வாழும் போதே நரகமாகும் வெனிசுலா

By ஜெ.சரவணன்

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழும் போதே நரகம் உறுதி. இது ஒரு தனிநபருக்கோ, குடும்பத்துக்கோ, ஒரு ஊருக்கோ அல்ல, ஒரு நாட்டுக்கே நடந்திருக்கிறது. அதுவும் இன்றைய உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாட்டுக்கே நடந்திருக்கிறது. வெனிசுலா வாழத் தகுதியில்லாத நாடாக மாறி பல ஆண்டுகள் ஆகின்றன.

நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர். இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான கொள்கைகளாலும், போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது. வெனிசுலாவின் இன்றைய நிலை, இந்தியா உட்பட பல உலக நாடுகளின் எதிர்கால நெருக்கடிக்கான நிகழ்கால உதாரணம்.

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு. ஆனால், இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது?

2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது. எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம். எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது. ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. மாறாக ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழலும், சர்வாதிகாரமும் அதிகரித்தது. ஆட்சியைச் சேர்ந்தவர்கள் அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர். எந்தத் துறையையும் அவர்கள் வளர்க்க முற்படவில்லை.

இதனால் நாட்டின் உற்பத்தி துறை முற்றிலுமாக பாதித்தது. பெரும் பற்றாக்குறை உருவானது. உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு தாண்டவமாடியது. அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது. எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது. வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்துவந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாததால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது. எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவிலிருந்து வெளியேறிவிட்டன. விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

ஒரு முட்டைக்கு ஒரு மூட்டை பணம்

வெனிசுலாவில் இன்று நீங்கள் ஒரு முட்டை வாங்க வேண்டுமென்றால் ஒரு மூட்டை நிறையப் பணத்தைக் கொண்டுசெல்ல வேண்டும். அப்போதும்கூட உங்களால் முட்டை வாங்கிவர முடியுமா என்று தெரியாது. ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் விலை. உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.

காரணம் பணவீக்கம். 2014-ல் 69 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2016-ல் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவீதமாக உயர்ந்தது. இதற்கே அதிர்ச்சியா? இரண்டே வருடங்கள், 2018-ல் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவீதமாக உயர்ந்தது. வெனிசுலாவின் நாணயமான பொலிவரியன் இன்று டாலருக்கு நிகரான மதிப்பு மில்லியனில் இருக்கிறது. வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.

கொலை நடப்பதில் முதலிடம்

வெனிசுலாவின் எல்லா நிலை மக்களையும் இந்தப் பொருளாதார நெருக்கடி பாதித்தது. 2017-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர். 90 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள். நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

வெனிசுலாவில் ஆசிரியர், வழக்கறிஞர், நடிகை என மிக மரியாதையாக வாழ்ந்து வந்த பெண்கள் கூட பாலியல் தொழிலாளிகளாகப் பல்வேறு நாட்டில் தஞ்சமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனில், வீட்டுப் பெண்களின் நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. கொலை நடப்பதில் உலக நாடுகளில் முதலிடத்தில் வெனிசுலா இருக்கிறது.

குற்றங்கள் அதிகரிக்கின்றன. திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்துவருகின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பஞ்சமும் பசியும் கூட எதையும் செய்யும். ஆனால், பணத்திமிரையும், பசியையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதுதான் உலகத்தின் நீதி.

மாற்றம் நிகழ்த்தாத மதுரோ

அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.

மாறாக, தன்னுடைய ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளில்தான் மும்முரமாய் இருக்கிறார். மதுரோ, மேல்தட்டு மக்களுக்குச் சாதகமான சர்வாதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.

எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், எதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. தினந்தினம் மக்கள் பலியாவது மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.

அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை. இந்த நாடுகளெல்லாம் தங்கள் எதிரியைத் தாக்குவதற்கு வெனிசுலாவை களமாக எடுத்துக்கொண்டிருக்கின்றன.

வெனிசுலா சொல்லும் பாடம்

இந்தியா உட்பட பலநாடுகளுக்கு வெனிசுலாவின் இன்றைய நிலை ஒரு பாடம். ஏனெனில் வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம். பொருளாதாரத்தைக் காப்பதில் அந்தந்த நாடுகள் தான் உஷாராக இருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் தாங்கள் செய்யும் செயலும், தாங்கள் எடுக்கும் முடிவும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலை உருவாகாமல் தடுக்கலாம். இன்றைய ஆதாயத்தை மட்டுமே கணக்கில் வைத்து எதைத் திட்டமிட்டாலும் அந்த நாடு நாசமாகும் நிலைதான் ஏற்படும். நீண்டகால அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள் தான் நிலையான பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் பொருளாதாரம் குறித்து தெளிவு வேண்டும். இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வேகம் ஆபத்தானது. நீடித்து வாழ வேண்டுமென்ற ஆசையிருப்பவர்கள்,  நிதானமாக வாழ வேண்டும்.

இந்தியா - வெனிசுலா

வெனிசுலா அரசு மயமாக்கலை முன்னெடுத்தது. ஆனால், ஜனநாயக முறைப்படி இல்லாமல் சர்வாதிகார முறைப்படி செயல்படுத்தியது. அதனால் வீழ்ச்சியடைந்தது. இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.

வளங்கள் உள்ளவரை மட்டுமே நம்மால் பணத்தைப் புரட்ட முடியும். பணத்தையெல்லாம் சேர்த்த பிறகு இறுதியில் வளங்கள் இல்லாத நிலை வரும்போது, அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது. ஒரு பொருளுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதை வைத்தே அந்தப் பணத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. வாங்குவதற்கு பொருளே இல்லை, பணம் மட்டும் கட்டுக் கட்டாய் இருக்கிறது என்றால் அந்தப் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அப்போது, நாமும் மூட்டைகளில் பணத்தைக் கொண்டு போய் கொடுத்து முட்டை வாங்கிவரலாம்.

- saravanan.j@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்