நண்பர் சாப்பிட்ட பின் வாடிக்கையாளரின் தந்தையிடம் தன் மனதில் இருந்ததைக் கேட்டு விட்டார். `எனக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், பாராட்டு? உங்களுக்கு ஏதேனும் கடன் வேண்டுமென்றால் சொல்லுங்கள். அவசியம் என்னால் முடிந்ததைச் செய்து தருகிறேன் ' என்றார்.
அந்தப் பெரியவரோ, `ஐயா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கடவுள் புண்ணியத்தில் எங்கள் பணம் தான் இன்று கோடிக் கணக்கில் உங்கள் வங்கியில் உள்ளது. நீங்கள் இங்கே பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் நாங்கள் உங்கள் வங்கியில் 50 வருடங்களாகக் கணக்கு வைத்து இருக்கிறோம்.
உங்கள் வங்கி 47 ஆண்டுகள் முன்பு கொடுத்த பத்தாயிரம் ரூபாய் கடனால் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்து உள்ளோம். அதற்குப் பின்னும் எங்களுக்குப் பெரும் பக்கபலமாக இருந்து வளர்ச்சிக்கு உதவியது உங்கள் கிளை மேலாளர்களும் கோட்ட மேலாளர்களும் தான். அதன் நன்றிக் கடன் தான் இது' என்றார்!
கர்ணன் ஏன் துரியோதனன் செய்வது சரியில்லையெனத் தெரிந்தும் அவனுக்காகப் போரிட்டு உயிரை விட்டான்? கும்ப கர்ணன் இராவணனுக்காக ஏன் மாய்ந்தான்?
`பணியாளரின் விசுவாசம் வேலை வாங்குபவரின் விசுவாசத்தில்தான் தொடங்கும். பணியாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் திறமையாகவும் ஒழுங்காகவும் செய்து விட்டால், நீங்கள் அவர்களைக் கைவிட மாட்டீர்கள் என அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் ' என்கிறார் ஹார்வே மாக்கே எனும் அமெரிக்கத் தொழிலதிபர்!
ஒரு காரை ஓட்டிச் செல்லும் ஓட்டுனரை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாளியும் அவரும் சமமான நேரம் தானே பயணித்திருப்பார்கள். அதுவும் ஓட்டுனர் வண்டி ஓட்டும் வேலை செய்திருப்பார். அவரது இரவு ஓய்வுக்குக் கவலைப்பட்டு ஏற்பாடு செய்யாத முதலாளியாக இருந்தால் அவரிடம் ஓட்டுனர் பற்று, விசுவாசம் இல்லாமல் இருப்பது இயற்கை தானே?
நாம் எதிர்பார்க்கும் விசுவாசத்தின் விலை, நாம் காட்டும் விசுவாசம் தானே?
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago