புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் பின்னே நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கிரேக்க விஞ்ஞானி, கணிதமேதை ஆர்க்கிமிடீஸ். ஒரு நாள் குளிப்பதற்காகக் தன் குளியல் தொட்டியில் இறங்கிப் படுத்திருக்கிறார். உடனே அத்தொட்டியில் நீரின் அளவு உயர்வதையும், தன் உடல் எடை குறைவது போலத் தோன்றுவதையும் பற்றிப் பலமாக யோசிக்கத் தொடங்கி விட்டாராம் அவர்!
பிறவி விஞ்ஞானி அல்லவா? உடனே அவருக்குப் பொறி தட்டியுள்ளது. ‘ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும் பொழுது, அப்பொருள் இழப்பதாகத் தோன்றும் எடை, அதனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்' எனும் விஞ்ஞான உண்மையைக் கண்டு பிடித்து விட்டார்!
அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், தான் குளித்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டு `கண்டுபிடித்து விட்டேன்' (யுரேகா) என்று கத்திக் கொண்டே வெளியில் ஓடி வந்தார் என்பார்கள்! இந்த பௌதிக விதியைத் தான் இன்றைய உலகம் `ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' எனக் கொண்டாடுகிறது! கிபி பதினேழாம் நூற்றாண்டில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றியும் படித்து இருப்பீர்கள். புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்த ஆங்கிலேய விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்த காலம் அது.
பிளேக் நோய் காரணமாக சிலகாலம் அவரது கல்லூரி மூடப்பட்டு இருந்த பொழுது, சொந்த ஊருக்குச் சென்று நாட்களைக் கடத்த வேண்டியதாயிற்றாம் நியூட்டனுக்கு! தன் கிராமத்திலிருந்த பழத் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரத்தின் அடியில் ஏதோ யோசனையில் படுத்து இருந்தாராம் இளைஞர் ஐசக் நியூட்டன். அப்பொழுது ஓர் ஆப்பிள் அவர் கண்முன்னே தரையில் விழுந்துள்ளது.
`இந்த மாதிரி ஆப்பிள் ஏன் ஒவ்வொரு முறையும் நேரே தரையில் போய் விழுகிறது? ஒரு முறை கூடப் பக்க வாட்டிலோ மேல் நோக்கியோ பறந்து செல்வது இல்லையே ஏன்?' எனப் பலவாராகச் சிந்தித்தாராம்!
உடனே அவருக்கு மூளையினுள் ஒரு மின்னல்! அன்று பிறந்தது இன்று உலகம் கொண்டாடும் புவியீர்ப்பு விதி! அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டு
மென்றால், ஆப்பிளை விட எடையில் மிகமிகப் பெரியதான பூமி ,ஆப்பிளை தன் பால், அதாவது பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது! தம்பி, தினமும் தொட்டியில், குளத்தில், ஆற்றில் குளிப்பவர்கள் கணக்கற்றோர். ஆனால் அந்த குளிக்கும் அனுபவத்தையே வேறு விதமாகப் பார்த்தார் ஆர்க்கிமிடீஸ்! மாம்பழம் போன்ற பழங்கள் மரத்திலிருந்து விழுவதைப் பார்ப்பவர்களும் ஏராளமானோர்.ஆனால் பழம் விழுவதை வேறு கோணத்தில் பார்த்தார், சிந்தித்தார், ஆராய்ந்தார் நியூட்டன்! அதனால் ஞானம் பிறந்தது. உலகம் உய்ந்தது!
நம்ம தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஷிவ் கேராவைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ‘உங்களால் வெல்ல முடியும் ' ( You can win ) எனும் அவரது நூல் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது. அவர் சொல்வதைப் பாருங்கள். ‘வெற்றி பெறுபவர்கள் வேறு செயல்களைச் செய்வதில்லை.அதே செயல்களையே வேறு விதமாகச் செய்கிறார்கள்' என்கிறார். பின்னே என்னங்க? செய்த முறையிலேயே செய்து கொண்டிருந்தால், முன்னர் நடந்தது தானே நடந்து கொண்டேயிருக்கும்?
தம்பி, உண்மை இது தான்.யாராலும் எந்தப் பொருளையும் அதன் 360 கோண பரிமாணத்தில் பார்க்க முடியாது.ஒருவரது பார்க்கும் பார்வை சரியில்லை என்றால் அவரது புரிதலும் சரியாக இருக்காது.போகும் வேகத்தை விட ,செல்லும் திசை முக்கியமல்லவா?நம்ம வள்ளுவர் இதையே ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்கிறார்!
ராம்ராஜ் காட்டன் நாகராஜின் அனுபவத்தைப் பற்றிப் படித்து இருப்பீர்கள்.ஆரம்ப காலத்தில் வேட்டி விற்க நிறையச் சிரமப் பட்டிருக்கிறார்.காரணம் வேட்டி கட்டுபவர்களை மக்கள் உயர்வாகப் பார்க்கவில்லை என்று புரிந்து கொண்டார். மனிதர் அதற்காக வேட்டி விற்பதை நிறுத்தினாரா என்ன?
பிரச்சினை வேட்டியில் இல்லை,வேட்டியை மக்கள் பார்க்கும் பார்வையில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டார்! வேட்டிகட்டுபவர்களை மற்றவர்கள் மதித்து சல்யூட் அடிக்கும் தொழிலதிபர்களாக சித்தரிக்கும் பிரத்யேக விளம்பரங்களை உருவாக்கினர்.
இன்று சக்கை போடு போடுகிறார்! உண்மை என்னவென்றால், உங்களுக்குப் பிரச்சினை தரக்கூடியது உங்கள் பிரச்சினையல்ல; அதைப் பற்றிய உங்களது அணுகுமுறை தான்! வள்ளல் அழகப்ப செட்டியார், காமராஜர், அன்னை தெரசா, விஸ்வேஸ்வரையா, சத்யஜித் ராய், பகத் சிங்,லீக்குவான் யூ, விவசாயி நம்மாழ்வார் போன்றோர் தம் மாற்றுச் சிந்தனைகளால் மாற்றங்களை நம் கண் முன்னே செய்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றார்கள்.
`எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன் அதை நீங்கள் பார்க்கும் பார்வை தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும். எனவே எப்பொழுதும் அதனைச் சரியாக செய்யுங்கள்' என்கிறார் சாணக்கியர்! எந்தத் துறையிலும் மாற்றுச் சிந்தனையும் சரியான புரிதலும் மண்ணுயிர்க் கெல்லாம் இனிதல்லவா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago