முதலீடுகளை ஈர்க்காத முதலீட்டாளர் மாநாடு

By ஜெ.சரவணன்

"அட்வாண்டேஜ் அஸ்ஸாம்'', "கிரெடிபிள் சத்தீஸ்கர்'', "மேக்னட்டிக் மகாராஷ்ட்ரா'', "ஹேப்பனிங் ஹரியாணா'', "புரோகிரஸிவ் பஞ்சாப்'', "ரீசர்ஜன்ட் ராஜஸ்தான்'' இவையெல்லாம் அந்தந்த மாநிலங்கள் தங்களின் முதலீட்டாளர்கள் மாநாடுகளுக்கு வைத்துக்கொண்ட அடைமொழிகள்.

அடைமொழி வைக்க முடியாத மாநிலங்கள் ‘குளோபல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துகின்றன. இந்த முதலீட்டாளர் மாநாடுகளுக்கு வருகை தரும் தொழிலதிபர்களையும் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்த பல நூறு கோடிகள் செலவு செய்யப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே விழாக்கோலம்தான்.

இந்தியாவில் முதலில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது குஜராத். 2003-ல் அப்போதைய முதல்வரும் தற்போதைய பிரதமருமான மோடிதான் தொடங்கினார். அதைத்தான் தற்போது அனைத்து மாநிலங்களும் பின்பற்றிவருகின்றன.  இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் வருகை, லட்சக்கணக்கான கோடி முதலீடுகள் குவிந்தது எனத் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவிடும் வகையில் பார்த்துக்கொள்கின்றன மாநில அரசுகள்.

தொழிலதிபர்களும் அரசுகளின் ஆதரவு தேவை என்பதால் தவறாமல் ஆஜராகி, முதலீடுகளை அறிவித்து விடுகின்றனர். ஆனால், இந்த முதலீட்டாளர் மாநாடுகளின் நம்பகத்தன்மையைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்றுவிடுகின்றன என்பதுதான் உண்மை.

சமீபத்தில் நடந்த மாநாடுகளின் விவரங்களைப் பார்க்கலாம். "மேக்னட்டிக் மகாராஷ்ட்ரா'' மாநாட்டில் 4106 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 12.10 லட்சம் கோடி "மேக் இன் இந்தியா''மாநாட்டில் ரூ. 8 லட்சம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் ரூ. 4.28 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேற்கு வங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த மாநாடுகளில் ரூ. 9.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2016ல் ஜார்கண்ட்டில் ரூ. 5.64 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதற்கு முன் 2014ல் ரூ. 6 லட்சம் கோடி.

"ஹேப்பனிங் ஹரியாணா'' மாநாட்டில் ரூ. 6.41 லட்சம் கோடி. கர்நாடகா ரூ. 3.08 லட்சம் கோடி, ராஜஸ்தான் 2015ல் நடத்திய மாநாட்டில் ரூ. 3.3 லட்சம் கோடி. 2015ல் தமிழகத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில்  ரூ. 2.42 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளில் அறிவிக்கப்பட்ட தொழில் ஒப்பந்தங்களின் மதிப்பு மொத்தமாக ரூ. 40 லட்சம் கோடி முதல் 50 லட்சம் கோடி வரை இருக்கும்.

ஆனால், இதில் எத்தனை லட்சம் கோடி உண்மையாகவே முதலீடு செய்யப்பட்டது என்று பார்த்தால் பாதியளவு கூட இல்லை. இந்தத் தொழில் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் பல்வேறு அரசியல், சமூக காரணங்களால் காணாமலே போய்விடுகின்றன. ஆட்சிகள் மாறினால் இந்த ஒப்பந்தங்களும் காணாமல் போய்விடுகின்றன. ஆட்சிகள் தொடர்ந்தாலும் பெரிய அளவில் ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறுவதில்லை.

உதாரணத்துக்கு தமிழகத்தையே எடுத்துக்கொள்ளலாம், 2015ல் ரூ 2.42 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் வெறும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் பல்வேறு செயலாக்க நிலைகளில் இருப்பதாகவும், 76 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இது மொத்த ஒப்பந்த மதிப்பில் 25 சதவீதம் தான். மீதமுள்ள ஒப்பந்தங்கள்? எனினும் இவையே கூட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் செயலாக்க நிலைகளில்தான் உள்ளன. இந்த நிலையில் 2019ல் அடுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப்போகிறார்கள்.

மாநாடுகளில் அறிவிக்கப்படும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் மதிப்பும் ஒவ்வோராண்டும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், புதிதாகச் செய்யப்படும் முதலீடானது 2017-18 காலகட்டத்தில் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், 2004-2005 காலகட்டத்தில் செய்யப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் குறைந்திருப்பதாகவும் மத்திய பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்யப்படும் மூலதனத்துக்கும்  இந்திய ஜிடிபிக்கும் இடையிலான விகிதம் 2003ல் 26.5 சதவீதமாக இருந்தது 2007ல் 35.7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் 2017ல் இது மீண்டும் 26.4 சதவீதத்துக்கு இறங்கியுள்ளது. இந்தியாவில் முதலீடும் ஏற்றுமதியும் பெருமளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்றே சமீபத்திய இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதலீடுகளைப் பொருத்தவரை அம்பானிகளும் அதானிகளும் டாடாக்களும் தயாராக இருக்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் தொடங்கும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இங்கு இருக்கிறதா என்பதில் தான் பிரச்சினையே இருக்கிறது. சமீபத்தில் இந்தியா தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலில் 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தில் உள்ளது என்றசெய்தி வெளியானது.

இது இதுவரை அரசு எடுத்துள்ள முயற்சிகளை வைத்து கொடுக்கப்பட்ட முன்னேற்றமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் நடைமுறையில் தொழில் செய்வதற்கான ஏற்ற சூழல் இந்தியாவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு அனுமதிகள் கிடைக்காத காரணத்தினால் மட்டுமே அரசுக்கு ரூ. 3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சமீபத்திய அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அரசின் திட்டங்களுக்கே இப்படி என்றால் தொழில்முனைவோர்களின் நிலையைஎண்ணிப் பாருங்கள்.

 ஒரு உற்பத்தி சார்ந்த தொழிலைத் தொடங்க 50க்கும் மேற்பட்ட அனுமதிகளை வாங்க வேண்டியிருக்கிறது. அரசுகள் அனுமதிகளை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறைகளை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், நடைமுறையில் கதவுகளே திறப்பதில்லை எங்கிருந்து இந்த சாளரங்கள் சரியாகத் திறக்கப் போகின்றன. 59 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. நல்ல திட்டம்தான். ஆனால், கடனை வாங்கி என்ன செய்வது?

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும்  தேர்தல் நடக்கிறது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்வோம், இப்படி செய்வோம் என்று அறிக்கை விடுகிறார்கள். இந்த அறிக்கைகளில் எல்லாம் மக்களுக்கு துளியும் நம்பிக்கை இருப்பதில்லை என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளும் செயல்படுத்தப்படுவதில்லையே ஏன்?

இந்திய நுகர்வு சந்தை தொடர்ந்து அபரிமிதமாகவும் வேகமாகவும் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி திறன் குறைந்துகொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கே வளங்கள் இல்லையா, மனித வளம் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா, அனைத்தும் இருந்தும் இறக்குமதி சந்தையாகவே இந்தியப் பொருளாதாரம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் எதை நம்பியிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முதலீட்டாளர் மாநாடுகளின் மீது நம்பகத்தன்மை வரவேண்டுமெனில் அதன் ஒப்பந்தங்களில் தொடர் கண்காணிப்பும், வெளிப்படைத்தன்மையும் அவசியம். மாநில அரசுகள் வெளியிடும் முதலீட்டு அறிவிப்புகளை நிதி ஆயோக் அல்லது தொழில்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும். முதலீட்டு அறிவிப்புகளை செயல்படுத்தினால் மட்டுமே இந்தியாவின் தொழில் வளர்ச்சி உயரும், வேலைவாய்ப்புகள் பெருகும். இல்லையென்றால் முதலீட்டாளர் மாநாடுகளும் அரசியல் கூட்டங்களாகவே கருதப்படும்.

- saravanan.j@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்