சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் மூலம் 1% பொருட்கள் மட்டுமே 28% வரிவிதிப்பிற்கு கீழ் உள்ளது. ஏனைய 99% பொருட்கள் 18% வரிவிதிப்பிற்கு கீழே உள்ளன. 28% வரிவிதிப்பில் சிமெண்ட், வாகன டயர்கள், ஆடம்பர கார்கள் போன்றவை அடங்கும்.
ஜிஎஸ்டி சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை 30 முறைக்கு மேலாக சந்தித்து கிட்டத்தட்ட 950 முடிவுகளை அவ்வப்போது எடுத்ததால் ஜிஎஸ்டி இந்தியாவில் அதிக அளவு சிக்கல்களை ஏற்படுத்தவில்லை.
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஜிஎஸ்டி அதிக சிரமம் இல்லாமல் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். உலகில் சுமார் 160 நாடுகளில் ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகள் இருந்துவந்தாலும் பெரும்பாலான நாடுகளில் இரட்டை அடுக்குகளில் வரிவிகிதங்கள் உள்ளன. இந்தியா போல 4 அடுக்கு வரிவிகிதங்கள் மிகமிக குறைந்த அளவு நாடுகளில் மட்டும்தான் உள்ளது. அரசு இதனைக் குறைக்க முயற்சி செய்து வந்தாலும் இது ஒரு பகீரத பிரயத்தனம் போல்தான் காணப்படுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள், வியாபாரிகள், சிறுதொழில் மற்றும் ஏனைய தொழில் அமைப்புகளிடம் கருத்து கேட்டு அரசு உடனடி முயற்சிகள் எடுத்து வந்தாலும் வரிதாரர்கள் சந்திக்கும் சவால்கள் பல. விடை தெரியாமல் விழி பிதுங்க வைக்கும் சில சிரமங்களும் உள்ளன. நிச்சயமாக இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் கூடிய விரைவில் தீர்வு காண முடியும் என்று நம்பலாம்.
வரித்தாக்கலில் உள்ள சிரமங்கள்
1. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய போது மூன்று வரித்தாக்கல் படிவங்கள் GSTR-1, GSTR-2 மற்றும் GSTR-3 குறிப்பிடப்பட்டு, படிவங்களுக்குள் ஏற்படும் தவறுகளை GSTR 3ன்படி சரி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், GSTR-3B என்ற படிவம் தற்காலிகமாக சமர்ப்பிக்க வரைமுறை செய்யப்பட்டது. வரிதாரர் தெரியாமல் செய்த தவறுகளை சரி செய்ய இந்தப் படிவத்தில் ஏற்பாடு செய்யவில்லை.
மேலும் இதுவரை செய்யப்பட்ட தவறுகள் சரி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பல நிறுவனங்கள் சரியான முறையில் வரி செலுத்த இயலாமலும், தவறுகளை சரி செய்ய இயலாமலும் தடுமாற்றமடைகின்றன. ஆண்டு வரித்தாக்கல் படிவம் சமர்ப்பிக்க தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் படிவம் 3B சரி செய்ய வாய்ப்பு அளிக்கவேண்டியது அவசியம். இதை அரசு கவனிக்கும் என்ற திர்ப்பார்ப்பு உள்ளது.
2. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு முன் இருந்த வரிவரவை (Tax Credit)
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய பின் Trans-1 படிவம் தாக்கல் செய்வதன் மூலம் அடுத்த ஆண்டு எடுத்துச் செல்ல முடியும். இந்த Trans-1 என்கிற வரிவரவு இன்னும் சரி செய்யப்படவில்லை. பல நிறுவனங்கள் நீதிமன்றங்களை நாடிய பின்னும் இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.
3. ஆண்டு வரித்தாக்கல் படிவம் 9, 9A,9B மற்றும் 9C ஆகியவை சமர்ப்பிக்கும் தேதியான 31-03-2018 மீண்டும் 30-06-2019 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சற்றே ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி என்றாலும் அடுத்த ஆண்டு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்தும்.
4. ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்திய வரியை (Refund ) திரும்பப் பெற இயலாமல் நடைமுறை மூலதன சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகத்தின் முக்கிய நோக்கம் அதிகாரிகளிடம் நேரடித் தொடர்பைக் குறைத்து ஆன்லைன் மூலமாக ஆவணங்கள் வரிதாக்கல் பதிவேற்றி (Upload) வரி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் வரியை திரும்பப் பெறும் நடைமுறையில் இன்னும் பழைய முறையின் படியே ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். ஏற்றுமதியாளர்கள் வரியைத் திரும்பப் பெற ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் ஆகிறது.
5. பல்வேறு ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுப்படி வரிவிகிதங்கள் சில பொருட்களுக்கு அவ்வப்போது குறைக்கப்பட்டது. ஆனால் இந்த மாற்றம் எந்த தேதி முதல் அமலுக்கு வரும் என்பதை அறிவதில் குழப்பநிலை ஏற்படுகிறது. இதனால் வரிவிகித வித்தியாசத்தினால் எதிர்காலத்தில் வரிகட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்கிற நிரந்தரமற்ற சூழ்நிலையில் வியாபார அமைப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் அரசிற்கு உள்ளது.
6. 3B படிவத்தில் திருத்தம் செய்ய தற்போது வசதியில்லை. இந்த திருத்தம் அனுமதிக்கப்படாதவரை ஆண்டுப் படிவம் தாக்கல் செய்வதில் எந்தப் பலனும் இல்லை. ஆடிட்டர்களின் பணிச் சுமை படிவம் 9Cல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆடிட்டர்கள் சான்றிதழ்கள் அளிக்க இயலாத நிலை பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
7. ஈவே பில் (E-way Bill) அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை அதிகஅளவு நீதிமன்றத்தை நாடியிருக்கும் சட்டவிதியாக காணப்படுகிறது. ஜிஎஸ்டி சட்டம் அமல் செய்யப்பட்ட போது முக்கிய நன்மை என்று கருதப்பட்டது. சோதனை சாவடிகளை எடுத்தது. தற்போது ஈவே பில் நடைமுறைபடுத்தப்பட்ட பின் ஆங்காங்கே நடமாடும் சோதனைச் சாவடிகளாக அரசு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி சோதனை யிடுகின்றனர். இது கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஈவே பில் விதிமீறல்களில் குஜராத் மாநிலம் முதலிடம் வகிப்பதாக செய்திகள்கூறுகிறது. மேலும் ஈவே பில் தயார் செய்வதில் தவறு நிகழ்ந்தால் திருத்தம் செய்ய வழியில்லை. தடுத்து நிறுத்தப்பட்ட வண்டி சரக்கை திரும்பப் பெற அதற்கான ஆவணங்களைக் காண்பித்து அதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. மேல்முறையீடு செய்ய வழியில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் இதற்கான நடைமுறையைச் செலுத்த வேண்டும்.
8. ஜிஎஸ்டியின் மற்றொரு முக்கிய அம்சம் வரிமேல்வரி செலுத்தக்கூடாது. அதாவது உள்ளீட்டு வரி திரும்பப் பெற வழி செய்யப்பட்டுள்ளது. பல வியாபார நிறுவனங்கள் செய்யும் செலவினங்களுக்கு உள்ளீட்டு வரி மறுக்கப்படுகிறது. இதன் விளைவு பொருட்களில் விலையேற்றம் காணப்படுகிறது. அனைத்து உள்ளீட்டு வரியையும் திரும்பப் பெற அரசின் திட்டங்கள் சற்று மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
9. எதிர்முறை (Inverted) வரிவிதிப்பில் உள்ளான பொருட்களுக்கு வரியைத் திரும்பப்பெற நடைமுறை உள்ளது. இந்த முறையில் பொருட்களுக்கான உள்ளீட்டு வரி மட்டுமே கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சேவைக்களுக்கான உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படவில்லை. உதாரணமாக ஒரு வியாபாரத்தில் விளம்பரங்களுக்கு செலவிடும் செலவிற்கான உள்ளீட்டு வரியை திரும்பப் பெற முடியாது. இன்றைய பொருளாதாரத்தில் சேவையின் பங்கு 65%-ற்கும் மேல் உள்ளது. எனவே சேவைகளுக்கும் உள்ளீட்டு வரியையும் திரும்ப தர சட்டத்திருத்தம் தேவை.
10. சில பொருட்களுக்கான உள்ளீட்டு வரிவிகிதம் விற்பனையின் போது செலுத்தும் வரியை விட அதிகமாக இருப்பதால் இதற்கான ரீஃபண்ட் பெற முடியும் என்பதில் பலருக்கு தெளிவற்ற நிலை உள்ளது. மேலும் ரீஃபண்ட் பெறுவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. மேக் இன் இந்தியா (Make in India) என்று தொடர்ந்து கூறி வரும் மத்திய அரசு பல முக்கிய வரி சீர்த்திருத்தங்களை தொடர்ந்து செய்துவருகிறது. ஜிஎஸ்டி தற்போதைய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று. இதன் வெற்றிக்காக அரசு எடுத்திருக்கும் நாட்டமும் முனைப்பும் மிகவும் பாராட்டத்தக்க வேண்டிய ஒன்று.
கட்டுரையில் கூறியது உட்பட சில குறைகளையும் அரசு கவனிக்கும்பட்சத்தில் ஜிஎஸ்டி நீண்டகாலத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிச்சட்டமாக இந்தியாவில் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
- karthikeyan.auditor@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago