டிசம்பர் 10, 1980. ஆப்பிள் பங்கு வெளியீடு மகத்தான வெற்றி கண்டது. 10 டாலர் மதிப்பில் பங்குகள் வெளியிடப்பட்டன. அன்றே விலை 29 டாலர்களாக உயர்ந்தது. கம்பெனியின் 300 ஊழியர்கள் மில்லியனர்கள் ஆனார்கள். 25 வயது ஸ்டீவின் மதிப்பு 265 மில்லியன்.
அன்று கம்ப்யூட்டர் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஐ.பி.எம். கம்பெனி, ஆப்பிளின் மகத்தான வளர்ச்சியைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அலுவலகக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே தயாரித்து, பெர்சனல் கம்ப்யூட்டர் துறையைக் கை நழுவ விட்டுவிட்டோமே என்று உணர்ந்தார்கள். 1981 – இல் பெர்சனல் கம்ப்யூட்டர்களைக் களத்தில் இறக்கினார்கள். ஆப்பிளுக்கு சமமான தொழில்நுட்பம், ஐ.பி.எம். பிராண்ட், குறைந்த விலை. 1983 – இல் மார்க்கெட்டுக்கு வந்த லிஸாவை வாங்குவாரில்லை.
ஆப்பிள் கம்பெனியில் அப்போது லிஸா தவிர மக்கின்டாஷ் என்னும் கம்ப்யூட்டர் தயாரிக்கும் திட்டமும் நிறைவேறிக்கொண்டிருந்தது. அதற்கு ஜெஃப் ரஸ்கின் என்பவர் தலைவராக இருந்தார். குறைந்த விலையில், அதாவது 1,000 டாலருக்குள் கம்ப்யூட்டர் தயாரிப்பது அவர் குறிக்கோள். ஸ்டீவ் மக்கின்டாஷ் வேலைகளில் தலையிடத் தொடங்கினார். ஜெஃப் வெறும் மேனேஜர். கம்பெனி சேர்மனை எதிர்க்கமுடியுமா? வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போனார். மக்கின்டாஷ் ஸ்டீவ் கையில்.
இந்தக் காலகட்டத்தில், கம்பெனியில் சில முக்கிய மாற்றங்கள். வாஸ் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அவருக்கு ஆபத்தில்லை. ஆனால், ஆப்பிளின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டார்.
மார்க்கெட்டிங் திறமைசாலி ஒருவர் தன்னோடு கை கோர்த்தால், ஆப்பிளின் தயாரிப்புகள் உலகை மாற்றும் என்று ஸ்டீவ் நினைத்தார். பெப்ஸி கம்பெனியில் மார்க்கெட்டிங் தலைவராக இருந்த ஜான் ஸ்கல்லியைத் தலைவராக நியமித்தார். இருவருக்குள்ளும் விரைவில் வந்தது விரிசல்.
மக்கின்டாஷ் மட்டுமே ஆப்பிளைக் காப்பாற்ற முடியும் என்பது ஸ்கல்லி கணக்கு. அவர் திட்டப்படி விற்பனை விலை 1,000 டாலரைத் தாண்டக்கூடாது. ஸ்டீவ் இதற்குச் சம்மதித்தார். ஆனால், தரத்துக்காக அவர் செய்த செலவால், விற்பனை விலை 1,995 டாலர்கள் வைக்கவேண்டிய கட்டாயம்.
ஜனவரி 24, 1984. மக்கின்டாஷ் அறிமுகம். அட்டகாசமாகத் தொடங்கிய விற்பனை சர்ரென்று சரிந்தது. அதிக விலை, குறைவான வேகம், குறைவான மெமரி, பாகங்கள் சீக்கிரமே சூடாவதால், அதிக நேரம் உபயோகிக்க முடியாத நிலை போன்ற பல காரணங்கள். மானாவாரியாக ஸ்டீவ் செய்த பல லட்சம் டாலர்கள் விழலுக்கிறைத்த நீர். இயக்குநர்கள் ஸ்டீவை மக்கின்டாஷ் தலைமையிலிருந்து தூக்கினார்கள்.
சேர்மெனாகத் தொடரச் சொன்னார்கள். இது அதிகாரமே இல்லாத டம்மிப் பதவி! இந்தப் பதவிக்கும் வேட்டு வைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த அவமானம் வேண்டாமென்று, செப்டம்பர் 1985 –ல், சேர்மன் பதவியிலிருந்து ஸ்டீவ் தானே
ராஜினாமா செய்தார். கம்பெனி தொடங்கியவரையே வெளியே துரத்திய சோகம்! ஆப்பிள் இத்தோடு நிறுத்தவில்லை. கம்பெனி ரகசியங்களைத் திருடியதாக ஸ்டீவ் மேல் வழக்குத் தொடுத்தார்கள்.
கைகளில் திறமை இருந்தால், வருங்காலம் பயமில்லை. பல்கலைக் கழகங்களுக்கான அறிவியல் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் நெக்ஸ்ட் (Next) என்னும் கம்பெனி தொடங்கினார். லிஸா, மக்கின்டாஷ் தோல்விகளுக்குப் பிராயச்சித்தமாக ஒரு வெற்றிக் குதிரையைத் தயாரிக்கும் வெறி. இதற்காக வடிவமைப்பில் மாற்றங்கள் செய்துகொண்டேயிருந்தார்.
1986 - இல் தயாராக வேண்டிய கம்ப்யூட்டர் இரண்டு வருடம் கால தாமதமாய் 1988 - இல்தான் ரெடியானது. தயாரிப்பு விலை 6,500 டாலர்கள். பல்கலைக் கழகங்கள் 3,000 டாலர்களுக்கு மேல் தரத் தயாராக இல்லை. கஜானா காலியாகத் தொடங்கியது. நெக்ஸ்ட் கம்பெனியை விற்க ஸ்டீவ் முடிவு செய்தார்.
ஸ்டீவுக்கு நான்காம் தோல்வி. ஆப்பிள் 3, லிஸா, மக்கின்டாஷ், நெக்ஸ்ட். கலங்கினார். எல்லோருக்கும், ஒரு கதவு மூடும்போது ஒன்பது கதவுகள் திறக்கும். ஸ்டீவுக்கும் திறக்கத் தொடங்கின.
ஜார்ஜ் லூக்காஸ், அமெரிக்காவின் பிரபல சினிமாத் தயாரிப்பாளர், இயக்குநர். ஸ்டார் வார்ஸ், இந்தியானா ஜோன்ஸ் ஆகியவை இவருடைய தயாரிப்புகள். இவர் பிக்ஸார் (Pixar) என்னும் கம்பெனி நடத்தினார். கிராஃபிக்ஸ் வேலைகள் செய்வதற்கான ஸ்பெஷல் கம்ப்யூட்டர், அதற்கான மென்பொருள், அனிமேஷன் ஆகியவை தயாரித்தார்கள். அனிமேஷனுக்கு அன்றைய கால கட்டத்தில் அதிக வாய்ப்புகள் இருக்கவில்லை. இதனால், அன்று பிக்ஸர் உப்புமாக் கம்பெனியாக இருந்தது.
லூக்காஸுக்குத் திருமணத்தில் பிரச்சினை. விவாகரத்து. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப் பணத் தட்டுப்பாடு. உப்புமாவை விற்க முடிவு செய்தார். பணத்தேவையால், லூக்காஸ் அடிமாட்டு விலை 10 மில்லியன் டாலர்களுக்குக் கம்பெனியின் 70 சதவிகித உரிமையை ஸ்டீவுக்குத் தந்தார். மீதி 30 சதவிகிதத்தில், ஆளுக்குப் பதினைந்து சதவிகிதமாகக் காட்மல், ஸ்மித் ஆகிய இரு ஊழியர்களுக்கு. ஸ்டீவ் சேர்மன்.
ஸ்டீவ் 1,25,000 டாலர்கள் விலையில் புதிய கிராஃபிக்ஸ் கம்ப்யூட்டர் தயாரித்தார். ஐந்தாம் முறையாக ஸ்டீவ் கணிப்பு தப்பானது. வாங்குவாரில்லை. இப்போது எதிர்பாராத திருப்பம். 1988 -இல் பிக்ஸார், டின் டாய் (Tin Toy) என்னும் ஐந்து நிமிடக் கார்ட்டூன் குறும்படம் தயாரித்தார்கள். இந்தப் படம் ஆஸ்கார் பரிசு பெற்றது. சினிமாப் பெரும்புள்ளிகள் ஸ்டீவைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.
வால்ட் டிஸ்னி கம்பெனி தங்கள் கார்ட்டூன் படங்களைக் கம்ப்யூட்டர் அனிமேஷனில் தயாரிக்க முடிவு செய்தார்கள். ஒரு முழுநீளப் படம் தயாரிக்கும் பணியைப் பிக்ஸாரிடம் ஒப்படைத்தார்கள். டிக்கெட் வசூலில் எட்டில் ஒரு பங்கு பிக்ஸாருக்கு. அந்தப் படம், டாய் ஸ்டோரி (Toy Story). உலகின் முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் படம். 1995 - இல் வெளியான டாய் ஸ்டோரிக்குச் செலவு 30 மில்லியன் டாலர்கள். வசூல் 362 மில்லியன் டாலர்கள். பிக்ஸார் உயிர் பிழைத்தது. பணம் கொட்டியது.
ஸ்டீவ் ஆப்பிளை விட்டுத் துரத்தப்பட்டு பிக்ஸார் வெற்றி வரை பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பல மாற்றங்கள். ஆப்பிளின் கம்ப்யூட்டர்களில் ஆப்பிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS) மட்டுமே உபயோகப்படுத்தும்படி ஸ்டீவ் வடிவமைத்திருந்தார். 1990 - இல் மைக்ரோஸாஃப்ட், கிராஃபிக் இன்டர்ஃபேஸ் (Graphic Interface) கொண்ட வின்டோஸ் 3.0 என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்தார்கள்.
இது ஆப்பிள் தவிர்த்த மற்ற எல்லாக் கம்ப்யூட்டர்களுக்கும் பொருந்தும் சிஸ்டம். ஐ.பி.எம், காம்பாக், டெல் போன்றோர் வின்டோஸ் 3 – க்கு மாறினார்கள். கஸ்டமர்களும் இந்தக் கம்ப்யூட்டர்களுக்கு. மக்கின்டாஷ் விற்பனை விழுந்தது.
ஸ்டீவின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்கல்லி துரத்தப்பட்டார். மியூசிக்கல் நாற்காலி போல் பலர் ஆப்பிளின் தலைவர்களாக வந்தார்கள். பலன் பூஜ்யம். 1995 - இல் தலைவராக வந்தார் கில் அமெலியோ. வின்டோஸ் 3.0 - வுக்கு இணையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்கின்டாஷில் கொடுக்க முடிந்தால், கம்பெனியின் தலைவிதியை மாற்றி எழுத முடியும் என்று சரியாகக் கணித்தார். இந்தத் திறமை ஆப்பிளில் இருக்கவில்லை.
மென்பொருள் தயாரிக்கும் கான்ட்ராக்டை நெக்ஸ்ட்டுக்குத் தந்தார்கள். துல்லியத்தைப் பார்த்து அசந்துபோனார்கள். நெக்ஸ்ட் கம்பெனியை விலைக்கு வாங்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு அங்கமாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் புராஜெக்ட்டுக்குத் தலைமையேற்று நடத்தும்படி ஸ்டீவிடம் கேட்டுக்கொண்டார்கள். ஸ்டீவ் மறுத்தார். தனக்குப் பகுதிநேர ஆலோசகராக இருக்குமாறு அமெலியோ வேண்டினார். ஸ்டீவ் சம்மதித்தார்.
ஸ்டீவ் திட்டமே வேறு. அமெலியோ அதிக நாள் தாக்குப் பிடிக்கமாட்டார். அவர் போனவுடன், கம்பெனியைக் கையில் எடுக்கவேண்டும். நினைத்தபடியே நிகழ்வுகள் நகர்ந்தன. 1996. ஆப்பிளின் இருபது வருட வரலாற்றில் முதன் முதலாக நஷ்டம். அதுவும், கொஞ்ச நஞ்சமில்லை, 816 மில்லியன் டாலர்கள் நஷ்டம். ஓஹோவென்றிருந்த கம்பெனி திவாலாகும் நாட்களை எண்ணத் தொடங்கியது.
ஆப்பிள் கம்பெனி இயக்குநர்கள் மூழ்கும் கப்பலைக் கரையேற்றும் கேப்டனைத் தேடினார்கள். அவர்கள் கண்களுக்குத் தெரிந்தவர் ஒரே ஒருவர்தான். 12 வருடங்களுக்கு முன்னால், ஆப்பிளை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்று யாரைத் துரத்தினார்களோ, தொழில் ரகசியங்களைத் திருடினார் என்று யார் மீது வழக்குத் தொடுத்தார்களோ, அதே ஸ்டீவ்.
ஸ்டீவுக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள். நம் ஹீரோ, பிக்ஸார் நடத்தவே நேரம் போதவில்லை, எனவே வேண்டவே வேண்டாம் என்று பாவ்லா காட்டினார். பிக்ஸார் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த காலம் அது. எனவே, இந்த ரீலை டைரக்டர்கள் நம்பினார்கள். வேறு வழியில்லை. கெஞ்சினார்கள். ஸ்டீவ் “சம்மதித்தார்.”
1997. அமெலியோ வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஸ்டீவ் தற்காலிக சி.இ.ஓ ஆனார். அவருக்கு முன், இமாலயச் சவால் - ஆப்பிள் அவர் குழந்தை. அவனைச் சாகவிடவே கூடாது. தீவிர சிகிச்சை ஸ்டார்ட்.
(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago