குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ளது புஜ் நகரம். நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது அந்த சொகுசு ஓட்டல். அதன் முன்பு வரிசையாக அணிவகுத்து நின்றன ஜப்பானின் நிசான் நிறுவனத் தயாரிப்பான கிக்ஸ் பிராண்ட் கார்கள்.
நிசான் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள புதிய எஸ்யூவி கார்கள்தான் அவை. அட்டகாசமான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள கிக்ஸ் காரை சந்தைக்கு வருவதற்கு முன்பே ஓட்டிப் பார்ப்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பத்திரிகையாளர்களை வரவழைத்திருந்தது நிசான் நிறுவனம்.
மொத்தம் 40 பத்திரிகையாளர்கள். 20 புத்தம் புதிய கார்கள். புஜ் நகரில் இருந்து கட்ச் பகுதியில் இருக்கும் டெண்ட் சிட்டி வரை 90 கி.மீ. இடையில் ஒரு இடத்தில், டிரைவர் மாறிக் கொள்ள வேண்டும். முன்னாள் ஒரு பைலட் கார் செல்ல, கார் ஊர்வலம் புறப்பட்டது. ஒவ்வொரு காரிலும் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர். காரில் ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக சரி செய்ய கூடவே வந்தார். நாங்கள் ஓட்டியது டீசல் கிக்ஸ் கார். பொதுவாகவே டீசல் கார் என்றால் சத்தம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.
இந்தக் காரில் அது பெரிதும் குறைவாகவே இருந்தது. இது முதல் ஆச்சரியம். 110 கி.மீ. வேகத்தில் போன போதும், காரின் உள்ளே பெரிதாக ஆட்டமில்லை. இது மற்றொரு ஆச்சரியம். முன் பின் சீட்டுகளில் காலை வைப்பதற்கு போதுமான இடம் இருந்தது. காரின் இருக்கைகள், டேஷ்போர்டு, ஸ்டியரிங் போன்ற இன்டீரியர் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சூப்பராக இருந்தது.
இடையில் சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கார் ஊர்வலம் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் டெண்ட் சிட்டியை வந்தடைந்தோம். அங்கு இருந்த பெரிய மண் தரை மைதானத்தில், புழுதி பறக்க வண்டியை பறக்க விட்டோம். செகண்ட் கியரிலும் சீறிப்பாய்ந்தது வண்டி. வளைந்து வளைந்து ஓட்டிய போதும், வட்டமடித்த போதும் கொஞ்சமும் குலுங்காமல் ஒத்துழைப்பு கொடுத்தது கிக்ஸ். மிகப் பெரிய மைதானத்தில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட கார்கள் சீறிப் பாய்ந்து ஓடியதில், அந்தப் பகுதி முழுவதும் புழுதி பறந்து கண்ணை மறைத்தது.
மறுநாள் காலையில், டெண்ட் சிட்டியில் இருந்து சால்ட் டெசர்ட் (உப்பு பாலைவனம்) பகுதிக்கு காரில் புறப்பட்டோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை வெளேர் என உப்பு படிவங்கள் இருக்கும் 7500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சதுப்பு நிலப் பகுதி அது. அதற்கு பல கிலோ மீட்டர் முன்பே முள் செடி கூட முளைக்காத புழுதிக் காடு ஆரம்பித்து விட்டது.
அதன் நடுவே கோடு போட்டது போல், சால்ட் டெசர்ட் பகுதிக்கு ரோடு போடப்பட்டுள்ளது. அந்த ரோட்டின் இறுதியில் உப்பு படிவத்தைப் போலவே, மிகப் பெரிய இரும்பு டவர் அமைக்கப்பட்டுள்ளது. 5 மாடி உயரம் கொண்ட அந்த டவரில் இருந்து பார்த்தால் அத்தனை திசையிலும் உப்பு, உப்பு, உப்புதான். அதைத் தாண்டிப் போனால் பாகிஸ்தான் எல்லை வந்து விடுமாம். டெண்ட் சிட்டியில் இருந்து உப்பு பாலைவனம், பின்பு அங்கிருந்து டெண்ட் சிட்டி என கிக்ஸ் காரில் பயணம் செய்தோம்.
சாலை ஒன்றும் அவ்வளவு சூப்பர் இல்லைதான். ஆனால் காருக்குள் அதிர்வு குறைவாகவே இருந்தது. அதோடு, உலகம் முழுவதும் கிக்ஸ் கார்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருந்தாலும், இந்தியாவுக்கென பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல விஷயங்கள் முதன்முறையாக இந்தக் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதன்முறையாக காரின் உள்ளே இருந்தபடியே காரைச் சுற்றி 360 டிகிரியும் பார்க்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் இரு பக்கமும் பொருத்தப்பட்டுள்ள ரிவர் வியூ கண்ணாடிகளிலும் முன், பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ள 4 கேமராக்களும் இணைந்து காரில் உள்ள அரவுண்ட் வியூ மானிட்டர் டிஸ்பிளேயில் கிராபிக்ஸ் காட்சி போல் தெரிகிறது.
அதேபோல், வண்டியை எடுக்கும்போது, 10 கி.மீ. வேகத்தை தாண்டும் வரை முன்பக்க கேமராவில் தெரியும் காட்சி டிஸ்பிளேயில் தெரியும். இதனால் முன்பக்கம் இருக்கும் பள்ளம், வண்டி, மேடு ஆகியவற்றை தெளிவாகக் கணித்து ஓட்ட முடியும். வேகம் 10 கி.மீ.யைத் தாண்டும்போது, டிஸ்பிளே மறைந்துவிடும்.
இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் விலை ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். இதே வகையிலான மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, திறன் அதிகமாக இருக்க வேண்டும், விலை குறைவாக இருக்கு வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அதை மனதில் கொண்டு பல மாற்றங்களையும் செய்துள்ளது நிசான். ஆனால், நீள, அகலத்தை குறைக்காமல் அதிகரித்துள்ளது.
தரையில் இருந்து காரின் உயரமும் இந்திய சாலைகளுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 21 செ.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் உடைகளுக்கு ஏற்ற, குறிப்பாக சேலையை மனதில் கொண்டு, காரின் கதவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் என இருவகையான கார்கள். பெட்ரோல் மாடலில் 5 கியர்கள். டீசல்மாடலில் 6 கியர்கள். 1.5 லிட்டர் இன்ஜின். நிசான் டெரானோ, ஹுண்டாய் கிரெட்டா மற்றும் ரேனோ கேப்ஸருக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது கிக்ஸ். காரை பிரபலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளின் அதிகாரப்பூர்வ காராக கிக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நிசான் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கிக்ஸ் கார்களின் விலை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சத்துக்குள் இருக்கும் என நிசான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புக்கிங் கடந்த வாரமே தொடங்கிவிட்டது. இன்னும் ஒரே மாதம்தான். அதன்பிறகு நிசான் கிக்ஸ் கார்கள் இந்திய சாலைகளில் வலம் வருவதைப் பார்க்கலாம்.
- ravindran.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago