இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஒவ்வொரு நாள் முடிவிலும் `இதுவரை வரலாறுகாணாத அளவில்’ என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கடைசியாக கடந்த வாரத்தில் ரூ.74 என்கிற மதிப்புக்கு சரிந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்போது வரையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் மிக மோசமாக மதிப்பு சரிந்த நாணயமாக ரூபாய் உள்ளது. இந்தோனேசியாவின் ருபியா, பிலிப்பைன்ஸ் பெசோ நாணயங்களும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளன.
காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் 40 டாலரிலிருந்து 75 டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்க விதித்துள்ள வர்த்தக தடை காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
மேலும் ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துள்ள இதர நாடுகளும் வர்த்தக தடைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் இந்த அழுத்தம் அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது.
தவிர வளரும் சந்தை வாய்ப்புகளை கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சரிவினை சந்தித்துள்ளது. இதுவும் இதர வளரும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை உருவாக்குகிறது.
ரூபாய்மதிப்பு சரிவுக்கு வேறு பல அடிப்படையான காரணங்களும் உள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சரிவு நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் ஏற்றுமதி, தங்க ஏற்றுமதி வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை, முதலீடுகள் வெளியேறுவது மற்றும் சர்வதேச அளவில் வளரும் நாடுகளில் நாணயங்களில் நடைபெறும் வர்த்தகமும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் சேர்ந்து நாணய சரிவை உருவாக்கி வருகின்றன.
என்ன நடக்கும்
ரூபாய் மதிப்பு சரிவு குறுகிய கால சிக்கல் என்றாலும், சரிவின் தீவிரத்தை உணர்ந்து அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கிறார் எடல்வைஸ் எப்எக்ஸ் தரச்சான்று நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் குப்தா.
ரூபாய் மதிப்பு சரிவினால் பங்குச் சந்தையில் தாக்கம் தொடர்ச்சியாக எதிரொலிக்கிறது. பாண்டு சந்தையில் 10 ஆண்டு பாண்டுகளுக்கான ஆதாயமாக வட்டி விகிதம் 8.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிதிப்பாற்றக்குறையை சமாளிக்க ரூ.36,000 கோடி மதிப்புக்கு பாண்டுகளை சந்தையில் இருந்து வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கடன் பத்திரங்கள் வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த நிதிக் கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி உயர்வு இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. இதனால் இந்திய பங்குச் சந்தை முதலீடுகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
முக்கிய தொழில்களுக்கான முதலீடுகள் உயரும் என்பதால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இதையும் தாண்டி அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.47,891 கோடி அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது. கடன் சந்தையிலிருந்து ரூ. 43,560 கோடி வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் அந்நிய முதலீடு அளவு 2 லட்சம் கோடியாக இருந்தது. அதில் கடன் சந்தையின் முதலீடு 1.48 கோடியாக இருந்தது. இதுவும் அடிப்படையான காரணமாக உள்ளது.
எப்படி நிறுத்துவது ?
ரூபாய் மதிப்பை சரிவை குறிப்பிட்ட இலக்கை வைத்து நிறுத்தும் வாய்ப்பு இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு உள்ளது. இதனால் குறுகிய கால திட்டங்களில் மதிப்பு சரிவை நிறுத்தும் சாத்தியங்கள் இல்லை என்கிறார் அமெரிக்க-மெரில் லிஞ்ச் அமைப்பின் யெஜேஷ் மேத்தா. ஆனால் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் டாலர் மதிப்பு மிக ஸ்திரமான நிலைக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகியுள்ளது என்கிறார் இவர்.
ஐசிஐசிஐ வங்கியின் சர்வதேச சந்தைகள் தலைவர் பிரசன்னா கூறுகையில், டாலர் மதிப்பு 69 லிருந்து 70 வரை இருக்கையில் ரிசர்வ் வங்கியின் குறுக்கீடுகள் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட எல்லை வரைதான் குறுக்கிடக்கூடிய சூழல் இருந்தது என்கிறார்.
தற்போதுவரை ரிசர்வ் வங்கி 40000 கோடி மதிப்புக்கு டாலர் இருப்பு வைத்துள்ளது. அதனால் தேவையான சூழ்நிலையில் தலையீடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார் இவர்.
நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு ரிசர்வ் வங்கி என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாரொருவரும் கருத்து சொல்லத் தேவையில்லை என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய். வி. ரெட்டி. முதலில் ரிசர்வ் வங்கி எந்த விதமான உத்தரவுகள் மூலமும் இந்த விஷயத்தில் குறுக்கிட முடியாது. ஆனால் சந்தைக்கு சில சமிக்ஞைகளை அளிக்க முடியும். குறிப்பாக நம்மிடம் போதுமான அளவுக்கு டாலர் கையிருப்பு உள்ளது. இதைக் கொண்டு அடுத்த 9 மாதங்களுக்கன இறக்குமதி வர்த்தகத்தை சமாளிக்க முடியும்.
எப்டிஐ அதிகரிக்க வேண்டும்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த சூழலைப் புரிந்து கொண்டு, இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார் ரெட்டி.
ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது என இப்போது நாம் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கக்கூடாது. அதேநேரத்தில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்கான தொடக்கமாக இது அமைந்துள்ளது.
சந்தைக்கு என்ன தேவையாக உள்ளது? எந்த உத்தியை எந்த நேரத்தில் பயன்படுத்துவது? எந்த வகையில் தகவல்களை அளிப்பது என்கிற விஷயங்களில் முதலில் முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு சந்தை உணர்ச்சிகரமாக வினையாற்ற வேண்டும் என்பது முக்கியமானது என்கிறார் ரெட்டி.
சர்வதேச அரசியல் போக்குகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாணயம் மட்டுமல்ல, பிற ஆசிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் நாணய மதிப்பிலும் கடந்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 75 டாலர் என்கிற மதிப்பில் உள்ள ஒரு பேரல் கச்சா எண்ணெய் 88-90 டாலர் வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது என்கின்றன கணிப்புகள். அதை சமாளிக்க என்ன அஸ்திரம் இந்தியா வைத்துள்ளது என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
- maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago