நல்ல நிர்வாகியின் அடையாளம் என்ன? வள்ளுவர் சொன்னார்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
அதாவது, ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். இது கலைஞர் உரை.
லல்லு செய்த முதல் வேலை, திறமைசாலியும், போக்குவரத்துத் துறையின் நுணுக்கங்கள் புரிந்தவருமான சுதீர் குமார் என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தன் முக்கிய உதவியாளராக Officer on Special Duty பதவியில் நியமித்தது.
விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் காய்களை நகர்த்துவது போல் லல்லுவின் ஒவ்வொரு இயக்கத்தின் பின்னாலும் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள். முதல் அடியே அதிரடி.
ஜுலை 6, 2004. லல்லுவின் முதல் ரெயில்வே பட்ஜெட். வழக்கம்போல் டிக்கெட் விலை ஏறும் என்று அடிவயிற்றில் நெருப்போடு காத்திருந்தான் அடிமட்டச் சகோதரன். அதிர்ச்சி, அதிர்ச்சி. லல்லு டிக்கெட் விலைகளைக் குறைத்தார், இரண்டாம் வகுப்புக்கு ஒரு ரூபாய், இரண்டாம் ஏ.ஸிக்கு 10 சதவிகிதம், முதல் வகுப்பு ஏ.ஸிக்கு 18 சதவிகிதம்.
இது மட்டுமா? வேலையில்லாத இளைஞர், இளைஞிகளுக்கு இலவசப் பயணம். இப்படிப் பல சித்து வேலைகள். கண்ணுபடப் போகுதைய்யா லல்லுக் கவுண்டரே என்றது இந்தியா.
விலையை அதிகமாக்காவிட்டால் பயணிகள் பஸ்களை விட்டு வந்துவிடுவார்களா? அவர்கள் பஸ் பயணம் செய்ய என்ன காரணங்கள்? முதல் காரணம் ரிஸர்வேஷன் கிடைக்காதது. ஸீட்களை அதிகமாக்குவது இதற்குத் தீர்வு. புதிய ரெயில்கள் விடுவதற்குப் பணம் இல்லை. லல்லு ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தார்.
அது, ரெயில்களின் கொள்ளளவைக் கூட்டுவது. ரெயில்களில் 16, 18 அல்லது 21 பெட்டிகளேஇருந்தன. என்ஜின்களின் சக்தியை 24 பெட்டிகளை இழுக்கும் அளவுக்கு அதிகமாக்கச் சொன்னார். ஒரு பெட்டிக்கு 64 பயணிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 16 பெட்டிகளில் எத்தனை பயணிகள்? 16 x 64 == 1024. இது 24 பெட்டிகளாகும்போது 24 x 64 = 1536. இதற்கேற்றபடி, பிளாட்பாரங்களும் 24 பெட்டிகள் நிற்கும்படி நீளமாக்கப்பட்டன. அதாவது, சிறிய செலவில், 50 சதவிகித அதிகப் பயணிகள், அதிக வருமானம்.
30 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யவேண்டியிருந்தது. பயணத்துக்குச் சில நாட்கள் முன்னால் மட்டுமே பயணிக்க முடிவு செய்பவர்களை ரெயிலுக்கு எப்படி வர வைப்பது? பயணத்துக்கு ஒருநாள் முன்னால் முன்பதிவு செய்யும் தத்கல் திட்டம் இருந்தது. இதை லல்லு மூன்று நாட்களாக்கினார்.
ஸுப்பர் ஃபாஸ்ட் ரெயில்கள் என்றால் மணிக்கு 55 கிலோமீட்டருக்கும் அதற்கு அதிக வேகமாகவும் ஓடி சீக்கிரம் நம்மை ஊருக்குச் சென்று சேர்க்கும் ரெயில்கள். வைகை, பல்லவன், பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை மாதிரி. ஸூப்பர் ஃபாஸ்ட் ரெயில் டிக்கெட்கள் சாதா ரெயில் டிக்கெட்களைவிட 20 ரூபாய் அதிகம்.
45, 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த பல ரயில்களின் ஓடும் நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை குறைத்து அவற்றை ஸுப்பர் ஃபாஸ்ட் ஆக்கினார். ஒவ்வொரு பயணிக்கும் 20 ரூபாய் அதிக வசூல். இப்படிப் பலப்பல யுக்திகள். இரண்டு வருடங்களில் பயணிகளிடமிருந்து வரும் வருமானம் 13,298 கோடி ரூபாயிலிருந்து 15,126 கோடியாக உயர்ந்தது. ஆமாம், வசூல் ராஜா லல்லு 1,828 கோடி அதிகப் பணம் கஜானாவுக்குச் சேர்த்தார். இதேபோல், சரக்குப் போக்குவரத்து வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளும் களத்தில் இறங்கின.
ஒவ்வொரு ரெயில் வாகனிலும் அதிகப்படியாக 20.3 டன்கள் எடை ஏற்றலாம் என்னும் வழக்கம் இருந்தது. ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட வழக்கம். இதை லல்லு அதிகமாக்க விரும்பினார். இது வாகனின் இருசு (Axle) என்ற பாகத்தைப் பொறுத்தது. அதிக எடை கொண்டுபோனால், இருசு முறியும், விபத்துகள் நடக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள் கருத்துச் சொன்னார்கள். இது பொறியியல் அடிப்படையிலான கணக்கு அல்ல, முடிவெடுக்கும் பயம்.
லல்லு சரக்கு ஏற்றும் பல மையங்களுக்கு விசிட் அடித்தார். பலமட்ட ஊழியர்கள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்டார். 22.9 டன்கள் வரை ஏற்றினால் பாதுகாப்புக்கு எந்தப் பங்கமுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. சொந்தப் பொறுப்பெடுத்தார். உச்ச வரம்பை 22. 9 டன்கள் ஆக்கினார்.
அதாவது செலவைக் கூட்டாமலே, 13 சதவிகித அதிக வருமானம். லல்லுவின் இந்தத் தீர்மானம் ரெயில்வேயின் மறுவாழ்வுக்கான ஒரு முக்கிய காரணம் என்று மேதைகள் சொல்கிறார்கள். அதாவது, ஒரு டன் அதிக எடை = 500 கோடி அதிக ஆண்டு வருமானம். அதாவது, 2.6 டன்கள் அதிகமானதால், 1,300 கோடிகள் அதிக வருமானம்.
வாகன்கள் சரக்கை இறக்கி மறுபடி ஏற்ற சராசரி 6.7 நாட்களாக இருந்தது. இந்த பிஸினஸில் ஒவ்வொரு நிமிடமும் பணம். 2006 - இல் இது 6 நாட்களாகக் குறைக்கப்பட்டது. இது சின்ன விஷயமல்ல. நாடு முழுவதும் சரக்கை ஏற்றி இறக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை ஒருங்கிணைக்கும் வேலை. யூனியன்களோடு நடத்திய சாதுரியப் பேச்சுவார்த்தைகள் தந்த பலன்.
இரும்புத் தாது, கரி உரம், சிமெண்ட் ஆகிய பொருட்கள் ரெயிலில்தான் போயாகவேண்டும். இதைப் பயன்படுத்தி கட்டணங்களை ஏற்றி அவர்கள் வயிற்றில் அடிக்க ரெயில்வே நிர்வாகம் விரும்பவில்லை. அதே நேரத்தில் ரெயில்வேக்கும் நியாயமான ரேட் வேண்டாமா? தானே நஷ்டத்தில் திண்டாடும்போது ரெயில்வே அவர்களுக்கு அநாவசியமாக ஏன் அடிமாட்டுக் கட்டணத்தைக் கொடுக்கவேண்டும்?
நிதி, சுரங்கம் ஆகிய பல அமைச்சரகங்களோடு பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. ஏற்றுமதிக்கான இரும்புத் தாதுப் பொருட்களின் விலை உலக மார்க்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 113 சதவிகிதம் உயர்ந்திருந்தது. அதிக லாபம் இந்த ஏற்றுமதியாளர்களுக்கு. இந்த லாபத்தில் ஒரு சிறிய பகுதியை அவர்கள் சரக்குக் கட்டண உயர்வாகக் கொடுத்தாலென்ன? இந்தச் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
2003 - 2004 இல், லல்லு வருமுன் பயணிகள், சரக்கு என்ற மொத்த வகைகளில் வருமானம் 42905 கோடி. பார்சல் புக்கிங் வருமானம் 2004 - இல் 444 கோடி.
இது 2005 - இல் 524 கோடியானது. இதேபோல், பன்முனை வளர்ச்சிகள். விளம்பர வருமானம் 2005 - இல் 50 கோடி. இது 2006 - இல் 78 கோடியானது.
கேட்டரிங் வருமானம் 2005 - இல் 42 கோடி. இது 2006 - இல் 76 கோடியானது. 2004 – இல் ரெயில்வேயின் கையிருப்புப் பணம் வெறும் 149 கோடி. இதுவே, 2006 – இல் 12000 கோடியானது.
எந்த மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், எந்த மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் என்று நன்றாகவே தெரிந்திருந்தது லல்லுவுக்கு.
லல்லுவுக்கு இருக்கும் பொதுஜன பிம்பம், சாதி அரசியல், ஊழல். ஆனால், இந்திய ரெயில்வேயின் மறுபிறவியின் சூத்திரதாரி லல்லு பிரசாத் யாதவ். அகமதாபாத் முதல் ஹார்வர்ட் வரை அகில உலகமும் ஆமென் சொல்லும் உண்மை இது.
ஆதாரங்கள்;
1. “Turnaround’ of Indian Railways: A Critical Appraisal of Strategies and Processes” by Prof. G. Raghuram. Indian Institute of Management, Ahmedabad, February 2007.
2. “Turnaround’ of Indian Railways: Increasing the Axle Loading” by Prof. G. Raghuram and Prof. Niraja Shukla, Indian Institute of Management, Ahmedabad. May 2007.
3. The Indian Railways Report – Policy Imperatives for Reinvention and Growth Volumes 1 & 2 – Expert Group on Indin Railways – 2001.
4. Indian Railways: Building a Permanent Legacy?- Prof. Tarun Khanna & Prof. Aldo Musacchio, Harvard Business School, USA – 2012.
(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago