எப்போதுமே, தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். காலை ஊன்ற, ஊன்ற, அவற்றைக் காற்றில் பறக்கவிடுவார்கள். ஆனால், ஜாக் வித்தியாசமானவர்.
அவர் செயல்களின் வீரியம் வாய்ச்சொற்களைவிடப் பல நூறுமடங்கு அதிகம். எல்லாமே அதிரடி ஆக்ஷன்தான். ஆனால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், பலாபலன்களை அலசி ஆராய்ந்து அளந்துவைக்கும் அடி. தொடர் வெற்றியால், ஜீஈ –ன் எல்லா பிசினஸ்களிலும், பெரும்பாலான ஊழியர்களிடம் மெத்தனம் வேரூன்றி விட்டது. இது சீரழிவின் ஆரம்பம், போட்டிவெறி கொண்ட பந்தயக் குதிரைகளாக அவர்கள் இருந்தால் மட்டுமே, எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்று ஜாக் நம்பினார்.
முதல் எட்டு மாதங்கள்; ஜீஈ ஈடுபட்டிருந்த 140 வெவ்வேறு தயாரிப்புப் பொருட்களின் தொழில்நுட்பம், கடந்த பல ஆண்டுகளின் விற்பனை, தயாரிப்புச் செலவுகள், லாபம், சந்தைப் பங்கு, போட்டியாளர்களின் பலங்கள், பலவீனங்கள் ஆகிய அத்தனை விவரங்களும் விரல் நுனியில். இப்போது போட்டார் ஒரு டென் தவுசண்ட் வாலா. எந்தத் தயாரிப்புப் பொருளும் ஜீஈ குழுமத்தில் நீடிக்கவேண்டுமானால், அவை இரண்டு நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;
1. உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டவையாக இருக்க வேண்டும்.
2. போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது, விற்பனையில் நம்பர் 1 அல்லது நம்பர் 2 இடத்தில் இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்குத் தங்களைப் பொருத்திக்கொள்வதற்குக் கால அவகாசம் தரப்படும். அதற்குள் தங்களை மாற்றிக்கொள்ளாத தொழிற்சாலைகள், லாபம் காட்டுபவையாக இருந்தாலும், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் நிறுத்தப்படும்.
அந்தத் தொழிற்சாலைகள் பிறருக்கு விற்கப்படும் அல்லது மூடப்படும். இதன்படி, அடுத்த ஐந்து வருடங்களில் 71 பிசினஸ்களை விற்றார். 37,000 பேர் வேலை இழந்தார்கள். மிஞ்சிய 69 பிசினஸ்கள், தத்தம் துறைகளில் நம்பர் 1 அல்லது 2. ஜாக் அடுத்ததாக ஹெச்.ஆர் (Human Resource) என்னும் மனிதவளத்துறையில் கை வைத்தார். அனைத்து பிசினஸ்களிடமும், தங்கள் அதிகாரிகளை A, B, C என்னும் மூன்று வகையினராகப் பிரிக்கச் சொன்னார்.
A பிரிவினர் – குணங்கள்
* தொலைநோக்குப் பார்வை
* ஜெயிக்கும் வெறி
* செயல் ஆற்றல்
* புதிய கருத்துக்களை ஏற்கும் திறந்த மனம்
* தலைவராக பிறரை பின்பற்றவைக்கும் ஈர்ப்பு
* பொறுப்பை அனுபவித்துச் செய்யும் ஈடுபாடு
* தொற்றவைக்கும் உற்சாகம்
* கடுமையான முடிவுகள் எடுக்கும் துணிச்சல்
B பிரிவினர் குணங்கள்
A பிரிவினருக்கும், இவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் – இவர்கள் தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்கள்.
C பிரிவினர் குணங்கள்
இவர்கள் சோம்பேறிகள். பிறர் உழைப்பில் பிழைக்கும் ரத்த உறிஞ்சி அட்டைகள். எல்லா நிறுவனங்களிலும், A பிரிவினர் 20 சதவிகிதம் இருப்பார்கள்; B பிரிவினர் 70 சதவிகிதம்; C பிரிவினர் 10 சதவிகிதம். இது ஜாக்கின் குத்துமதிப்புக் கணக்கல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியப் பொருளாதார மேதை வில்ஃபிரெடோ பாரெட்டோ (Vilfredo Pareto) உருவாக்கிய பாரெட்டோ கொள்கை அல்லது 80:20 கொள்கை என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இதை உருவாக்கினார்.
ஒரு நிறுவனம் நிர்வாகத்தில் சிறந்தது என்பதற்கு உரைகல் என்ன தெரியுமா? A பிரிவினருக்கு ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தந்து அவர்கள் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், B பிரிவினருக்கு ஊதிய உயர்வுகள் தந்து கம்பெனியில் தக்கவைக்க வேண்டும். C பிரிவினருக்குத் தண்டனைகள் தந்து அவர்களைத் திருத்தவேண்டும். இது பயன் தராவிட்டால், அவர்களுக்குக் குட்பை சொல்ல வேண்டும்.
ஜாக் இதைத்தான் செய்தார். ஒவ்வொரு வருடமும், இந்தக் களையெடுத்தலைத் தொடர்ந்தார். ஜீஈ திறமைசாலிகளின் கூடாரமாயிற்று. ஜாக் செயல்படுத்திய இன்னொரு மாற்றம், இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இன்று, பல்லாயிரம் தமிழக இளைஞர், இளைஞிகள் ஆப்பிள், கூகுள், அமேசான் போன்ற அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில், இந்தியாவின் சாஃப்ட்வேர் திறமைகளைக் கொடி கட்டிப் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வங்கிகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தங்கள் கஸ்டமர் சேவை, சம்பளப் பட்டுவாடா, அக்கவுன்ட்டிங், ஹெச்.ஆர். போன்ற பணிகளை இந்தியாவுக்குத் தருகிறார்கள். அவுட்சோர்ஸிங் (Outsourcing) என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை, நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய உந்துசக்தி.
இதன் கிரியா ஊக்கிகளுள் ஜாக் முக்கியமானவர். இந்தியா மீது அவருக்கு மாபெரும் மதிப்பு உண்டு. சொன்னார், “இந்தியர்கள் திறமையில் அமெரிக்கர்களுக்கு சமமானவர்கள். இல்லை, அமெரிக்கர்களைவிட மேலானவர்கள்.” இதனால், அறிவித்தார் 70:70:70 என்னும் கொள்கை.
இதன்படி, ஜீஈ, தன் 70 சதவிகிதப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்யும். இதில் 70 சதவிகிதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு; இதில் 70 சதவிகிதம் இந்தியக் கம்பெனிகளுக்கு. அதாவது, ஜீஈ – இன் மொத்தப் பணிகளில் 34.3 சதவிகிதம் இந்தியாவுக்கு! இதைவிடச் சிறந்த நண்பர் நமக்கு யார் கிடைப்பார்?
ஜப்பானியக் கம்பெனிகளோடு போட்டியிட வேண்டுமானால், செலவுகளைக் குறைக்க வேண்டும். முதல் முக்கிய செலவினம், ஊழியர் சம்பளம். இதில் கைவைக்க முடியவே முடியாது. யூனியன்கள் போர்க்கொடி தூக்குவார்கள். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? ஜாக் மனதில் மின்வெட்டல்.
பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்த சில நிறுவனங்களிடம் தயாரிப்பை ஒப்படைத்தார். இதனால், அமெரிக்காவில் ஏராளமான ஜீஈ தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு, சிலவற்றில், தொழிற்சாலைக்கே பூட்டு. ஜாக் சி.இ.ஓ-வாகப் பதவியேற்று செயல்படுத்திய மூன்று முக்கிய நடவடிக்கைகள் – நம்பர் 1, நம்பர் 2 கொள்கை, A, B, C பிரிவாக்கம், அவுட்சோர்ஸிங்.
இவற்றின் பலன்?
1980 – ல் ஊழியர்கள் எண்ணிக்கை 4,11,000. இதுவே, 1985 –ல் 2,99,000. அதாவது, 1,12,000 பேர் வேலை நீக்கம். உலக பிசினஸ் வரலாற்றிலேயே, எந்தக் கம்பெனியிலும் இதுவரை இத்தனை நீக்கம் நடந்ததில்லை.
சம்பளத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது முக்கிய செலவினம், தயாரிப்பில் வரும் சேதாரம், தரக்குறைவு. ஜீஈ தயாரிப்புகள் மக்கள் மனங்களில் உயர்தரத்துக்காகத் தனியிடம் பிடித்தவை. இந்த பிம்பம் கொஞ்சம்கூடப் பாதிக்கப்படக் கூடாது, செலவைக் குறைப்பதற்காகத் தரத்தில் எந்த சமரசமும் கிடையாது என்பதில் ஜாக் உறுதியாக இருந்தார். இதை சாதிக்க அவர் எடுத்த ஆயுதம், 6 சிக்மா (6 Sigma). 1980 – களில், அமெரிக்காவின் மோட்டரோலா கம்பெனியில் கண்டுபிடிக்கப்பட்டுப் பிரபலமாகிக் கொண்டிருந்த தரக்கட்டுப்பாட்டு முறை.
இது 1 சிக்மா, 2 சிக்மா, 3 சிக்மா, 4 சிக்மா, 5 சிக்மா, 6 சிக்மா என ஆறு படிநிலைகள் கொண்டது. சாதாரணமாகத் தொழிற்சாலைகள் முதல் படிநிலையில் தொடங்குவார்கள். தங்கள் தரக்கட்டுப்பாட்டு முறைகளைக் கடுமையாக்குவதன் மூலமாகப் படிநிலையில் முன்னேறுவார்கள். இதன் அனுகூலம், சேதாரக் குறைவு. ஒவ்வொரு படிநிலையிலும் சேதாரம் இதுதான்:
6 – ஆம் படிநிலையில் வீணாவது வெறும் 34 தயாரிப்புப் பொருட்களே. முதல் படிநிலையிலிருந்து ஆறாம் நிலைக்குப் போகும்போது, 69 லட்சம் – 34 = 68,99,966 பொருட்களின் மூலப்பொருள், தொழிலாளர் உழைப்பு, பிற உபரிச் செலவுகள் அத்தனையும் மிச்சம். செலவு குறைவு. அத்தனையும் லாபம், அதிக லாபம்.
ஜாக் ஜீஈ–ன் அத்தனை தொழிற்சாலைகளிலும் 6 சிக்மாவைக் கட்டாயமாக்கினார். தர உயர்வு, செலவுக் குறைவு. ஜப்பானுடன் மோத சிக்ஸ் ஸ்டெப்ஸ் சாம்பியனாக ஜீஈ ரெடி. ஜாக் பரம்பரைத் தொழிற்சாலைகளை மூடுவதில் மட்டுமே குறியாக இருக்கவில்லை. நிதித்துறையில் வளர்ச்சி வாய்ப்புகளும், ஜீஈ –க்குத் தனித் திறமைகளும் இருப்பதை அறிந்தார். ஜீஈ கேபிடல் (GE Capital) என்னும் நிதிச்சேவை நிறுவனம் தொடங்கினார். RCA என்னும் வானொலி நிலையம் வாங்கினார்.
ஜாக், ஜீஈ குழுமத்தில், தன் 65-ம் வயதில் ஓய்வு பெறுவதுவரை தொடர்ந்தார். 1981 முதல் 2001 வரை, குழுமத் தலைவர். 1981-ல் 12 பில்லியன் டாலர்களாக (1 பில்லியன் = 100 கோடி) இருந்த சந்தை மதிப்பை 410 பில்லியன் டாலர்களாக்கினார்.
1981-ல் நீங்கள் 1,000 டாலர்களுக்குப் பங்குகள் வாங்கியிருந்தால், 2001-ல் அதன் மதிப்பு 50,000 டாலர்கள். இத்தனைக்கும் அங்கீகார அடையாளமாக, 1999 -ம் ஆண்டில், அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்சூன் பத்திரிகை, ஜாக்கை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மேனேஜராகத் (Manager of the Century) தேர்ந்தெடுத்தார்கள். ஆமோதித்து “ஆமென்” சொன்னது உலகம். அதே சமயம், சிலர் “நியூட்ரான்* ஜாக்” என்று இவருக்குப் பட்டம் சூட்டினார்கள்.
நியூட்ரான் (Neutron) என்பது ஒருவகை அணுகுண்டு. கட்டடங்களைச் சேதப்படுத்தாமல், மனிதர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தவர் என்பதால் இந்தப் பட்டம். “நான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மேனேஜரா, அல்லது நியூட்ரான் ஜாக்கா?” ஜாக் வெல்ஷ் உங்களிடம் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்.
(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago