ஒரு குட்டிக் கதை. ஒரு நாட்டின் மன்னன், தன் அரண்மணையில் பணிபுரியும் ஒரு காவலாளி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பதைக் கவனித்தான். பெரிய படைகளும், அளப்பரிய செல்வங்களும், அளவில்லா அதிகாரங்களும் இருந்தும் தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாமல் அடிக்கடி பல கவலைகளுக்கு ஆளாகும் பொழுது, சாதாரண வேலையில் இருக்கும் அந்தக் காவலாளி எல்லா நேரமும் எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பது அந்த அரசனுக்கு வியப்பைத் தந்தது.
சில நாட்கள் பொறுத்த மன்னன், ஒரு நாள் அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தை அந்தக் காவலாளியிடமே நேரடியாகக் கேட்டு விட்டான். காவலாளியோ ‘மா மன்னா, எனது தேவைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. உண்ண உணவும், உடுக்க உடையும் நீங்கள் அளிக்கும் சம்பளத்தில் கிடைத்து விடுகிறது. உறங்க ஓர் ஓலைக் குடிசை உள்ளது.
அன்பான மனைவி, பாசமான குழந்தைகள் உள்ளனர். நான் திருப்தியான வாழ்வு வாழ்கிறேன், அதுவே மகிழ்ச்சிக்குக் காரணம்' என்று பதில் அளித்தான். ஆனால் அரசனுக்கு அந்த பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லை. அது எப்படி ஒரு காவலாளி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்று அவரது மந்திரியிடம் கேட்டு இருக்கிறார். இதைக் கேட்ட மந்திரி நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, ‘அடடே அந்தக் காவலாளி இன்னும் 99-சங்கத்தில் சேரவில்லை போலும்' என்றார்.
அது என்ன 99-சங்கம் எனக் கேட்கத் தோன்றுகிறதா? இதையே தான் அந்த அரசனும் கேட்டான். மந்திரி அதைச் செய்தே காட்டுகிறேன் என்று அந்தக் காவலாளியின் வீட்டு வாசலில், அவனுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் 99 பொற்காசுகள் கொண்ட ஒரு பொன்முடிப்பை வைக்க ஏற்பாடு செய்தார்.
காலை எழுந்ததும், தன் வீட்டு வாசலில் இருந்த பொன்முடிப்பில் தங்கக்காசுகளைப் பார்த்ததும் அந்த ஏழைக்கு மனதிலே ஆனந்தம், குதூகலம். ஆனால் பல முறை எண்ணினாலும், அதில் 99 தங்கக் காசுகள் மட்டுமே இருக்க, அட இதில் மேலும் ஒரு தங்கக் காசு இருந்தால் நம்மிடம் 100 தங்கக் காசுகள் ஆகிடுமே, எப்பாடு பட்டாவது ஒரு தங்கக் காசு சேர்த்து விட வேண்டும் என முடிவு செய்தான் அவன்.
அன்றிலிருந்து ஓயாது உழைக்க ஆரம்பித்தான். தன் வீட்டாரிடம் செலவுகளைக் குறைக்க வேண்டுமென சண்டை போடத் தொடங்கிவிட்டான். மனைவி, குழந்தைகளுடன் கேலி, விளையாட்டு எனும் சின்னச்சின்னச் சந்தோஷங்கள் காணாமல் போயின. எப்போதும் எரிச்சல், யாரைப் பார்த்தாலும் கோபம், என அந்தக் காவலாளி சுத்தமாக மாறிப் போனான். அத்துடன் அவன் முகத்தில் சோகமும், கவலையும் குடி கொண்டன.
அப்படி மாறிப் போன காவலாளியைப் பார்த்த அரசன், தனது மந்திரியிடம் ஏன் இப்படி எனக் கேட்க, மந்திரி, ‘அப்பாடா, அவனும் 99-சங்கத்தில் சேர்ந்து விட்டான்!' என்றார். ஐயா, நாம் அனைவருமே இந்த 99-சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லவா? பொதுவாக நம்மில் பலர் நம்மிடம் இருப்பதில் திருப்தி கொள்ளாமல், இல்லாதவற்றை நினைத்து ஏங்குவோம்.
அத்துடன் மேன் மேலும் தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வோம். எத்தனை கிடைத்தாலும், இன்னொன்றும் கிடைத்துவிட்டால் பரவாயில்லையே என நினைப்போம்! அவைகளை அடைய, முயற்சிக்க ஆரம்பிப்போம்; அதனால், இருக்கும் மகிழ்ச்சியையும் தொலைத்து விடுவோம்!
‘திருப்திப்படும் குணம் ஏழையைப் பணக்காரன் ஆக்குகிறது; அதிருப்திப்படும் குணமோ பணக்காரனையும் ஏழை ஆக்கிவிடுகிறது' என அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்க்ளின் சொல்வது உண்மை தானே?
இதில் முக்கியமாக யோசிக்க வேண்டியது என்னவென்றால், வாழ்க்கையில் சிலவற்றை மாற்ற முடியாது. நடந்துவிட்டால், அது நடந்தது தான். அண்ணே, யாராலும் தான் பிறந்த குடும்பத்தையோ, உறவினர்களையோ மாற்றிக்கொள்ளவா முடியும்? ஏழைக் குடும்பத்தில் பிறந்து விட்டேனே என்று கவலைப்பட்டால் என்ன பலன்?
கல்யாணம் ஆகி 20, 30 வருடங்கள் ஆகியும் மனைவியைக் குறை சொல்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். மனைவியின் குணத்தை இனி மாற்ற முடியாது. மனைவியையே மாற்றுவது என்பதோ முடியவே முடியாது. மேலும் எல்லா வகையிலும் எதிர்பார்ப்பது போலவே மிகச் சரியான மனைவி அமைவது நடக்கக் கூடிய காரியமா?
சரி, அந்த மனைவியைக் கேட்டால் அல்லவா கணவனின் குறைகள் தெரியும்? மனைவியின் எல்லா எதிர்பார்ப்புகளின்படி அந்தக் கணவனும் இருக்க வேண்டுமல்லவா? அது முடியுமா? கையை முகத்தில் வைத்து மறுக்கும் விசுவாமித்திரர் போல் உண்மை நிலைமையை ஏற்றுக்கொள்ளாமல் குறையே கூறிக்கொண்டிருந்தால் எப்படி?
‘ஒருவன் எப்பொழுதும் தனது மனைவி, குடும்பம், செல்வம் ஆகியவற்றில் கண்டிப்பாகத் திருப்தி அடைய வேண்டும். அதுவே அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்' என்கிறார் சாணக்கியர்! உண்மை தானே? மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளணுமல்லவா?
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago