கடந்த வாரம் வியாழக்கிழமை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடுமையைப் பார்த்து அதிர்ந்திருப்பீர்கள். மிகவும் வருந்தி இருப்பீர்கள். பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில், நமது துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.
இந்தக் கோர சம்பவத்தை நாடு ஒரே குரலாக எதிர்க்க, இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவுவதற்கு பல குடிமக்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர் என்பது ஒரு நெகிழ்ச்சியான செய்தி.
ஆனால் இவற்றுக்கிடையே மனதை மிகவும் வருந்தச் செய்த மற்றுமொரு செய்தியும் வந்ததே பார்த்தீர்களா? மக்களின் நல்லெண்ணெத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பலர் ஏமாற்ற முற்பட்டுள்ளனர். சில மோசடிக்காரர்கள் ‘சல்யூட் இந்தியன் ஆர்மி’ எனும் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கப் போவதாகவும், இந்த கணக்கிற்கு, மக்கள் தங்கள் நிதியை அளிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பிவிட்டார்களாம்.
வேறு ஒரு கும்பலோ, ‘ராணுவ நல நிதி’ எனும் பெயரில் வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். இதையெல்லாம் உண்மையென்று நம்பி சிலர் உடனே பணம் அனுப்பிவிட்டனர்! சீக்கிரம் விழித்துக்கொண்ட காவல்துறையினர், இவர்கள் மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுமக்கள் இது போன்ற மோசடியில் சிக்கி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்!
சென்ற ஜனவரி மாதம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த வேறு ஒரு நிகழ்வு ஞாபகம் இருக்கிறதா?
மூலவருக்கு மாலை சாற்றும் பொழுது வெங்கடேஷ் எனும் அர்ச்சகர், 8 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து விட்டார், பின்னர் இறந்தும் விட்டார்! இந்தச் செய்தி, அவரது உறவினரின் வங்கிக் கணக்கு எண்ணுடன் சமூக வலைதளங்களில் பரவியது. உடனே, உலகின் பல பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டவர்கள் லட்சக்கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர்.
ஆனால் அவரது உறவினர்களோ, வங்கியில் இருந்த சுமார் 17 லட்ச ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்களுக்குத் தெரியாமலேயே யாரோ இத்தகைய செய்தியைப் பரப்பி விட்டுள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிக்கும்படியும் காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இறந்த வெங்கடேஷ் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தார் என்றும், அவர் பகுதி நேர ஊழியமாகவே கோவிலில் சேவை செய்தார் என்றும் விளக்கி உள்ளனர். பணத்தை அனுப்பியவர்களுக்கே அதைத் திருப்பிக் கொடுக்கும்படியும் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என நம் முன்னோர்கள் சொன்னது சும்மாவா? உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணெம் இருந்தால் போதாதே! உங்கள் பணம் தவறான அல்லது தேவையற்ற நபர்களிடம் செல்கிறதென்றால், வேறு யாரோ ஒருவருக்கு நீங்கள் செய்யக்கூடிய உதவி கிடைக்காமல் போகிறதென்று தானே பொருள்?
தம்பி, தனிமனிதனுக்கு உதவி எனும் ஈகை பற்றி 10 குறள்கள் எழுதிய வள்ளுவர், ஒரு சமூகத்திற்கு நின்று பலன் தரும் ஒப்புரவு பற்றி ‘ஊருணி நீர்நிறைந்தற்றே...' போன்ற 10 குறள்களில் விளக்கி உள்ளார். ஈகை (Help) என்பது முதலுதவி, ஒப்புரவு (Philanthropy) என்பது நிரந்தர தீர்விற்கான சிகிச்சை என்பார் எனது நண்பர் ஒருவர்!
கஜா புயலின் பொழுது பார்த்து இருப்பீர்கள். பலர் பணம் அனுப்பினார்கள். சிலரோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடித் தேவைகளான, மெழுகுவர்த்தி, போர்வை, ரொட்டி, மருந்து போன்றவற்றை எடுத்துக்கொண்டு நேரடியாகக் களத்திற்கே சென்றுவிட்டார்கள். ‘ஒப்புரவு பலனளிக்க வேண்டுமென்றால், அதற்கு நிறைய நேரத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையையும் செலவழிக்க வேண்டும்.
ஒரு தொழிலை வளர்ப்பது போலவே ஒப்புரவுக்கும் நிறையத் திறமைகளும் கவனக்குவிப்பும் தேவைப்படும்' என்கிறார் மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ்! கேரளாவில் சென்ற ஆகஸ்டு பேய் மழையின் பொழுது, ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கமும் உமேஷும் தாமே சத்தமின்றி, அரிசி மூட்டைகளை இறக்கி மக்களுக்கு உதவியதையும் பார்த்து இருப்பீர்கள்.
‘ஒரு காரியத்துக்கு நன்கொடை கொடுத்து விட்டால் போதும், அதுவே ஒப்புரவு ஆகிவிடும் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், ஒப்புரவு என்பது பணத்தை மட்டுமல்லாது, உங்கள் நேரத்தை, எண்ணத்தை, உடலுழைப்பைக் கொடுப்பதாகும். பணம் என்பது அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமே' என்கிறார் ஜைடஸ் மருத்துவமனைகளின் தலைவர் பங்கஞ் படேல்!
ஐயா, இன்றைய உலகில் நம்மால் எண்ணற்ற மக்களை உடனே தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே நல்ல காரியங்களுக்கு, நல்லெண்ணம் கொண்டவர்களின் ஒத்துழைப்பினால் உடனே பணம் சேர்க்க முடிகிறது. ஆனால் இதே சமூக வலைதளங்கள் மோசடிக்காரர்களாலும் பயன்படுத்தப் படுகின்றனவே! எச்சரிக்கையாக இருக்கணும் அல்லவா?
‘நாம் ஈட்டிய செல்வத்தைச் சரியான வழியில் தர்மம் செய்யலாமே தவிர, யார் வேண்டுமானாலும் அனுபவிக்கும்படி விடுவது தவறு' என்கிறார் சாணக்கியர்! யோசித்துப் பாருங்கள், புரியும்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago