யு டர்ன் 02: ஆப்பிள் கம்பெனி – பால காண்டம்

By எஸ்.எல்.வி மூர்த்தி

ஆப்பிள் கம்பெனிக்கு ஒரு ராசி. கல்யாண வீட்டில் மாப்பிள்ளை, சாவு வீட்டில் பிணம். மேலே நிற்கும்போதும், கீழே விழும்போதும், ஊடகப் பளிச். கம்பெனி தொடங்கிய 1976 – முதல், இன்றுவரை 43 ஆண்டுகளாய் இப்படித்தான்.

இன்று 229 பில்லியன் டாலர்கள் (சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்) விற்பனை. உலகக் கம்பெனிகள் வரிசையில் 11 – ஆம் இடம். லாபத்தில், அமெரிக்காவில் முதல் இடம். அழகு கொஞ்சும் தயாரிப்புகள். புதிய தயாரிப்பு வருகிறது என்று அறிவிப்பு வந்தவுடனேயே, யானை விலை, குதிரை விலை கொடுத்து வாங்கக் கடைகள் முன்னால் க்யூவில் நிற்கும் ரசிகர்கள் (கஸ்டமர்கள்) கூட்டம்.

1985-ஆப்பிள் கம்ப்யூட்டர்களை வாங்குவாரில்லை. நஷ்டம், நஷ்டம். முழுகும் கப்பலிலிருந்து ஓடும் பயணிகள் போல், வேலையை விட்டுத் தாவும் ஊழியர்கள். கண்ணீர் அஞ்சலியோடு தயாராக இருக்கும் ஊடகங்கள். 34 வருடங்களுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் ஆன அதே ஆப்பிள் கம்பெனியா இன்று, “நான் செத்துப் பிழைச்சவன்டா” எனப் பாடுகிறது? நம்ப முடியாத நிஜம்.

***********

ஸ்டீவ் ஜாப்ஸுக்குச் (சுருக்கமாக ஸ்டீவ்) சிறு வயது முதலே படிப்பில் விருப்பமில்லை. ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் அவரை ஈர்த்தது. கல்லூரியில் சேர்ந்தார். ஆறே மாதங்களில் படிப்பை விட்டார். ஸ்டீவ் வாஸ்னியாக் (செல்லப் பெயர் வாஸ்) என்னும் இளைஞரைச் சந்தித்தார். இவர் உடம்பு முழுக்க மூளை. மூளை முழுக்க எலெக்ட்ரானிக்ஸ். 1975 – ஆம் ஆண்டு. தன் 25 – ஆம் வயதில் பாகங்களை வாங்கிக் கம்ப்யூட்டர் தயாரித்தார். ஸ்டீவ் அசந்துபோனார். இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் தயாரிக்கலாம் என்று நண்பரை வற்புறுத்தினார்.

ஆசை சரி. பணம் வேண்டுமே? 1,300 டாலர் மூலதனம் தேவைப்பட்டது. இது பெரிய தொகை அல்ல. ஆனால், இருவரின் குடும்பத்திலும் வசதி குறைவு. ஸ்டீவின் அப்பா பழைய கார் வியாபாரி. மகனுக்கு ஒரு பழைய கார் கொடுத்திருந்தார். வாஸிடம் பொக்கிஷமாக ஒரு கால்குலேட்டர் இருந்தது. நண்பர்கள் “சொத்துகளை” விற்றார்கள். முதலீடு செய்தார்கள். ஏப்ரல் 1, 1976. முட்டாள்கள் தினத்தில் ஸ்டீவ் வீட்டுக் கார் நிறுத்துமிடத்தில் (Garage) சுமார் 300 சதுர அடியில் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி தொடங்கியது. தொழிற்சாலை, தலைமை அலுவலகம் எல்லாமே இதுதான்.

வாஸ் செய்த முதல் கம்ப்யூட்டருக்கு ஸ்டீவ் வைத்த பெயர் ஆப்பிள் 1. தயாரிப்புச் செலவு 220 டாலர்கள். மார்க்கெட்டில் புதிதாக நுழையும் கம்பெனிகள் கஸ்டமர்களைத் தங்கள் வசம் இழுப்பதற்காக விற்பனை விலையையும், லாபத்தையும் குறைவாக வைத்துக்கொள்வார்கள். ஸ்டீவ் வித்தியாசமானவர். தயாரிப்புப் பொருள் கனகச்சிதமாக இருந்தால், கஸ்டமர்கள் அதிக விலை தரத் தயங்கமாட்டார்கள் என்பது அவர் கணிப்பு. 500 டாலர்கள் விலை நிர்ணயித்தார். சில நாட்களிலேயே 50 கம்ப்யூட்டர்கள் ஆர்டர்.

ஆப்பிள் 1

ஸ்டீவ் இப்போது தன் பிசினஸ் திறமையைக் காட்டினார். வெறும் கையால் முழம் போடும் திறமை. 50 கம்ப்யூட்டர்கள் தயாரிப்பதற்கான பாகங்கள் வாங்கப் பணம் இல்லை. பாகங்கள் விற்கும் கடைக்குப் போனார். கையில் இருக்கும் ஆர்டரைக் காட்டினார். 30 நாட்கள் கடனில் பாகங்கள் தரக் கடைக்காரர் சம்மதித்தார்.

இவற்றை அசெம்பிள் செய்யத் தொழிலாளிகள் வேண்டுமே? தன் தங்கை, நண்பர், அவர் கேர்ல் ஃப்ரண்ட் ஆகியோரைத் துணைக்கு அழைத்தார். அவர்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு டாலர் கூலி. கடனில் பாகங்கள் வாங்கி, சல்லிசு ரேட்டில் சம்பளம் கொடுத்து, ஒரே மாதத்தில் 25,000 டாலர்கள் விற்பனை. 1,300 டாலர் முதலீட்டில், ஒரே மாதத்தில் நிகர லாபம் 14,000 டாலர்கள். அடுத்த மாதம் இன்னும் 50 கம்ப்யூட்டர்களுக்கான ஆர்டர்கள்.

ஸ்டீவுக்குத் திருப்தியே கிடையாது. ஆப்பிள் 1 வசூல் ராஜாவானவுடன் அவர் சிந்தனையெல்லாம், அடுத்த மாடல். ஆப்பிள் 2. முதல் தயாரிப்பைக் கம்ப்யூட்டர் ரசிகர்கள் மட்டுமே வாங்கினார்கள். பாமர வாடிக்கையாளரும் ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமானால், அது பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும், பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும் என்பது ஸ்டீவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதுவரை இருந்த கம்ப்யூட்டர்களில் கறுப்பு, வெள்ளை நிறங்களை மட்டுமே காட்ட முடியும். ஆப்பிள் 2 வண்ணத்திரையையும், கிராஃபிக்ஸையும் கொண்டுவந்தது. பேஸிக் என்னும் அடிப்படைக் கம்ப்யூட்டர் மொழி மட்டுமே தெரிந்த அனைவருமே பயன்படுத்தும்படியான எளிமை.

தொழில்நுட்பம் மட்டுமல்ல, தோற்றமும் ஸ்டீவுக்கு அழகாக இருக்கவேண்டும். ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மரப்பலகையின்மேல் வைக்கப்பட்டிருந்தது. கம்ப்யூட்டரைத் திறந்தபடி வைக்கக்கூடாது, கேஸிங் (casing) கினுள் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

கேஸிங்கை மரத்தால் செய்தால் பார்க்கக் கவர்ச்சியாக இருக்காது. மிக்ஸி போன்ற அடுக்களை எந்திரங்கள் கண்களைக் கவரும் கலர் கலர் பிளாஸ்டிக்கில் இருப்பதைப் பார்த்தார்.

ஆப்பிள் 2 – வில் இதைச் செய்ய முடிவெடுத்தார். 2 லட்சம் டாலர்கள் செலவாகும். 18 மாத பிசினஸில் வரும் ஒட்டுமொத்த லாபம். வெறும் அழகுக்கு இத்தனை பணம் ஆரம்பநிலைத் தொழில் அதிபர்கள், இல்லை, இல்லை, அனுபவசாலிக் கம்பெனிகள் கூடச் செலவழிக்கமாட்டார்கள். ஸ்டீவுக்குக் கஸ்டமர்கள் முக்கியம். அவர்களுக்குச் சுகானுபவம் தரவேண்டும். இதற்காக எந்த விலையும் கொடுக்கலாம். மைக் மார்க்குலா என்பவரிடம் பணம் வாங்கினார்கள். அவரை மூன்றாவது பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டார்கள். மைக், தன் சார்பாக மைக்கேல் ஸ்காட் என்னும் தன் நண்பரை சி.இ.ஓ – வாக நியமித்தார்.

ஆப்பிள் 2

ஆப்பிள் 1, ஆப்பிள் 2 – இரண்டு கம்ப்யூட்டர்களின் படங்களை இன்னும் ஒருமுறை பாருங்கள். கலை நயமே இல்லாத மரப்பெட்டியாக ஆப்பிள் 1. அழகு கொஞ்சும் ஆப்பிள் 2. கஸ்டமர்களின் ஆனந்த அதிர்ச்சிக்காகப் பணத்தையும், உழைப்பையும் கணக்குப் பார்க்காமல் கொட்டும் தீர்க்கதரிசி பிசினஸ்மேன் மட்டுமல்ல, நினைத்ததை முடிக்கும் பெரும் தலைவன், நாடி நரம்புகளில் ரசனை கொப்பளிக்கும் மகா கலைஞன் ஸ்டீவ் என்பது தெரியும்.

வாடிக்கையாளர்களின் நாடித் துடிப்பு எப்படித்தான் இந்த மனிதருக்கு இத்தனை துல்லியமாய்த் தெரியுமோ? அமெரிக்கா முழுக்க ஆப்பிள் 2 பற்றித்தான் பேச்சு. விற்பனை எகிறியது.

1977 - 7,75,000 டாலர்கள்

1979 - 5,00,000,00 டாலர்கள்

1980 - 10,00,000,00 டாலர்கள்

அமெரிக்க பிசினஸ் வரலாற்றிலேயே எந்தத் தயாரிப்புப் பொருளும் இத்தனை வளர்ச்சி காட்டியதில்லை என்று பிரபல பத்திரிகையான ஃபார்ச்சூன் சொன்னது.

திருப்தி அடையாதவர் ஸ்டீவ் மட்டும்தான். 1980 – இல் ஆப்பிள் 3 மாடல் கொண்டுவந்தார். சின்னச் சின்ன முன்னேற்றங்கள். 1,298 டாலர்களில் ஆப்பிள் 2 விற்றுக்கொண்டிருந்தபோது, 3 – இன் விலை 3,495 டாலர்கள். இத்தனை விலை கொடுக்கக் கஸ்டமர்கள் தயாராக இல்லை. ஆப்பிள் 2 - வே போதும் என்று நினைத்தார்கள். ஆப்பிள் 3 பயங்கரத் தோல்வி கண்டது.

வேறு யாராவதாக இருந்தால் சூடுபட்ட பூனையாகச் சுருண்டிருப்பார்கள். ஸ்டீவ் அடிபட்ட பாம்பு. கீழே விழுந்தவர் வெறியோடு எழுந்தார். லிஸா என்னும் அடுத்த மாடல் தயாரிக்கும் திட்டம். கற்பனையை மிஞ்சும் தொழில்நுட்ப மாற்றங்கள், முன்னேற்றங்கள். அதுவரை இருந்த கம்ப்யூட்டர்கள் செயலாற்றிய விதம் இப்படித்தான். ஹார்ட் டிரைவில் இருந்து Ramesh என்கிற ஃபைலை ஃப்ளாப்பி டிஸ்க்குக்குக் காப்பி எடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

copy c:/docs/myfolder/Ramesh:/ கம்ப்யூட்டரிலிருந்து Ramesh என்கிற ஃபைலை நீக்க, Del c:/docs/myfolder/Ramesh என்று டைப் அடிக்கவேண்டும். மிகச் சிரமமான வேலை. ஸ்டீவ் கிராஃபிக் யூஸர் இன்டர்ஃபேஸ் (Graphic User Interface) என்னும் அட்டகாசத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்தார்.

இதனால், மவுஸை நகர்த்துவதன் மூலம் கம்ப்யூட்டரின் திரையில் காணப்படும் குறிப்பான்களை (Icons) நகர்த்தலாம், வேண்டிய பணிகளை எளிதாகச் செய்யலாம். நாம் இன்று இதைத்தான் செய்கிறோம். கம்ப்யூட்டர்களைச் சாமானியர்களின் உபயோகப் பொருளாக்கிய புரட்சி இது. ஸ்டீவ் இல்லாவிட்டால், நாம் கீ போர்டில் டைப் செய்து திணறிக்கொண்டிருப்போம்.

லிஸா குழுவில் இருந்த பெரும்பாலான எஞ்சினீயர்கள் ஹ்யூலட் பக்கார்ட், ஐ.பி.எம். போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து வந்தவர்கள். பிரம்மாண்டக் கம்ப்யூட்டர்கள் வடிவமைத்துத்தான் அவர்களுக்குப் பழக்கம். எனவே, ஸ்டீவின் கனவை முட்டாள்தனமானதாக நினைத்தார்கள். மூன்றாம் பங்குதாரர் மைக், சி.இ.ஓ. ஸ்காட் ஆகியோருக்கும் இதே நினைப்புத்தான்.

1980 - இன் பிற்பகுதி. கம்பெனியின் பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்தார்கள். ஸ்டீவ் தான் கம்பெனியின் பொதுஜன முகம். ஆகவே அவர் சேர்மேனாக வேண்டும் என்று மைக் சொன்னார். இது பதவி உயர்வல்ல, லிஸா திட்டத்தை ஸ்டீவ் கையிலிருந்து பறிக்கும் சதி.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்