ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே உள்ள மோதல்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் ராஜினாமாக்கள் இதனால் ஏற்படும் அரசியல் குழப்பங்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இவையனைத்துக்குமே ஆதாரமாக இருக்கும் பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதுதான் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு.
உண்மையில், ரிசர்வ் வங்கியின் கையிருப்புக்கு ஏன் இத்தனை போட்டி? ரிசர்வ் வங்கி கையிருப்பு எவ்வளவு வைத்துக்கொள்ளலாம்? அதை அரசுக்குக் கொடுப்பதில் ரிசர்வ் வங்கிக்கு என்னதான் பிரச்சினை?
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனும் ஏற்கெனவே பல உண்மைகளை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் உர்ஜித் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, காட்சிகள் அப்படியேதான் தொடர்கின்றன.
மத்திய வங்கிகளின் கையிருப்பு ஒரு நாட்டின் மத்திய வங்கி எவ்வளவு கையிருப்பு வைத்துக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்வதற்கான சரியான கொள்கை விளக்கங்கள், புத்தகங்களிலும் இல்லை, நடைமுறையிலும் இல்லை. பெரும்பாலும் கணிப்பின் அடிப்படையில்தான் மத்திய வங்கிகளின் கையிருப்பு முடிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய வங்கிகள் கையிருப்பை வைத்திருக்க மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க. இரண்டு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க. மூன்று, நெருக்கடி காலங்களில் சந்தையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தி நெருக்கடியைக் குறைக்க.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், நார்வே மத்திய வங்கி அதிகபட்சமாக 40% கையிருப்பு வைத்துள்ளது. அதேசமயம், சிலி, இஸ்ரேல், மெக்சிகோ போன்ற நாடுகளின் மத்திய வங்கி கையிருப்பு 10-20% பற்றாக்குறையில்தான் இருக்கிறது. உலக மத்திய வங்கிகளின் சராசரி கையிருப்பு என்று பார்த்தால் 8.4%-ஆக உள்ளது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்போ 27.7 சதவீதமாக உள்ளது. இதுதான் இப்போது பலரது கண்ணை உறுத்துகிறது.
ஜூன் 2018 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 36 லட்சம் கோடி. அதில் 73% அந்நிய செலாவணி. 17% ரூபாய் நோட்டுகள். 4% தங்கம். மற்றவை அரசு கடன் பத்திரங்கள், கடன்கள். ரிசர்வ் வங்கி தனது சொத்துக்களின் மீது கணிசமான வருமானம் ஈட்டுகிறது. அதில் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட அளவு நிதியை வழங்குகிறது. மீதியை ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 47 படி ரிசர்வ் வங்கி தனது கையிருப்பாக வைத்துக்கொள்ளும். தற்போது மொத்த சொத்துகளில் 27.7 சதவீதத்தை தனது கையிருப்பாக வைத்திருக்கிறது. இது கிட்டதட்ட ரூ.9.97 லட்சம் கோடி.
எப்படி வந்தது இவ்வளவு கையிருப்பு?
மத்திய வங்கி, நாட்டுக்குத் தேவையான அளவில் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. வங்கிகளுக்குக் கடன் வழங்குகிறது. அந்நிய செலாவணி இருப்பை அதிகப்படுத்துகிறது. அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளால், மத்திய வங்கியின் சொத்துகள் மீது கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.
மத்திய வங்கிக்கு இந்த வகையிலெல்லாம் வருமானம் கிடைப்பது எப்போதுமே சாத்தியமாக இருப்பதால்தான், ரிசர்வ் கையிருப்பு பற்றாக்குறையில் உள்ள நாடுகளான சிலி, இஸ்ரேல், மெக்சிகோ ஆகியவற்றின் மத்திய வங்கிகள் கூட பிரச்சினையில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 20 வருடங்களில் ஒருமுறை கூட நஷ்டத்தைச் சந்தித்தது இல்லை. ஆதார மூலதனமும் குறைந்ததில்லை. முக்கியமாக, 1998 - 2008 - 2009 - 2013 ஆகிய காலங்களில் சர்வதேச அளவில் பெரும் பொருளதார நெருக்கடிகள் வந்தபோதும், அதன் நிதிநிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சொல்லப்போனால் நெருக்கடி காலங்களில் தான் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது, அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்த டாலர்களை விற்று லாபம் பார்த்தது. இதனால் அதன் கையிருப்பு மதிப்பும் உயர்ந்தது.
கையிருப்பைப் பகிர்வதில் என்னதான் பிரச்சினை?
ரிசர்வ் வங்கியின் கையிருப்பு எவ்வளவு இருக்கலாம் என்பதை இரண்டு வகைகளில் ஆராயலாம். ஒன்று மற்ற நாட்டு மத்திய வங்கிகளின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. இரண்டாவது உள்நாட்டு காரணிகளை ஆராய்வது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், மத்திய வங்கிகளின் கையிருப்பு எந்த வகையிலும் அதன் செயல்பாடுகளைப் பாதிக்கவில்லை. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பைப் பகிர்வதனால் பெரிதாக எந்தப் பிரச்சினையும் வரப்போவதில்லை.
உள்நாட்டு காரணிகளான சந்தை நிலவரம், பணவீக்கம், சமூகப் பொருளாதார சூழல், அந்நிய செலாவணி கையிருப்பு, அரசின் நிதி நிலை, வங்கிகளின் நிதிநிலை போன்றவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு சற்று அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அதேசமயம் இந்தக் காரணிகளையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்ட பிறகும், கணக்குப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தேவையானதைவிட கூடுதலாகவே இருக்கிறது. ரூ. 5.3 லட்சம் கோடி முதல் - 7.3 லட்சம் கோடி வரை கூடுதலாக இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கி இந்தக் கையிருப்பை மத்திய அரசுடன் பகிர்வதில் தயக்கம் காட்டுகிறது.
காரணம், பிற நாடுகளின் மத்திய வங்கிகள், நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு விகிதம் 0.1% என்ற அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றன எனில், இந்திய ரிசர்வ் வங்கி 0.001% என்ற விகிதத்தில் கவனம் எடுக்கிறது. ரிசர்வ் வங்கியின் கவலையெல்லாம், அதன் சொத்துக்கள் பெரும்பாலும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதுதான். சொத்துகளின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கமிட்டிகள் என்ன சொல்கின்றன?
2013க்கு முன்வரை நாட்டின் நிதிநிலைக்கு ஏற்படும் சவால்களை, சிக்கல்களை, நஷ்டங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியின் கையிருப்பு இவ்வளவு இருக்க வேண்டும் என்றே கமிட்டிகள் கூறிவந்தன. ஆனால், ரிசர்வ் வங்கியின் கையிருப்புக்கு எந்த நஷ்டமும் இல்லாமல், தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைக் கண்டது.
2013ல் ரிசர்வ் வங்கியின் சொத்துகளை ஆய்வு செய்த மாலேகம் கமிட்டி, ரிசர்வ் வங்கியிடம் தேவைக்கு அதிகமாக ரிசர்வ் கையிருப்பு இருப்பதாகவும், தேவைக்குப் போக மீதமுள்ள உபரியை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசுக்கு வழங்கலாம் என்றும் கூறியது. அதுவரை எந்த அரசும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பைப் பற்றி எதுவும் கேட்டதும் இல்லை, அது இவ்வளவு பெரிய பிரச்சினை ஆனதும் இல்லை.
மாலேகம் கமிட்டியின் அறிக்கைக்குப் பிறகே, தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் கேட்க ஆரம்பித்தது. ஆனால், கையிருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தெளிவான ஒரு கொள்கை வரைவு இல்லாததால், அதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு, பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் சொத்துக்கள் சந்தை அபாயம், கடன் அபாயம், நிர்வாக அபாயம், தற்செயலாக பொருளதாரத்தில் நடக்கும் அபாயம் போன்றவற்றையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. 2016-ல் ரகுராம் ராஜன் இந்தியா போன்ற நாட்டுக்கு அதிக கையிருப்பு அவசியம் என்றார். அதற்கு காரணமாக அவர் கூறியது; இந்திய அரசின் நிதிநிலை என்பது நெருக்கடியைச் சமாளிக்கக் கூடிய வகையில் இல்லை என்பதுதான்.
இதுவரை ஆண்ட அரசுகளின் நிதி கொள்கைகள் அனைத்துமே தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கொள்கைகளைச் சார்ந்தே இருந்தது. இந்தியப் பொருளாதாரத்துக்கான ஒரு தனிப்பட்ட கொள்கையை எந்த அரசுகளும் கொண்டிருக்கவில்லை. இதனால், இந்திய அரசின் நிதிநிலை என்பது எளிதில் நெருக்கடிக்குள்ளாகக் கூடியதாக இருக்கிறது. ஆனால், இதுவரை அப்படிப்பட்ட நெருக்கடிகள் உருவாகாமல் இருக்க காரணமே இந்திய ரிசர்வ் வங்கிதான்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசின் நிதி நிதிலையைப் பொருத்தே இருக்கும். அரசு எடுக்கும் ஒவ்வொரு பொருளாதார கொள்கையும் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை ஏதோ ஒரு வகையில் பாதிக்கக்கூடியது. அரசின் நிதிநிலை நன்றாக இருக்கும்போது, இயல்பாகவே ரிசர்வ் வங்கிக்கு லாபம் கிடைக்கும். ஆனால், அதேசமயம் நிலைமை மோசமாகும் போது அது மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கையைப் பாதிக்கும்.
நெருக்கடி காலங்களில் அரசுதான் ரிசர்வ் வங்கியை நம்பியிருக்குமே தவிர, ரிசர்வ் வங்கி அரசை நம்பி இருக்கவே முடியாது. அதாவது அரசின் அத்தனை பாரங்களையும் ரிசர்வ் வங்கி தன் தலைமேல் சுமக்க வேண்டியிருக்கிறது. அரசுகள் மாறிவிடும். ஆனால், அரசு அமைப்புகளும், அவற்றின் பொறுப்புகளும் என்றும் மாறாது.
ஒருவேளை, ரிசர்வ் வங்கியினால் லாபம் ஈட்ட முடியாவிட்டாலோ, அரசு கருவூலத்துக்கு பங்களிப்பு செய்யாவிட்டாலோ, அரசின் ஆய்வுக்கு ஆளாகி தாக்குதலுக்கும் உள்ளாகும். ரிசர்வ் வங்கி சிறப்பாக இருக்கும்போதே, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறது. நிலைமை மோசமாக இருந்தால்?
கையிருப்பை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ரிசர்வ் வங்கியின் வளர்ச்சியானது, சொத்துகளின் மதிப்பின் மீதான வளர்ச்சியாக இருப்பதால், இந்த வளர்ச்சியை பயன்படுத்த முடியுமா, சொத்துக்களை விற்றால் தான் பயன்படுத்தலாமா? அப்படியென்றால் இது கற்பனை பணமா? என்பதில்தான் பலருக்கு குழப்பம்.
ஆனால், சொத்துகளின் மதிப்பு உயர்ந்தால், அதன் பலனை அடைய அதை விற்க வேண்டியதில்லை. உயர்ந்த மதிப்பை டிவிடெண்ட்டாக வழங்கலாம். இதுவரை அப்படித்தான் ரிசர்வ் வங்கி தனது வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்கு வழங்கிவருகிறது. மீதியைத் தனது ரிசர்வ் கையிருப்பில் சேர்த்துவிடுகிறது.
அரசின் நிதி நிலையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் எப்போதும் கவனமாக இருக்க பார்க்கிறது. எனவேதான் தனது ரிசர்வ் கையிருப்பைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே வைத்திருக்கிறது. இப்போது அரசு கோரும் உபரி நிதியை வழங்க வேண்டுமெனில் சொத்துகள் சிலவற்றை விற்க வேண்டும். அப்படி விற்கும்போது அதனால் சந்தை சற்று சலனத்துக்குள்ளாக நேரிடும்.
என்ன செய்யலாம்?
ரிசர்வ் வங்கியின் கையிருப்பைப் பொருத்தவரை தேவைக்கு அதிகமாக உள்ள உபரியை அரசுக்கு வழங்க எந்த தடையும் இல்லை. மேலும் இவ்வளவு பெரிய தொகை வெறுமனே பூட்டிக்கிடக்க வேண்டுமா என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், கையிருப்பை வழங்குவது, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைகளை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அரசு தன் விருப்பத்துக்கு பட்ஜெட்டில் இந்தப் பணத்தை இழுத்துவிட்டால் அது மொத்தமும் வீண்தான். இந்தப் பணத்தை பொருளதாரத்தில் நேரடியாகப் புகுத்துவதால், அது எங்கு யாருக்குப் போகும் என்றே சொல்ல முடியாது. அந்தப் பணம் ரிசர்வ் வங்கிக்கும் திரும்ப வராது. பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யவும், கடன்களை அடைக்கவும் மட்டுமே பயன்படுத்தலாம். இதன் மூலம் பகிரப்படும் ரிசர்வ் கையிருப்பு மீண்டும் ரிசர்வ் வங்கிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே ரிசர்வ் வங்கியின் கையிருப்பை வாங்கி அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. ரிசர்வ் கையிருப்பைப் பெற்று அரசியல் காரணங்களுக்காக அள்ளிவிடப் போகிறதா, அல்லது அரசின் நிதிநிலையை மேலும் வளர்த்தெடுக்கப் பயன்படுத்தப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அருண் ஜேட்லியும் சக்தி காந்த தாஸும் எப்படி இந்தப் பிரச்சினையைக் கையாளப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யும் பணம் நஷ்டமடையாமல் இருக்க என்ன வழி என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் வழக்கம்போல பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் பணம் பெரும் பணமுதலைகளுக்குத் தீனியாகி திவால் ஆவதை யாரும் தடுக்க முடியாது.
- saravanan.j@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago