யானைக்கும் அடி சறுக்கும் என்பது எதார்த்தம். இப்போது ஜாகுவாருக்கு அடி சறுக்கியிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கிய பிராண்ட் ஜாகுவார் லேண்ட் ரோவர்.
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமாக இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனை கடந்த காலாண்டில் கணிசமாக சரிந்துள்ளதுடன், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,902 கோடி நஷ்டத்தினை ஜாகுவார் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,182 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால் இந்த நிறுவனம் ரூ.224 கோடி லாபம் ஈட்டும் என சந்தையில் கணிப்பு இருந்தது. ஏனென்றால் கடந்த ஆண்டில் விற்பனை சரிந்த நிலையிலும் நிறுவனம் ரூ.3,609 கோடி லாபம் ஈட்டியிருந்தது. இந்த நஷ்டத்தின் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் தாக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன?
லேண்ட் ரோவரின் முக்கிய சந்தையான இங்கிலாந்தில் டீசல் மாடல்களுக்கான தேவை குறைந்து வருகிறது. இதனால் இங்கிலாந்தில் விற்பனை சரிவடைந்து வருகிறது. இங்கிலாந்து மட்டுமில்லாமல் ஐரோப்பிய சந்தையிலும் இந்த போக்குதான் உள்ளது. தவிர பிரெக்ஸிட் வெளியேற்றத்துக்கு பின்னரான பொருளாதார ஏற்ற இறக்கங்களும் ஜாகுவார் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் நிறுவனத்தின் லாபத்தில் ஆண்டுதோறும் 120 கோடி பவுண்ட் அளவுக்கு தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் எதிர்கால முதலீட்டு திட்டங்களிலும் லேண்ட் ரோவர் நிறுவனம் சிக்கலை சந்திக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் சீனாவில் இறக்குமதி குறைந்ததும் ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக சீனாவில் ஜூலை 1-ம் தேதியிலிருந்து இறக்குமதி கார்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஆதாயத்தை பயன்படுத்திக் கொள்ள சீன டீலர்கள் லேண்ட் ரோவர் இறக்குமதியை தாமதப்படுத்தியுள்ளனர். இதனால் சீன விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதும் நஷ்டத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மீண்டு வருவதற்கான திட்டங்கள்
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் கூறுகையில், சிக்கல்களை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் விரைவில் இதிலிருந்து மீண்டு லாப பாதைக்கு திரும்புவோம். செயல்பாடுகளை மேம்படுத்தி, செலவுகளை கட்டுப்படுத்தவும் ஒரே நேரத்தில் திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.
இந்த ஆண்டிலேயே விற்பனையை அதிகப்படுத்தவும், நிதி நிலைமையை மேம்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டம் வைத்துள்ளது என்கிறார். இதற்கேற்ப சமீபத்தில் எலெக்ட்ரிக் ஜாகுவர் I- பேஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் நிறுவனம் இதை சாதகமாக்கிக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எலெக்ட்ரிக் ஜாகுவார் கார்களை அறிமுகம் செய்வதற்காக நிறுவனம் 450 கோடி பவுண்டினை முதலீடு செய்ய திட்டம் வைத்துள்ளது. நடப்பு காலாண்டில் நிறுவனம் இதுவரை 110 கோடி பவுண்ட் முதலீடு செய்துள்ளது.
சமீபத்தில் இ-டைப் மாடலை இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்காக தயாரித்திருந்தது. முழுவது எலெக்ட்ரிக் காராக இதை தயாரித்துள்ளது. 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் குறிப்பிடுகையில், நடப்பாண்டில் ஜாகுவார் நிறுவனம் 4 முதல் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் போர்ட்போலியோவை அதிகரிப்பதன் மூலம் வேகமான வளர்ச்சி எட்டப்படும். செலவினங்களை குறைப்பதன் மூலம் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்கிறார் சந்திரசேகரன்.
2020-ம் ஆண்டுக்குள், ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் கார்களை தயாரிக்க வேண்டும் என நிறுவனம் இலக்கு வைத்திருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்கு பிரெக்ஸிட், தொழில்நுட்ப மாற்றங்கள் என பல நெருக்கடிகளை லேண்ட் ரோவர் கடக்க வேண்டியிருக்கிறது. இப்போது லாபம் குறைந்துள்ளதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது. இனி அடுத்த அடி சறுக்காமல் எடுத்து வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது லேண்ட் ரோவர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2008ம் ஆண்டில் போர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து 250 கோடி டாலருக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட வருமானம் இந்த முன்னணி பிராண்டுகளின் மூலம்தான் கிடைக்கிறது. 90 சதவீத செயல்பாட்டு லாபம் கையகப்படுத்திய நிறுவனங்கள் வழியாகக் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளைப் பொறுத்தவரையில் பயணிகள் மற்றும் வர்த்தக வாகன போர்ட்போலியோ மேம்பட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ.1,180 கோடியாக உள்ளது. ஆனால் வர்த்தக வாகன செயல்பாடுகளில் அசோக் லேலண்ட், டெய்ம்லர், வால்வோ போன்றவை போட்டியில் உள்ளன. கார்களில் மாருதி சுஸூகி நிறுவனம் கடும் போட்டியாக உள்ளது.
ஹூண்டாய் நிறுவனமும் டாடா கார்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளன. இப்போது லேண்ட் ரோவருக்கும் நெருக்கடி என்றால் என்னதான் செய்யும் டாடா மோட்டார்ஸ்?
- maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago