எனது நண்பர் ஒருவர். அவரது மகன் அதிகம் படிக்கவில்லை. ஆனால் கெட்டிக்காரப் பையன். பிழைப்பதற்கு ஒரு மளிகைக் கடைவைக்கச் சொன்னார். ஊரின் ஒதுக்குப்புறம் புதிதாய் உருவாகி வரும் குடியிருப்பில் கடை திறக்கலாம் எனத் திட்டம். மகனை அங்கு அனுப்பி, விற்பனைக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது எனப் பார்த்து வரச் சொன்னார்.
மகனும் அங்கு சென்று எத்தனை பேர் குடியேறி இருக்கிறார்கள், எத்தனை வீடுகள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்தார்.அங்கிருப்பவர்களின் மாத வருவாய் நிலையையும் அவர்களின் மாத மளிகைச் செலவையும் அனுமானித்தார்.கடையைத் திறந்து விட்டார்.
ஐயா, அவர் என்ன அங்கிருப்பவர்களிடம் தான் கடை திறந்தபின் அவர்கள் அவரிடமே பொருட்கள் வாங்குவார்கள் என உறுதிமொழியா கேட்க முடியும்? அல்லது இந்த இடத்தில் வேறு மளிகைக்கடை வராது என எதிர் பார்க்க முடியுமா? போட்டி வந்தால் சமாளிக்கத் தானே வேண்டும்? வியாபாரம் என்பது ரிஸ்க் இல்லாமல் இருக்காதே? இருக்க முடியாதே?
தம்பி, சொந்தமாகத் தொழில் செய்வது என்பது வேலைக்குப் போவது போல இருக்காது. அதற்கு எது நடந்தாலும் சமாளித்துக் கொள்வோம் எனும் தைரியம் வேண்டும். கடும் உழைப்பும் பொறுமையும் வேண்டும்.
சில மாதங்கள் முன்பு சௌராஷ்டிர படேல் கலாசார சமாஜத்தில் காணொளி வாயிலாகப் பேசிய பிரதம மந்திரி மோடி அவர்கள், அமெரிக்காவில் வாழும் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது அவர்கள் தங்களது தங்கும் விடுதிகளில் விருந்தினர் வரும் பொழுது, தொலைக்காட்சியில் இந்தியாவின் சுற்றுலாத் தலங்களின் படங்களைக் காண்பித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், இதன் வாயிலாக அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்து வெளிநாட்டுப் பயணிகளை நம் நாட்டிற்கு வரும்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதென்ன வியப்பாக, வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? பின்னே என்னங்க? இந்தப் படேல்கள் ' ஓட்டல் , மோட்டல், படேல் வாலாக்கள்' என அன்புடன் வேடிக்கையாக அழைக்கப்படுபவர்கள்.
ஐயா, அமெரிக்கா பரப்பளவில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்று.எனவே நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகம். அந்தச் சாலையோர உணவுவிடுதிகள் தான் மோட்டல் என அழைக்கப் படுகின்றன. 2014ல் ஒரு பத்திரிகையில் வந்த புள்ளிவிபரத்தின்படி அமெரிக்காவில் உள்ள மொத்த மோட்டல்களில் சுமார் 50% அமெரிக்க இந்தியர்களால் நடத்தப்படுகின்றனவாம்.
அதில் சுமார் 70% இந்தப் படேல்களால் நடத்தப்படுகின்றனவாம். அதாவது மொத்த மோட்டல்களில் கிட்டத்தட்ட மூன்றிற்கு ஒன்று படேல்கள் வசம்!
சற்றே நினைத்துப் பாருங்கள்.பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்று, அங்கு இந்த மோட்டல் தொழிலில் இறங்கி, இந்த அளவு வளர்ந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் கெட்டிக்காரத் தன்மையும், பொறுமையும் உழைப்பும் தான் காரணமாக இருக்க முடியுமல்லவா?
கனடாவும் அமெரிக்கா போல வெகு தூரத்தில் உள்ள நாடு தான்.டெல்லி டொரண்டோ தூரம் சுமார் 11650 கிமீ. அதாவது தொடர்ந்து விமானத்தில் பறந்தாலும் 17 மணி நேரம் ஆகும். அங்கே நம் சீக்கியர்கள் பல துறைகளில் பரிணமித்து வருகிறார்கள்
தெரியுமா? மொத்த டிரக் வர்த்தகத்தில் 60% இவர்கள் வசமாம். கடுமையான உழைப்பு, கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறம், அஞ்சாமல் வருவதை எதிர் கொள்ளும் தைரியம் ஆகியவை தானே அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும்?
நம் தமிழ் நாட்டில், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எனப்படும் நகரத்தார்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கையில் உள்ள கண்டி கொழும்புவிற்குச் சென்றது 1805ல் என்றால் நம்ப முடிகிறதா? அத்துடன் பினாங்,சிங்கப்பூருக்கு 1824ல், ரங்கூனிற்கு1854ல், மாண்ட்லேயுக்கு 1885ல் சென்றதாக கூறுகிறார்கள்! பின்னர் இந்தோனேஷியா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து என மற்ற நாடுகளுக்கும் சென்றனராம்.
ஐயா, அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது. தொலைபேசி கிடையாது. கடல் மேல் பறந்து சென்றுவிட முடியாது. பாய்மரக் கப்பல்களில் வாரக் கணக்கில் பயணிக்க வேண்டியிருக்கும். புதிய நாட்டில் மொழி வேறாக இருந்திருக்கும். இந்தக் கஷ்டங்களையெல்லாம் மீறி அந்நாடுகளுக்குச் சென்று, வட்டித் தொழிலுடன் தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் மரங்கள் வளர்ப்பு, அரிசி ஆலைகள் என வெவ்வேறு வகையான வியாபாரங்கள் செய்துள்ளனர். பெரும் பொருள் ஈட்டியுள்ளனர்.
‘வாணிபம் செய்பவர்களுக்கு எந்த நாடும் அதிகத் தொலைவு இல்லை. கெட்டிக்காரர்களுக்கு எந்த நாடும் அயல் நாடல்ல.சொந்த நாட்டில் இருப்பதைப் போலவே வெற்றிகரமாகத் தம் வணிகத்தில் ஈடுபடுவார்கள் ' என்கிறார் சாணக்கியர்! உண்மை தானே?
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago