சபாஷ் சாணக்கியா: குற்றம் பார்க்கின்... வெற்றி இல்லை!

By சோம.வீரப்பன்

உலகில் பலரும் விரும்புவது எதை என்று சொல்லுங்கள் பார்ப்போம். தீபாவளி ஞாபகத்தில்  புத்தாடை என்றோபாதாம் அல்வா என்றோ சொல்லி விடாதீர்கள். அல்லது மன அமைதி என்பது போன்ற உயரிய தத்துவார்த்தமான பதில்களைத் தேடாதீர்கள். ஐயா, நான் சாதாரணமாக யாருக்கும் உடனடி மகிழ்ச்சி அளிக்கக் கூடியது எது எனத்தான்  கேட்கிறேன். ஆமாம், உயிர் வாழ இதுவும் அவசியம் என்று சாணக்கியர் சிலாகித்துச் சொல்லும், அந்தப் ‘பாராட்டு' தானேங்க அது?அது சரி, பலரும் வெறுப்பது எதை?யாருக்கும் பிடிக்காதது எது? உடனடியாக எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்குவது எது?  எல்லோருக்கும் தெரிந்தது தான், எல்லோரும் அனுபவப் பட்டிருப்பது தான் அது! உங்களை யாரும் குற்றம் சொன்னால், உங்களிடம் அந்தக் குறை, உங்கள் செயல்பாட்டில் இந்தக் குறை என்று கூறினால், அது நிச்சயம் உங்களுக்கு உடனடியாக வருத்தத்தைத் தரும் அல்லவா? ஆமாங்க, பாராட்டைக் கேட்க விரும்பாதவரும் இல்லை, தம்மைக் குறை கூறினால் கேட்க விரும்புபவரும் இல்லை.

தம்பி, ஞாயிறு காலை வீட்டில் அம்மாவோ மனைவியோ தோசை ஊற்றிக் கொடுக்க, ஒன்று ஒன்றாய்ச் சூடாக வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் உண்டா?  ‘ஆஹா, இந்த மாதிரி யாரால்சுட முடியும்?' எனப் பாராட்டுபவர்களுக்குத் தானே மேலும் அக்கறையுடன் சுடப்படும் தோசைகள் கிடைக்கும். உண்மையாக இருந்தால் கூட, உப்பு அதிகம் அல்லது சரியாய் வேகவில்லை என்று ஏதாவது குறை சொன்னால் அடுத்து வரும் தோசைகளின் தரம் மேலும் பலவழிகளில் குறையுமல்லவா?

இப்படி வாய் இருக்காமல் உள்ளதைச் சொல்லப்போன அன்பர் ஒருவருக்கு, பறக்கும் தட்டு  போல வான்வழியே வந்த தோசைகளை  `கேட்ச்’   பிடிக்க வேண்டியதாயிற்று!

எனது நண்பர் ஒருவர் உளவியல் பேராசிரியர். அவர் யாரையும்   யோசிக்கவைக்கும் ஓர் உண்மையைச் சொன்னார்.

அதாவது நாம் ஒருவரது செயலில் குறை சொன்னாலும், அதைக் கேட்பவர்கள் அதைத் தம்மேல் சொல்லப்படும் குறையாக,  குற்றமாகவே கருதுவார்களாம், புரிந்து கொள்வார்களாம்! அதாவது நீங்கள் குறை காண்பது தோசையில் தான் என்றாலும் அது நீங்கள்தோசையைச் சுடுபவரைச் சொல்லும்குற்றமாகவே எடுத்துக் கொள்ளப்படுமாம்!

அதற்காகச் சரியில்லாத தோசையைச் சாப்பிட முடியுமா என்கிறீர்களா? அப்படியில்லை.

குறையைக் கூடப் பாராட்டுப் போலச் சொல்லணுமாம். மற்றவர் தவறை  அவர் மனம்கோணாமல் சுட்டிக் காண்பிப்பது என்பது ஒரு தனிக் கலை. அதாவது முதலில் ஒரு பாராட்டுடன் தொடங்கணுமாம். பின்னர் சூசகமாக, இதமாக அந்தக் குறை பாட்டைச் சொல்லணுமாம். மீண்டும் ஒரு பாராட்டுடன் முடிக்கணுமாம்!

‘அம்மா உங்களுக்கு தோசைத் திலகம் என்றே பட்டம் கொடுக்கலாம். இந்த மாதிரி பொன் நிறத்தில் யாரால் சுட முடியும்? நான் தான் இந்த மாதம் கல் உப்பை வாங்கி வந்து விட்டேன். இருந்தாலும் தோசையில் உப்பு அதிகம் தெரியவில்லை. கொஞ்சம் பச்சரிசி மாவு சேர்த்தால் சரியாகி விடப்போகிறது. ஆனால் இந்த மாதிரி வெந்தயம் போட்டு மிருதுவாக இருக்கும் தோசை ஊற்றும் உங்கள் கைகளுக்குத் தங்க வளையல் தான் போடணும்...'

என்ன புரிஞ்சுதா? ஐயா, அலுவலகத்திலும் அப்படித் தானே? சில சமயம் கெட்டிக்காரர்களும் தவறுவது உண்டு. அவர்களைக் கடிந்து கொள்ளும் முன்பு கொஞ்சம் தூக்கி வைத்துப் பேசணுமில்லியா?

சரிங்க. ஒரு இடத்தில் தப்பேநடந்து விட்டாலும், தவறு செய்தவரைப் பிடித்துத் திட்டுவதைக் காட்டிலும், அதைச் சரி செய்வது தானே முக்கியம்? கண்ணாடி டம்ளர் உடைந்துபால் கொட்டினால் என்ன செய்வீர்கள்? காலில் குத்தாமல் கண்ணாடித் துண்டுகளை அகற்றி, பாலைத்துடைக்கணுமில்லையா?' குற்றம்கண்டுபிடிக்காதீர்கள், தீர்வைக் கண்டுபிடியுங்கள்' என்கிறார் அமெரிக்கத் தொழிலதிபர் ஹென்றி ஃபோர்ட். அண்ணே, அடிக்கடி குற்றம் சொல்வதே ஒரு குற்றம்  எனலாம் !

அப்புறம் , சில சமயம் நாம் தவறு செய்து விட்டால், அதை மற்றவர்களும் சுட்டிக் காட்டுவார்கள் இல்லையா? அது போன்ற சமயங்களில், சும்மா சப்பைக் கட்டு கட்டாமல் தவறை ஒப்புக் கொண்டு விட்டு, இனி இது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்வது தானே சரி?

தவறை ஒத்துக் கொள்வது போல நடிக்கவாவது வேண்டும். அப்பொழுது ன்  மற்றவர்கள்  நன்மதிப்பைப் பெறலாம்' என்று ரோமானிய சிந்தனையாளர் குன்ட்லியா சொல்வது, சிந்திக்க வேண்டியது! சில பேருடைய இயல்பு எப்பொழுது பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் ஏதாவது குறை சொல்வார்கள். ‘ஏதோ பெரும் வெகுமதி கிடைக்கப் போகிறது என்பது போல, சிலர் குற்றம் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்  என்கிறார் அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜிக் ஜிக்லர்! ‘என்னத்தை கண்ணையா’ மாதிரி,  அவர்களுக்கு எதிலும் ஒரு சலிப்பு. கெட்டவை தான் அவர்கள் கண்ணுக்குத் தெரியும்!

‘யாரையும்  பழி சொல்லாமல், குறை சொல்லாமல் இருப்பதே, மக்களைக் கவர்ந்து வெல்வதற்கு வழி ' என்கிறார் சாணக்கியர் ! உண்மை தானே?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

25 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்