சபாஷ் சாணக்கியா: மரியாதை... கொடுத்து வாங்கணும்!

By சோம.வீரப்பன்

உங்களுக்குப் பெரிய கல்யாணங்களுக்குச் சென்ற அனுபவம் உண்டல்லவா? எனது நண்பர் ஒருவர். நல்லவர். யதார்த்தமானவர்.அவருக்கு பெரிய கல்யாணங்கள், மற்ற விழாக்களுக்குப் போவதில் அலாதி மகிழ்ச்சி.

அதாங்க, தன்னை விட அதிகாரத்தில்,செல்வத்தில், உயர்வாக இருப்பவர்களின் கல்யாணத்தைச் சொல்கிறேன். சாப்பாடு பிரமாதமாக இருக்கும், அமர்க்களமாய் உடை உடுத்தி செல்லலாம், இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு செல்வார்.

ஆனால் அங்கு போய் வந்த பின் அவரது முகம் வாடியிருக்கும். யாரும்,' ‘வாங்க  வாங்க' என்று வரவேற்கவில்லை, முகம் கொடுத்துப் பேசவில்லை என்பார்.

இவரைக் கல்யாணத்திற்கு அழைத்தவர் மணமகனின் தந்தை தான் என்பார்.ஆனால் இவரே அவரிடம் வலியப் பேசப் போனாலும், தலையைக் கூட ஆட்டாமல் அவர் வேறு திசைக்கு நகர்த்து விட்டார் என அங்கலாய்ப்பார்.

மேடையேறி மணமக்களுக்குப் பரிசுப்பணம் கொடுக்கும் பொழுது தன்னைப் புகைப்படம் எடுக்க வில்லையே எனும் ஆதங்கமும் இவருக்கு அடிக்கடி உண்டு. சரி, கல்யாண வீட்டுக்குப் போய்விட்டுச் சாப்பிடாமலா வரமுடியும்? வீட்டிற்குப் போனாலும் சாப்பிட ஒன்றும் இருக்காதே. எனவே, பாவம், யாரும் சாப்பிடக் கூப்பிடாவிட்டாலும், தானகவே முண்டியடித்துச் சென்று, காத்திருந்து, சாப்பிட்டுத் தொலைப் பாராம்!

ஆனால், மனிதர் தற்பொழுது தேறி விட்டார். சும்மா பத்திரிக்கை வந்து இருக்கிறது என்பதற்காகவோ, பெரிய இடம் என்பதற்காகவோ எல்லாக் கல்யாணங்களுக்கும் போவதை நிறுத்தி விட்டார்.

`நாம் நமக்குக் காட்டிக் கொள்ளும்  சுயமரியாதை நமது ஒழுக்கத்துக்கு வழி காட்டும்; நாம்  மற்றவர்களிடம் காட்டும் மரியாதை நமது நடத்தைக்கு வழிகாட்டும்' என ஐரிஷ் நாவலாசிரியர் லாரன்ஸ் ஸ்டர்ன் சொல்வதை நினைத்துப் பாருங்கள்!

நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீர்கள். மற்றவர்களை உதாசீனப்படுத்துவது, ‘நான் பெரிய இவனாக்கும்' என நடந்து கொள்வது  என்பதெல்லாம் சிலருக்குக் கை வந்த கலை. அதுவும் அவர்கள் கையில் அதிகாரம் வந்து விட்டால் கண்மண் தெரியாது.

எனது வேறு ஒரு நண்பரின் அனுபவம் இது.அவரைத் திடீரென  தொலைதூர ஊர் ஒன்றுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார் அவரது மேலாளர். ஆனால் நண்பரும் விடுவதாக இல்லை.

மேலாளரை நேரில் சந்தித்து  கேட்டு விடுவதென முடிவு செய்தார். முன் அனுமதி வாங்கியிருந்த பொழுதும்,  ஒரு மணி நேரம் காக்க வைத்து பின்னரே நண்பரை உள்ளே அழைத்தாராம் அந்த மேலாளர். அத்துடன் இவரிடம் எதுவும் பேசாமல் சும்மா நிற்க வைத்திருக்கிறார்.

தனக்கு  வெந்நீர் வரவழைத்துக் கொண்டாராம். பின்னர் ஒரு பாட்டிலில் இருந்து இரண்டு தேக்கரண்டி தேன் எடுத்து வெந்நீரில் விட்டு அது விழுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாராம்.நண்பர் காத்து நிற்பதை நிமிர்ந்து கூடப் பார்க்க வில்லையாம்!

அந்தத் தேன் கலந்த சுடு தண்ணீரை அவர் உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்க நண்பர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.வெகு நேரம் இந்த நாடகமாடிய பின்னர் நண்பரை என்னவென்று கேட்டாராம். ஆனால் நண்பர் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், தொலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டு வேறு எதுஎதையோ  பேசினாராம். நண்பர்  மிகவும் வருத்தப்பட்டு திரும்பி விட்டார்.

தெய்வாதீனமாக, அந்த மேலாளருக்கே மிக மோசமான ஊருக்கு இடமாற்றம் வந்ததும் நண்பரது இடமாற்ற உத்தரவு ரத்தானதும் தனிக்கதை! ஐயா, பிலிப்ஸ் ஜேம்ஸ் சொல்வது போல,  மற்றவர்களிடம் அன்பு காட்டுவதும் காட்டாததும் ஒருவரது விருப்பம்; ஆனால் மரியாதை காட்டுவது கடமை அல்லவா?

அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டும் இதுபோல் நடந்து கொள்வார்கள் என்று இல்லை. நண்பர்கள் சிலருடன் பூங்காவில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் அங்கு வேறு ஒரு நண்பர் வந்தால், என்ன செய்வீர்கள்?

அவரைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தால் எப்படி? அவரையும் அமரச் செய்து, அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அல்லது, மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டுத்தானே உங்கள் அரட்டையைத் தொடரணும்? அவரையும் கொஞ்சம் பேச விடணும் இல்லையா?

‘ஒருவரை  நாம் உண்மையில் மதிக்கிறோம் என்பதற்கான முதல் அடையாளம்   அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதே' என்கிறார்  பைரான்ட் மெக்கில் எனும் அமெரிக்க எழுத்தாளர்! தம்பி, இதை எப்பவும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

இராமாயணத்தில் கேட்டிருப்பீர்கள். இலங்கைக்குப் பாலம் அமைக்க வானரங்கள் பாறைகளைப் போட்டுக் கொண்டிருந்தன.  ராமனுக்குத் தானும் உதவ வேண்டுமென எண்ணிய ஓர் அணில், தன் முதுகில் மணலை ஓட்டிக் கொண்டு வந்து பின்னர் அதை பாலம் அமைக்கும் இடத்தில் உதறியதாம்!

அதைக் கண்டு மகிழ்ந்த ராமர் ,அதை அன்பாய் முதுகில் தடவினாராம். இந்தத் தடவுதல், தட்டிக்கொடுத்தல், நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.இதை உளவியலில் stroking என்கிறார்கள்.

 கைகளின் அழகு கொடுப்பதிலும், உடம்பின் அழகு குளிப்பதிலும், மனிதருக்கு அழகு மரியாதை கொடுப்பதிலும் இருக்கின்றன என்கிறார் சாணக்கியர்! ஆழமான உண்மையல்லவா?

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்