சபாஷ் சாணக்கியா: மிகச் சிறந்த தர்மம் எது?

By சோம.வீரப்பன்

சென்ற ஞாயிறு ஒரு வியப்பளிக்கும் செய்தி வெளியாகியது கவனித்தீர்களா? யார் சொல்வதையும் கேட்காமல், அடிக்கடி அணு ஆயுதப் பரிசோதனை செய்து உலக மக்களிடையே கலக்கத்தை உண்டு பண்ணும், வட கொரிய நாட்டின்  கிம் ஜாங் உன் பற்றிய செய்தி அது!

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ வின் முன்னாள் அதிகாரியான ஆன்ட்ரூ கிம்மிடம், அவர்   அணு ஆயுதங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் என்பதே அந்தச் செய்தி! இந்த அணு ஆயுதப் போட்டியைப் பற்றிக் கேட்டதற்கு அந்த சர்வாதிகாரி சொன்ன பதிலைப் பாருங்கள்.

‘நானும் ஒரு தந்தைதான். நான் ஒருத்திக்கு கணவனும்தான்.எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது குழந்தைகள் இந்த அணுஆயுதங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் சுமப்பதை நான் விரும்பவில்லை' என்று தனது எண்ணங்களை முன்பொருமுறை பகிர்ந்து கொண்டார் எனும் செய்தியே தற்பொழுது வெளியாகி உள்ளது!

ஐயா, என்றும் எங்கும் அமைதி நிலவினால் தானே மனஅமைதி கிடைக்கும்? அதற்கெல்லாம் அடிப்படைத் தேவை மனதில் ஊறும் அன்பும் கருணையும் தானே?

இதைப் பற்றி நம்ம வள்ளுவரும் பரிமேலழகரும் மிக அழகாக விளக்கி உள்ளார்கள். நம்முடன் தொடர்பு உடையவர்களிடம் நாம் காட்டுவது அன்பு. ஆமாம், நமது பெற்றோர், குழந்தைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இத்யாதி. மற்றவர்களிடம் காட்டுவது அருள் எனும் கருணை! ‘அன்பின் குழவீ அருள்' அதாவது அன்பெனும் அன்னை ஈன்ற குழந்தை தானாம் அருள், அதாவது கருணை!

‘மற்றவர்களை  மகிழ்ச்சியடையச் செய்ய  நினைத்தால், அவர்களிடம் கருணை காட்டுங்கள்;  நீங்கள் மகிழ்ச்சியுற வேண்டுமென்றாலும் மற்றவர்களிடம் கருணை காட்டுங்கள்' என்கிறார் தலாய் லாமா!

சமீபத்தில் ஒருநாள் ஓர் இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றார். அவருடன் வந்திருந்த அவரது மகளும் உடன் சென்றார்.

அப்பொழுது எங்கள் அருகில் இருந்த பெரியவர் ஒருவர்  ஐந்தாறு முறை மிகவும் சிரமப்பட்டு இருமினார்.பின்னர் தண்ணீர் வேண்டுமென்று ஜாடையில் கேட்டார். சுற்றுமுற்றும் பார்த்த பையன் ஒருவன், நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பெரியவரிடம் கொடுத்தான்.அவரும் நன்றியுடன் வாங்கி இரண்டு வாய் குடித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஐந்து நிமிடங்களில் அங்கு திரும்பி வந்த அந்தப் பெண்மணிக்கோ, கோபமான கோபம். என்னைக் கேட்காமல் எனது தண்ணீர் பாட்டிலை எப்படி எடுக்கலாம் என ஏக ஆர்ப்பாட்டம். அந்தப் பெரியவரின் நிலைமையை எடுத்துச்சொன்ன பின்னரும் அந்த அம்மையாரது சினம் தணியவில்லை!

கருணை பற்றி சீன தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் சொல்வதைக் கேளுங்கள். ‘விவேகம், கருணை, அஞ்சாமை ஆகிய மூன்றும் தான்  எந்தச் சூழ்நிலையிலும் மனிதர்களுக்கான சிறந்த குணங்கள்' என்கிறார் அவர்!

இப்படிப்பட்ட  ஆத்மாக்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். அது எப்படி சிலரால் சகமனிதர்களிடம் எந்தவிதப் பச்சாதாபமோ கருணையோ இல்லாமல் இருக்க முடிகிறது என நீங்களும் வியந்திருப்பீர்கள்.

தமிழர் வந்த வழி இதுவா என்ன? சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை, கிராமங்களில் தர்மக்கேணி  (சமுதாயக் கிணறு) என்று ஒன்று  தனியே  கட்டி வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதில் கயிறு கட்டிய வாளி ஒன்று தயாராக  இருக்குமாம். வழிப்போக்கர்கள் அதில்  எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் இரைத்துக் குடிப்பார்களாம்!

வீட்டு முகப்பில் திண்ணை கட்டியிருக்கும்.தெருவில் நடந்து களைத்தவர்கள், வீட்டில் இருப்பவர்களைக் கேட்காமலேயே, திண்ணையில் இளைப்பாற இந்த ஏற்பாடு! எங்கள் ஊரில் இன்றும் குடும்பங்களுக்குப்  பட்டப் பெயர்கள் உண்டு. உதாரணமாக, கோட்டூர் என்பது தேவகோட்டை அருகில் ஒரு கிராமம். அங்குள்ள நயினார்  (சிவன்) கோவிலை நிர்வாகம் செய்த குடும்பங்களை,  அவர்களது சந்ததியினரை ‘கோட்டூரார் வீடு’ என அழைக்கிறார்கள்.

சத்திரம் கட்டிய குடும்பத்தினரை ‘சத்திரத்தார் வீடு’ என்கிறார்கள். வேறு ஒரு குடும்பத்திற்கு ‘தண்ணீர்ப்பந்தலார்’ வீடு எனப் பெயர். அவர்கள்  காலம் காலமாக வழிப் போக்கர்களுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்து வைத்தவர்கள்.

மற்றவர்களின் சிரமத்தை, வலியை, கவலையை உணர்வது, அதை நிவர்த்தி செய்வது, செய்ய முயல்வது தானே கருணை? பேருந்தில் பெரியவர்களுக்கு உட்கார இடம் கொடுப்பது, நோயாளிக்கு மருந்து தடவுவது, மனம் நொந்தவர்களிடம் ஆறுதலாகப் பேசுவது போன்ற செயல்கள்,  உதவிகள்.

ரயிலில் பயணம் செய்யும் பொழுது சாப்பாடு கொண்டுவராமல் தவிக்கும் பெரியவருக்கு உங்கள் உணவைக் கொடுத்தது உண்டா? வழி கேட்பவருக்கு சிரத்தையாகப் பதில் சொல்லியது உண்டா? ஏழையின் படிப்புக்கு உதவியது உண்டா?

தம்பி, மற்றவர்களிடம் கருணை காட்டி, நாம் செய்யும் இது போன்ற சின்னச் சின்ன உதவிகள் தான்  நமக்கு பெருமகிழ்ச்சியையும் நிறைவையும் தருபவை!

‘பிறரிடம் காட்டும் கருணையை விட உயர்ந்த தருமம் இல்லை' என்கிறார் சாணக்கியர்! உண்மை தானே?

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்