இந்தியாவை வல்லராசாக்கியே தீருவேன் என்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். ஆனால், இரண்டு பெரிய வல்லரசு நாடுகளே இன்று பெரும் தள்ளாட்டத்தில்தான் இருக்கின்றன. ஒருபக்கம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரெக்சிட் ஒப்பந்தத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் தோல்வியடைந்து இருக்கிறார்.
மறுபக்கம் அமெரிக்க அரசாங்கமே ஒரு மாத காலமாக செயல்படாமல் வேலை நிறுத்தத்தில் இருக்கிறது. இதற்குமுன் பலமுறை அமெரிக்க அரசு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது என்றாலும், 30 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தம் நடப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.
பெடரல் அரசு வேலைநிறுத்தம்
அத்துமீறி முறைகேடாக நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுப்பதற்காக, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். ஆனால், இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதில் ஏற்பட்ட சிக்கலால், சுவர் எழுப்புவதற்கு 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரும் வரை எந்தவொரு அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் கையெழுத்திட முடியாது என முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.
இதனால் அமெரிக்க அரசின் பெரும்பகுதியினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலமாக வேலைநிறுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பல்வேறு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. துப்புரவுப் பணி நடக்காமல் பொது இடங்கள் குப்பைக் கூடாரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.
2016-ம் ஆண்டு இறுதியில் இந்தியா பண மதிப்பு நீக்கம் என்ற அதிர்ச்சியைச் சந்தித்தது போலவே, அமெரிக்காவும் டொனால்டு ட்ரம்ப் என்ற அதிர்ச்சியைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லோரும் ஹிலாரிதான் அதிபராவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் எப்படித்தான் ட்ரம்ப் அதிபர் ஆனாரோ தெரியவில்லை என்பதுதான் பேச்சாக இருந்தது. `ஹிலாரி ஓர் அமைதிப் புறா. ஆனால், அமெரிக்காவுக்கு என்னைப் போன்ற ஒரு கழுகுதான் தேவை' என்று சொல்லி சிம்மாசனத்தில் ஏறியவர் ட்ரம்ப்.
அரசியலில் பல ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் உண்மையான உலக அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிலெல்லாம் பரிச்சயம் இல்லாத ட்ரம்ப், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே அதிபரானார். (அமெரிக்க அரசியலில் கேப்ரிட்ஜ் அனாலிட்டிவும் ஃபேஸ்புக்கும் இணைந்து நடத்திய பித்தலாட்டம் தான் ட்ரம்ப்பை வெற்றிபெற வைத்திருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்) அதிபராகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. அமெரிக்கர்களுக்கு அவர் தருவதாகச் சொன்ன எதுவுமே கிடைக்கவில்லை. மாறாக முழுக்க முழுக்க இழப்பும், நஷ்டமும் கூடவே தலைவலியும்தான் மிச்சமானது.
பெடரல் அரசில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 28 லட்சம். ஆனால், தனியார் துறையில் வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 12.7 கோடி. பெடரல் அரசிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் பெடரல் அரசின் வேலை நிறுத்தம் பெரிய அளவில் வெடிக்கவில்லை.
ஆனால், இந்த நிலையே தொடர்ந்தால் நிச்சயம் அமெரிக்க அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வீதியெங்கும் மக்கள் போராட்டங்களைச் செய்துவருகின்றனர். ட்ரம்பை நீக்குங்கள். அரசை செயல்படாமல் வைக்காதீர்கள் என்று கோஷமிடுகிறார்கள் மக்கள்.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்பு, கையில் துளி அதிகாரம் இல்லை. அப்போதே அனைவரையும் ஏகபோகமாக விலாசியவர் ட்ரம்ப். இப்போது உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாட்டின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கிறார். சும்மா இருப்பாரா?
“காங்கிரஸை மீறி செயல்பட என்னால் முடியும். தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தி மெக்சிகோ எல்லையில் சுவரை கட்டுவேன்” என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். சுவருக்கான நிதி ஒதுக்கப்படும் வரை எந்த மசோதாவிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
அனைத்து ஆலோசகர்களும் ட்ரம்பின் செயல்பாடுகளால் அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய பிரச்சினை உண்டாகும் என்று எச்சரித்துள்ளனர். இவர் செவி சாய்க்கவே இல்லை. ஏற்கெனவே சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் தொய்வு உள்ளது. சீனா, ஈரானுடன் வர்த்தகப் போரையும் தொடங்கியுள்ளார். இப்படி பல்வேறு நெருக்கடியில் உள்ள நிலையிலும் தொடர்ந்து தன் விளையாட்டு தனத்தில் பிடிவாதமாக இருக்கிறார் ட்ரம்ப். "அரசினை பல மாதங்கள், ஏன் பல ஆண்டுகள் கூட முடக்க தயாராக இருக்கிறேன்” என்கிறாராம்.
முழு முதலாளித்துவத்தின் முகம்
இதுவரையிலும் தான் செய்த எந்தவொரு பொருளாதாரக் குற்றங்களுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் அவர் அலட்டிக் கொண்டதும் இல்லை. எதற்கும் மன்னிப்புக் கேட்டதும் இல்லை. அதிபராகி இதுவரை இவர் எடுத்த எந்த முன்னெடுப்புகளுமே விமர்சனத்தைச் சந்திக்காமல் இல்லை. எதுவுமே அமெரிக்கர்களுக்குச் சாதகமானதும் இல்லை. எதற்கும் எந்தச் சலனமும் அவரிடம் இல்லை. எதைக் கேட்டாலும் இதைத்தான் பதிலாகச் சொல்கிறார்.
மக்கள் இதையெல்லாம் மறந்துவிடுவார்கள், பிடிவாதமாக இருந்து நினைத்ததை சாதித்த ட்ரம்ப்பை நினைவில் கொள்வார்கள். இப்படி ஒரு தலைவன் நினைக்கும்போது, அந்த நாடு எப்படிப்பட்டதாக இருக்கும். என்னால் முடியும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே எதையும் செய்ய நினைக்கும் தலைவர்களிடம் நாடு சிக்கினால் இதுதான் கதி என உணர்த்துகிறார்.
தவறும் செய்துவிட்டு, தவறையும் ஒப்புக்கொள்ளாமல், தன்னை திருத்தியும் கொள்ளாமல் இருக்கும் தலைவனால் எத்தனை பெரிய ஆபத்து வரும் என்பதை விரைவில் அமெரிக்கா உணரத்தான் போகிறது. அமெரிக்காவைப் பார்த்து பயந்தவர்கள், இனி அமெரிக்காவைப் பார்த்து பரிதாபப்படும் நிலையும் உருவாகலாம்.
ஒருமுறை ஜெயித்துவிட்டதால் மட்டுமே என்ன செய்தாலும் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தை இந்த அரசியல்வாதிகளுக்குக் கொடுப்பது யார்? சமீபத்தில், முட்டாள் என கூகுளில் தேடினால் ட்ரம்ப் பெயர் ஏன் வருகிறது என்று சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க அரசு கேள்வி எழுப்பியது. ஆனால், அப்படி கூகுள் காட்டியதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.
- saravanan.j@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago