யு டர்ன் 04: ஆப்பிள் கம்பெனி – யுத்த காண்டம்

By எஸ்.எல்.வி மூர்த்தி

ஸ்டீவ் ‘‘நோயாளி”யை அங்கம் அங்கமாகப் பரிசோதிக்கத் தொடங்கினார். எந்த நடவடிக்கையும் எடுக்கும் முன்பு, கம்பெனியின் தற்போதைய நிலை என்ன, ஏன் சரிவு வந்தது என்ற ஸ்டீவின் ஆழமாகப் புரிந்துகொள்ளும் தேடல். பலவித மாடல்களை உருவாக்குபவர்கள், மென்பொருள் எழுதுபவர்கள் என ஏராளமான குழுக்கள் இருந்தன.

ஒரு குழு என்ன செய்கிறதென்று அடுத்தவருக்குத் தெரியாத தீவுகளாய். முதல் சில வாரங்களுக்கு ஸ்டீவின் ஒரே வேலை இந்தக் குழுக்களை ஒவ்வொன்றாகச் சந்திப்பதுதான். குழு தாங்கள் செய்யும் பணிகளை விலாவாரியாக விளக்கவேண்டும். நீதிமன்றத்து எதிர்க்கட்சி வக்கீல் போல் ஸ்டீவ் கேள்விகளால் துளைத்து எடுப்பார். மேலோட்டமாக பதில் கொடுத்து யாரும் அவரை டபாய்க்க முடியாது. சில வாரங்கள். விவரங்கள் அத்தனையும் அவர் சுண்டு விரலில்.

ஆப்பிள் கம்பெனி அன்று 42 வகையான கம்ப்யூட்டர்களைத் தயாரித்துக்கொண்டிருந்தது. இதைத் தவிர லேசர் பிரின்டர் பல மில்லியன் டாலர் வருமானம் தந்தது. அண்மையில் நியூட்டன் என்னும் கைக் கம்ப்யூட்டர் (Hand-held Device) சந்தையில் தன் முதல் வருடத்தை முடித்திருந்தது, லாபம் காட்டத் தொடங்கியிருந்தது.

ஸ்டீவ் அதிரடி ஆக் ஷன் ஆரம்பம். அவர் எடுத்த முக்கிய முடிவுகள்:

1. இனிமேல் நான்கு வகையான கம்ப்யூட்டர்கள் மட்டுமே தயாரிப்போம். ஆப்பிள் கம்ப்யூட்டரின் மிகப் பெரிய பலமே, வாடிக்கையாளர் செம ஈஸியாகப் பயன்படுத்த முடியும் கருவி என்பதுதான். 42 மாடல்களைக் கொடுத்து அவர்களைக் குழப்பக்கூடாது.

2. கம்ப்யூட்டர்தான் ஆப்பிளின் பலம். கம்பெனியின் பணத்தையும், திறமைகளையும் கம்ப்யூட்டரில் மட்டுமே ஒருமுகப்படுத்த வேண்டும். லேசர் பிரின்ட்டர் போன்ற உதிரிகள் இன்று லாபம் தரலாம். ஆனால், தொலைநோக்கில் பார்த்தால், இவை நம் மூலதனத்தையும் திறமைகளையும் விரயம் செய்துவிடும்.

3. கைக் கம்ப்யூட்டர்களுக்கு எதிர்காலம் கிடையாது. எனவே, நியூட்டன் கைக் கம்ப்யூட்டர்களின் தயாரிப்பும், விற்பனையும் நிறுத்தப்படும்.

``மாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் விற்பனை இன்னும் சரியும். கஸ்டமர்கள் விரும்பி வாங்கும் நியூட்டனை நிறுத்துவது பைத்தியக்காரத்தனம்” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள். நன்றாக விற்பனையாகும், லாபம் கொடுக்கும் பொருட்கள் வேண்டாம் என்று முடிவெடுப்பது படு ரிஸ்க்கான வேலை. இலக்கில் தெளிவும், போகும் பாதையில் உறுதியும், நெஞ்சில் துணிச்சலும் கொண்டவர் மட்டுமே இந்த முடிவுகளை எடுக்க முடியும். எடுத்தார்.

பலன் கைமேல். இந்த முடிவுகளால், ஆப்பிளின் சரக்குக் கையிருப்பு 400 மில்லியன் டாலர்களிலிருந்து 100 மில்லியன் டாலர்களாகக் குறைந்தது. கம்பெனிக்கு சேமிப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்துக்கு 12 மில்லியன் டாலர்.

கடாசப்பட்ட 38 மாடல்கள், லேசர் பிரின்ட்டர், நியூட்டன் ஆகிய புராஜெக்ட்களில் ஏராளமானோர் வேலை பார்த்தார்கள். இவைதவிர, எல்லா சாஃப்ட்வேர் புராஜெக்ட்களையும் ஸ்டீவ் நிறுத்தினார். இவர்களுள், மிகத் திறமைசாலிகளான சிலர் தவிர சுமார் 3,000 பேரை வேலையிலிருந்து நீக்கினார். கம்பெனியின் எதிர்காலம் தொங்கலில் இருக்கும்போது, தலைவன் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்பது அவர் கருத்து. மாதாந்திரச் செலவு குறைந்தது.

கம்ப்யூட்டர் தயாரிப்புச் செலவில் சிப் முக்கிய அம்சம். ஆப்பிள் அப்போது, ஐ.பி.எம், மோட்டரோலா ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்துதான் சிப் வாங்கியது. ஸ்டீவ் அவர்களைச் சந்தித்தார்.

``நாங்கள் இனிமேல் இரண்டு பேரிடம் சிப் வாங்கப் போவதில்லை. ஒருவரிடம் மட்டுமே வாங்குவோம். விலையை எவ்வளவு குறைப்பீர்கள்? ''

அடிமாட்டு பேரம் பேசினார். சிப் வாங்கும் செலவு குறைந்தது.

ஸ்டீவின் அடுத்த செயல் யாருமே எதிர்பார்க்காத செயல். 1970 - கள் தொடங்கிக் கம்ப்யூட்டர் உலக நாயகர்கள் இருவர், ஸ்டீவ், பில் கேட்ஸ். ஆரம்பம் முதலே, காரணம் இல்லாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. மக்கின்டாஷ் கம்ப்யூட்டர் உருவாகும்போது, அதன் மென்பொருள் வடிவமைப்பை ஸ்டீவ் மைக்ரோஸாஃப்ட் கம்பெனிக்குக் கொடுத்தார். அங்கே ஆரம்பித்த மன வேறுபாடு நீதிமன்ற வழக்கானது, பல வருடங்கள் தொடர்ந்தது.  பில் கேட்ஸை ஜென்ம விரோதியாக நினைத்தார் ஸ்டீவ்.

1980 - களில் மைக்ரோஸாஃப்ட் வின்டோஸ் இல்லாத கம்ப்யூட்டர்களே கிடையாது என்ற நிலை. ஆப்பிளுக்கு இது பலவீனம். கம்பெனியின் வருங்காலத்துக்காக ஸ்டீவ் சுய கௌரவம் பார்க்காமல் பில் கேட்ஸிடம் ஆப்பிளுக்கு வின்டோஸ் உருவாக்கவும், ஆப்பிளில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும் கேட்டுக்கொண்டார். ஸ்டீவ் நட்புக் கரம் நீட்டியது ஆச்சரியம். பில் கேட்ஸ் இந்த வேண்டுகோள்களுக்குச் சம்மதித்தது அதைவிட ஆச்சரியம்.

ஒரே வருடம். ஆப்பிள் லாபம் காட்டியது. கம்பெனியின் தள்ளாட்டம் நின்றுவிட்டது, கம்பெனி நிலைத்து நிற்க, வளர, என்னென்ன செய்யலாம்? ஐ.பி.எம் தரும் போட்டியைச் சமாளிக்க வேண்டும். ஆப்பிள் - 2 மாடலின் காலம் முடிந்துவிட்டது. சிக்ஸ் பாக் ஐ.பி.எம் ஊதினால் மக்கின்ட்டாஷ் நோஞ்சான் பறந்துவிடுவான். எனவே, புதிய, மேம்பட்ட கம்ப்யூட்டர் மாடல் அவசியம், அவசரம். ஸ்டீவ் ஆயத்த வேலைகளைத் தொடங்கினார். அவருடைய இலக்குகள் தெளிவாக இருந்தன:

# விலை 1,200 டாலர்களைத் தாண்டக்கூடாது (ஆப்பிளின் கம்ப்யூட்டர்கள் எல்லாமே அன்று 2,000 டாலரும், அதற்கு மேலும் இருந்தன).

# அடுக்களைப் பொருட்கள், வீட்டு அவசியப் பொருட்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அழகிய தோற்றம் அவசியம், தொழில்நுட்பப் பொருட்களுக்குச் செயல்திறன் மட்டுமே தேவை, அழகு வேண்டாம் என்று எல்லாக் கம்பெனிகளும் நினைக்கிறார்கள். அழகுபடுத்துவதற்கான செலவுகள் அவர்களைப் பொறுத்தவரை வேஸ்ட். மிக்ஸியாக இருந்தாலும், கம்ப்யூட்டராக இருந்தாலும், சிம்பிளாக இருக்கவேண்டும், அழகாக இருக்க வேண்டும், முதல் பார்வையிலேயே கண்டோர் மனத்தை நச் என்று ஈர்க்க வேண்டும்.

வடிவமைப்பு என்பது வெளித்தோற்ற அழகு மட்டுமல்ல, அதையும் தாண்டி, தயாரிப்புப் பொருளின் ஜீவனைப் பிரதிபலிக்க வேண்டும். ஆகவே, நம் கம்ப்யூட்டர் தோற்றம் கருவிபோல் இருக்கக் கூடாது. அழகான பொம்மைபோல் இருக்கவேண்டும். யாருமே பார்த்திராத, எதிர்பார்க்காத வடிவத்தில் அமையவேண்டும்.

# புதிய கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதி இருக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் தயாரானது. அழகான கனசதுர வடிவம். பிளாஸ்டிக் கேஸிங். அதில் மேல் பாகம் நீல நிறம், கீழ்ப் பகுதி வெண்மை. பிளாஸ்டிக் ஒளி கசியும் தன்மை கொண்டது. அதனால், கம்ப்யூட்டரின் உள்பாகங்களைப் பார்க்க முடியும். பார்த்தோரை பயமுறுத்தும் தொழில்நுட்பக் கருவியாகப் போட்டியாளர்களின் கம்ப்யூட்டர்கள் இருந்தபோது, இந்த மாடல், அவர்களை “வா, வா, என்னோடு விளையாடு” என்று வரவேற்று அழைக்கும் அழகுப் பொம்மையாக இருந்தது.

iMac என்று பெயர் வைத்தார்கள். Mac என்பது மக்கின்ட்டாஷின் சுருக்கம். i இன்டர்நெட்டைக் குறிப்பிடுகிறது. தனி மனிதர்களுக்கான பெர்சனல் கம்யூட்டர் என்பதால், individual என்பதற்கான சுருக்கம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

1998 - இல் அறிமுகமான ஐ மாக் சக்கைப்போடு போட்டது. முதல் வருட விற்பனை எட்டு லட்சம். ஆப்பிளின் 22 வருட வரலாற்றில் வேறு எந்த மாடலும் தொட்டிராத சாதனை.

முதல் மாடல் நீல நிறம். அது சரி, எல்லோருக்குமே நீல நிறம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. வயலெட்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்பவருக்கு என்ன செய்யலாம்? ஸ்டீவ் வயலெட்நிறக் கம்ப்யூட்டர் கொடுத்தார். ஆரஞ்சு, பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களும் தொடர்ந்து வந்தன, வாடிக்கையாளர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

ஸ்டீவைப் பொறுத்தவரை, இவை முறையே ப்ளூ பெர்ரி (நீலம்), திராட்சைப் பழம் (வயலெட்), ஆரஞ்சு, எலுமிச்சை (பச்சை), சிவப்பு (ஸ்ட்ராபெர்ரி) ஆகிய பழங்களின் நிறங்கள். பழங்களின்மேல் ஸ்டீவுக்கு ஒரு காதல். கம்பெனியின் பெயர் தொடங்கி, தன் அபிமானக் கம்ப்யூட்டர்களுக்கும் பழங்களின் நிறத்தை பயன்படுத்த இந்தக் காதல் காரணம்.

அதுவரை, எல்லாக் கம்ப்யூட்டர்களும், வெண்மையும் காவி நிறமும் கலந்த பழுப்பு நிறத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்தன. கம்ப்யூட்டர் என்றாலே, அழுக்கு நிறத்தில் மொத்தையான பெரிய பெட்டிதான் முதலில் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தக் கண்ணோட்டத்தையே ஸ்டீவ் தலைகீழாக மாற்றிவிட்டார். கம்ப்யூட்டர் பயன்படுத்தச் சிக்கலான கருவி எனும் எண்ணம் மக்கள் மனங்களிருந்து மாறியது.

வாழ்வில் முதன் முறையாகக் கம்ப்யூட்டர் வாங்கியவர்களுள், 32 சதவிகிதம் பேர் வாங்கியது ஐ மாக்தான். முதல் முயற்சி மாபெரும் வெற்றி. கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், பிசினஸ்மேன் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம்தான் டானிக். ஸ்டீவின் கற்பனைக் குதிரை காற்றுவெளியிடை கம்பீரமாய்.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்