யு டர்ன் 08: ஐ.பி.எம். – படுகுழியில் யானை ராஜா

By எஸ்.எல்.வி மூர்த்தி

வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பார்? 1999 – ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை சொல்கிறது:

ஆனால், இந்த அதிகாரபூர்வத் தோற்றம் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் கண்கள் முன்னால் நிற்பவர் – “திறை, வரி, வட்டி… வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி” என்று சிம்மக்குரலில் முழங்கும் சிவாஜி!

நமக்குக் கிருஷ்ணர் என்றால், என்.டி.ராமராவ். கிளியோபாட்ரா என்றால், 1963 சினிமா நாயகி எலிசபெத் டெய்லர். இதேபோல், கம்ப்யூட்டரை நினைக்கும்போது, எல்லோர் மனக்கண்களிலும் வரும் பெயர், ஐ.பி.எம் (IBM) என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன் (International Business Machines Corporation).

ஐ. பி.எம் வரலாற்றின் முதல் புள்ளி 1888 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட International Time Recording Company; இரண்டாம் புள்ளி, 1896 – இல் உருவான Tabulating Machine Company; மூன்றாம் புள்ளி, 1901 – இல் பிறந்த Computing Scale Company of America. 1911 – இல், சார்ல்ஸ் ரன்லெட் ஃப்ளின்ட் (Charles Ranlett Flint) என்னும் நிதிமேதை இந்த மூன்று நிறுவனங்களையும் இணைத்தார். Computing-Tabulating-Recording Company (CTR) என்று பெயர் வைத்தார். இதுதான் ஐ.பி.எம் – இன் ஆரம்பகாலப் பெயர்.

பிசினஸுக்கான கணக்கு எந்திரங்கள் ஒளிமயமான எதிர்காலம் கொண்ட துறை என்று ஃப்ளின்ட் சரியாகக் கணித்தார். தன் கம்பெனி உச்சம் தொட வேண்டுமானால், பிசினஸ் எந்திரங்களில் அனுபவம் கொண்டவர் வழிகாட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். நேஷனல் கேஷ் ரெஜிஸ்ட்டர் (National Cash Register) கம்பெனி பில் போடும் கருவிகள் தயாரித்தார்கள். அங்கே வேலை பார்த்த தாமஸ் வாட்சன் சீனியர் (Thomas Watson Sr.) என்பவரை அழைத்துவந்தார். ஐ.பி.எம் – இன் தலைவராக நியமித்தார்.

அடுத்த 42 ஆண்டுகள், தன் 82 – ஆம் வயதில் ஓய்வுபெறுவது வரை, தாமஸ் வாட்சன் சீனியர் உருவாக்கியது பொற்காலம். அவர் பதவியேற்றபோது, CTR விற்பனை 4.5 மில்லியன் டாலர்கள். ஊழியர்கள் எண்ணிக்கை 1,300. அவருடைய 42 வருட ஆட்சி முடிவில், விற்பனை 897 மில்லியன் டாலர்கள். ஊழியர்கள் 72,500 பேர். இவர்கால முக்கிய சாதனைகள்;

1924. Computing-Tabulating-Recording Company என்பதிலிருந்து, இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன் என்னும் பெயர் மாற்றம்.

1949. IBM World Trade Corporation ஆரம்பித்து, ஐ.பி.எம் – ஐச் சர்வதேச நிறுவனமாக்கியது.

1954. கம்ப்யூட்டர் பயன்படுத்தலில் புரட்சியை உண்டாக்கிய ஐ.பி.எம். மாடல் 704 அறிமுகம்.

1953 – ஃபோர்ட்ரான் (Fortran) கம்ப்யூட்டர் மொழி கண்டுபிடிப்பு.

தந்தை மறைந்தவுடன், அவர் மகன் தாமஸ் வாட்சன் ஜூனியர் கம்பெனித் தலைவரானார். தான் அப்பாவின் மகன் மட்டுமல்ல என்பதைத் தன் பதினாறடிப் பாய்ச்சல்களில் நிரூபித்தார். உலகக் கம்ப்யூட்டர் விற்பனையில் ஐ.பி.எம் – இன் பங்கு 60 சதவிகிதம். ஜூனியர் திருப்தியடையவில்லை. கம்ப்யூட்டர் உலக சாம்ராஜ்ஜியத்தின் ஏகபோகச் சக்கரவர்த்தியாக விரும்பினார்.

வெறும் கனவல்ல, தெளிவான திட்டம். 1962 – இல் ஐ.பி.எம் – இன் ஆண்டு விற்பனை 2.5 பில்லியன் டாலர்கள் (அன்றைய மதிப்பில் 900 கோடி ரூபாய்). அவர் திட்டத்துக்குத் தேவைப்பட்ட முதலீடு, இதன் இரு மடங்கு – 5 பில்லியன் டாலர்கள் (1,800 கோடி ரூபாய்). கரணம் தப்பினால் மரணம் என்னும் ரிஸ்க். உயர் அதிகாரிகளும், கம்பெனி இயக்குநர்களும் தயங்கினார்கள். ஜூனியர் துணிந்து நின்றார். ப்ராஜெக்ட் ஸ்டார்ட்.

இரண்டே வருடங்கள். 1964. சிஸ்டம் 360 கம்ப்யூட்டர் களத்துக்கு வந்தது. அதுவரை, ஐ.பி.எம், உட்பட்ட எல்லாக் கம்ப்யூட்டர்களிலும், அந்தக் கம்பெனியின் பிரின்ட்டர், டேப், பன்ச் கார்ட் போன்ற உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தமுடியும். 360 – இல் பிறர் தயாரிப்புகளையும் உபயோகிக்கலாம். சிறிய கம்ப்யூட்டரை வாங்கி, படிப்படியாக அப்டேட் செய்யலாம்.

1958 - இல் அறிமுகமான Chip என்னும் சில்லுகளை 360 பயன்படுத்தியது. இதனால், பிரம்மாண்டமாக இருந்த கம்ப்யூட்டர் அளவு சுருங்கியது. வேகம் பெருகியது. பார்க்கும் இடமெல்லாம் 360.

1970. இன்னும் பிரமாதமான சிஸ்டம் 370 வருகை. உலகப் பிரமிப்பு ஆச்சரியமானது. கம்ப்யூட்டர் விற்பனையில் 90 சதவிகிதப் பங்கு ஐ.பி.எம். இது மட்டுமா? 360, 370 மாடல்களில் லாபம் 60 சதவிகிதம். இந்தக் கொள்ளை லாபத்தால் ஐ.பி.எம். கஜானாவில் பொன்மழை கொட்டியது.

1971 – இல் ஜுனியருக்கு இதயநோய் வந்தது. சி.இ.ஓ. பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தனி மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும், பிரம்மாண்டத் தோல்விகள் மட்டுமல்ல, தொடர் வெற்றிகளும் சுமைதான், சாபம்தான். தொடர் தோல்விகள் மனதைத் துவளச் செய்யும்; தொடர் வெற்றிகள் உலகமே தன்னைச் சுற்றிச் சுழல்கிறது என்னும் பிரமையை உண்டாக்கும். ஜெயிக்கும் வேகத்தை, முயற்சிகளை மழுங்கவைக்கும்.

1970 – க்குப்பின் ஐ.பி.எம். கம்ப்யூட்டரில்பெரிய முன்னேற்றங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கம்ப்யூட்டர் உலகில், பயன்படுத்தலில், மூன்று அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. வெற்றி மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டிருந்த ஐ.பி.எம். ஒட்டகம் தான் சறுக்கிக்கொண்டிருப்பதை உணரவேயில்லை.

அந்த மாற்றங்கள்;

1. 360, 370 இரண்டும் மெயின்ஃப்ரேம் (Mainframe) என்று அழைக்கப்படும் பெரிய கம்ப்யூட்டர்கள். இந்தக் கோட்டையில், ஹ்யூலட் பக்கார்ட்போன்ற அமெரிக்கத் தயாரிப்பாளர்களும், ஹிட்டாச்சி போன்ற ஜப்பானியத் தயாரிப்பாளர்களும் நுழைந்தார்கள். விலையைக் குறைத்தார்கள். ஐ.பி.எம் விலையைக் குறைக்கவில்லை. 1970 – களின் பிற்பகுதியில் ஐ.பி.எம்– இன் விற்பனைப் பங்கு 90 சதவிகிதத்திலிருந்து 1985 – இல் 70 சதவிகிதமானது. தொடர்ச்சியாக இறங்குமுகம்.

2. போட்டி நிறுவனங்கள் மைக்ரோ கம்ப்யூட்டர் என்னும் நடுத்தரக் கணினிகளில் இறங்கினார்கள். இவற்றுக்கு மார்க்கெட்டே இருக்காது என்று ஐ.பி.எம். போட்ட கணக்கு தப்பானது.

3. சிறிய அலுவலகங்களிலும், வீடுகளிலும், கஸ்டமர்கள் பயன்படுத்த உதவும் எளிமைத் தொழில்நுட்பம் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வேரூன்றப்போவதை ஐ.பி.எம். உணரவேயில்லை.

முதல் இரண்டு அம்சங்களிலும், ஐ.பி.எம். எதுவுமே செய்யவில்லை. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் தாமதமான எதிர்வினை. 1976-இல் ஆப்பிள் கம்பெனி பெர்சனல் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் விற்பனை எகிறியது.

1977 - 7,75,000 டாலர்கள்

1979 - 5,00,000,00 டாலர்கள்

1980 - 10,00,000,00 டாலர்கள்

தூங்கிக்கொண்டிருந்த ஐ.பி.எம்.விழித்தது. 1981 – இல் பெர்சனல் கம்ப்யூட்டர்களைக் களத்துக்குக் கொண்டுவந்தது. அவசரம் அவசரமாக நுழைந்ததால், பல தவறுகள். இரண்டு முக்கிய போட்டியாளர்களை அவர்களே வளர்த்துவிட்டார்கள்.

முதல் தவறு - இதுவரை, தன் தேவைக்கான Chip- களை ஐ.பி.எம். உற்பத்தி செய்தார்கள். இப்போது இதற்கான ஆர்டரை இன்டெல் (Intel) கம்பெனியிடம் தந்தார்கள். இந்த அங்கீகாரம் இன்டெலுக்கு ஸ்டீராய்டு ஊக்கமருந்து. பிற கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களும் இன்டெலிடம் வந்தார்கள். இன்டெல் சிப் இல்லாத கம்ப்யூட்டரே இல்லாத நிலை.

இரண்டாவது, இன்னும் பெரிய தவறு. கம்ப்ட்யூட்டர்களின் வன்பொருளையும் மென்பொருளையும் இணைத்துச் செயல்பட வைக்கும் மென்பொருள் இயக்குதளம் (Operating System) என்று அழைக்கப்படுகிறது. தங்களிடம் இதை வடிவமைக்கும் திறமை இருந்தபோதிலும், இந்த வேலையை மைக்ரோஸாஃப்ட் என்ற புதியவர்களிடம் ஐ.பி.எம். கொடுத்தார்கள்.

இதன் காப்புரிமை தங்களுக்கு மட்டுமே என்று நிபந்தனை போடத் தவறிவிட்டார்கள். இதனால், ஐ.பி.எம் செலவில் தயாரிக்கும் ஓ. எஸ்ஸை மைக்ரோஸாஃப்ட் சிறு சிறு மாற்றங்களோடு பிற கணினி நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்.

அதாவது ஐ.பி.எம் செலவில் மைக்ரோஸாஃப்ட் தன் கல்லாவை நிரப்பலாம். மைக்ரோஸாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் படா கில்லாடி. கோடு போடச் சொன்னால் ரோடு போட்டுக் காரே ஓட்டுவார். வின்டோஸ் (Windows) அறிமுகம் செய்தார். உலகமகா கோடீஸ்வரராக வளரத் தொடங்கினார். உபயம்? ஐ.பி.எம். செய்த உதவி.

இன்டெல்லையும், மைக்ரோசாஃப்டையும் டயனோசராக வளரவைத்த ஐ.பி.எம் தேய்ந்துகொண்டிருந்தது. மெயின்ஃப்ரேம். மைக்ரோ கம்ப்யூட்டர், பெர்சனல் கம்ப்யூட்டர் என்னும் மூன்று முனைகளிலும் தோல்வி. நிலைமை நாளுக்கு நாள் மோசமானது. 1990 – ல் ஆண்டு விற்பனை 13 பில்லியன் டாலர்கள். (அன்றைய மதிப்பில் சுமார் 23,400 கோடி ரூபாய்.) இரண்டே வருடங்கள்.

1992-ல் விற்பனை 7 பில்லியன் டாலர்கள். ஏகதேசம் பாதி . ஐ.பி.எம் – இன் 81 வருட சரித்திரத்தில் முதன் முதலாக நஷ்டம். பல்லாயிரக்கணக்கான திறமைசாலிகள் வேலையைவிட்டுப் போனார்கள்.

“யானை படுகுழியில் விழுந்துவிட்டது. மீண்டுவராது” என்று கம்ப்யூட்டர் உலக மேதைகள் ஜோசியம் சொன்னார்கள். தங்கள் ரட்சகராக ஐ.பி.எம். இயக்குநர் குழு தேர்ந்தெடுத்தவர், லூ கெர்ஸ்ட்னர் (Lou Gerstner).

தொழில்நுட்பப் படிப்போ, அனுபவமோ கொஞ்சமும் இல்லாதவர். ஓரியோ பிஸ்கட்கள் தயாரிக்கும் நபிஸ்கோ குழுமத்தின் சி.இ.ஓ. சின்னக் குழந்தைகளுக்கு பிஸ்கோத்து விற்பவர், சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி என்று ஓடி போனாரா அல்லது, புறமுதுகு காட்டாத புறநானூற்று வீரனாகக் கம்ப்யூட்டர் ராட்சசனின் சிக்கலுக்குத் தீர்வு கண்டாரா?

பதில் அடுத்த வாரம்.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்