மக்களவை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பலப்பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆளும் பாஜகவுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலானதாக இருக்கும். காரணம் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் செய்தவை என்ன, செய்யாதவை என்ன என்பதை மக்கள் அலசுவார்கள் என்பதுஒருபுறம். அதையும்தாண்டி அடுத்து வரவுள்ளஆறு மாதங்களில் உருவாகும் புதிய நெருக்கடிகள் மக்களின் மனங்களில் மாற்றங்களை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அடுத்த ஆறு மாதத்தில் அரசியல் கணக்குகளைவிட, பொருளாதாரக் கணக்குகள்தான் ஆளும்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தினால் பெட்ரோல், டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலாகியுள்ளது. இதன்பொருட்டு சர்வதேசப் பொருளாதார சூழலில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நிய செலாவணியில் மிகப் பெரிய தேக்கம் நிலவுகிறது. இந்த சூழலில்ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் வேறு. தற்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளன என்றாலும் அது தாற்காலிகமானதுதான். இதனால் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறைவதற்கு வாய்ப்பில்லை.
இதன் காரணமாக மத்திய அரசின் செலவுகள் அதிகரித்துள்ளதால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நிதிப் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை என்பதை மத்திய அரசு மறுத்தாலும் பற்றாக்குறை இலக்கினை எட்டுவது சாத்தியமில்லை என்பதே உண்மை நிலவரமாக உள்ளது. 2018 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுடன் சேர்ந்்து, அரசின் வருவாய் பற்றாக்குறையும் நிதி நெருக்கடியை அதிகரிக்க உள்ளது.
2018 பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைவிட வரியல்லாத வருவாய்கள் குறைந்துள்ளன. தவிர மறைமுக வரி வருவாயும் நிலையானதாக இல்லை. ஜிஎஸ்டியில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் எட்டப்பட்டாலும், அதில் பாதிக்குமேல் உள்ளீட்டு வரி வரவுகளாக செல்கின்றன. குறிப்பாக நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வருவாயின் சராசரி ரூ. 39,000 கோடிதான். அதாவது ஏப்ரல்- அக்டோபர் வரையில் 7.5 சதவீத வளர்ச்சிதான் எட்டப்பட்டுள்ளது. ஆனால் முழு ஆண்டுக்குமான இலக்கு 19 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவிர நடப்பாண்டில் ரூ.80,000 கோடியை பங்கு விலக்கல் மூலம் திரட்ட இலக்கு நிர்ணயித்தார் நிதியமைச்சர் அருண்ஜேட்லி. ஆனால் பங்குவிலக்கல் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள்படி தற்போதுவரை ரூ.15,247 கோடிதான் திரட்டப்பட்டுள்ளது. அதாவதுநிதி திரட்டல் இலக்கில் 20 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக நிறுவனங்கள் இணைப்பின் மூலம் திட்டமிடப்பட்ட நிதி திரட்டல் இலக்குகள் பல இறுதி செய்யப்படாத நிலையில் உள்ளன. ஓஎன்ஜி சி-ஹெச்பிசிஎல் நிறுவன இணைப்புகள் போல, மின்சாரம், மாற்று எரிசக்தி, பெட்ரோலியத் துறைகளில் நிறுவனங்களின் இணைப்புகள் குறித்து இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. கடந்த ஆண்டில் இப்படியான இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.36,000 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டில் ஐபிஓவெளியீடு மூலம் மட்டுமே நிதி திரட்டப்பட்டுள்ளது.
இது தவிர, தொலைத்தொடர்பு துறையின் வருமான எதிர்பார்ப்பு ரூ.48,700 கோடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்து துறை ஏற்கெனவே நெருக்கடியில் உள்ளதால் ரூ.20,000 கோடி பற்றாக்குறை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான வருவாய் குறைந்ததன் காரணமாக அரசின் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செலவுகளில் சுமார் ரூ.50,000 கோடி வரை குறைக்கப்படலாம் என்கின்றனர். அதாவது அத்தியாவசிய செலவுகளில் 2 சதவீதம்வரை குறைக்கப்பட உள்ளன. இதனால், அடிப்படைச் செலவுகள், பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடும் தொகை குறையும். இதனால்தான் தற்போது எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் திரட்ட உள்ள ரூ.3,000 கோடி சமூக நலத் திட்டங்களுக்கு திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வழிகள் அல்லாமல், வேறு வழிகளில் ரூ.1.7 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. டாலர் பாண்்டுகள் மூலம் நிதி திரட்டவும் முயற்சித்து வருகிறது. இப்படியான நெருக்கடிகளுக்கு இடையில் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பும், ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தின் திவால் நிலையும் மத்திய அரசுக்கு புதுவிதமான சிக்கலை உருவாக்கியுள்ளன.
இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் சுமார் ரூ.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளின் நிதிநிலையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது வாராக்கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 11 வங்கிகள் மீது பிசிஏ சட்டப் படி நடவடிக்கை எடுத்துள்ளது. தவிர கடன்கள் அளிப்பதற்கும் புதிய வழிகாட்டுதல்களைவழங்கியுள்ளதுடன், வாராக்கடன் கணக்குகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் வங்கிகள் புதிய கடன்கள் வழங்குவதை கட்டுப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கைகளால் கார்ப்பரேட் முதலீடுக்கான நிதி திரட்டல்களில் எதிர்பார்த்த வேகம் இல்லை.
ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தின் ரூ.90,000 கோடி இழப்பிற்கு பின்னால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினமாகியுள்ளது. இதனால் அவர்களுக்கான நிதி ஆதாரங்களை குறைந்த வட்டியில் அளிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. இதற்கு பிசிஏ சட்ட விதிமுறைகளை தளர்த்துவதுடன், வங்கிகளின் கடன் வழங்கும் கொள்கைகளில் தாராளம் காட்ட வேண்டும் என்கிறது.
மின்சார உற்பத்தி நிறுவனங்களின் வாராக்கடன்களுக்கு விலக்கு அளிப்பது, சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்களை வாராக்கடன்களின் பட்டியலின் இணைக்கக் கூடாது. சிறு, குறு தொழில் துறைக்கு தாராளமாக கடன் அனுமதிக்க வேண்டும் என்கிற அழுத்தங்களையும் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. இதன் மூலம் தொழில்துறை தேக்கத்தை சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது.
இது தவிர அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி கேட்கிறது. இந்த தகவலை அரசு மறுத்தாலும், இதன் காரணமாகவே அரசுக்கும்- ரிசர்வ் வங்கிக்கும் மோதல் ஏற்பட்டது என்கின்றனர் இதை கவனித்து வருபவர்கள். இந்த நெருக்கடியான சூழலில் அரசின் அழுத்தம் காரணமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகல் அறிவிப்பினை வெளியிடலாம் என்கிற தகவல் வெளியாகின்றன. தவிர நிதியமைச்சகத்துக்கு இதுவரை பக்கபலமாக இருந்த வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியாவின் பதவிக் காலம் நவம்பருடன் முடிவடைய உள்ளது. இப்படியான புதிய நெருக்கடிகளும், கழுத்தை நெரிக்கும் நிதிப் பற்றாக்குறையும், அதன் தாக்கங்களும் இந்திய பொருளாதாரத்தின் சோதனை காலம் தொடங்கியுள்ளதை உறுதி செய்கின்றன.
அடுத்த ஆறு மாதத்தில் பொதுத் தேர்தல் என்பதால், இந்த நெருக்கடிகளின் சுமை மக்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறது மத்திய அரசு. இது நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் எதிரொலிக்கும். ஆனால் அதுவல்ல இந்தியாவின் அசலான பொருளாதார நிலை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago