இ-காமர்ஸ் கொள்கையில் தடுமாறுகிறதா அரசு? 

By வாசு கார்த்தி

இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நிலையில் இந்தத் துறைக்கான வரைவு கொள்கைகளை கடந்த திங்கள் கிழமை மத்திய அரசு வெளியிட்டது. இப்போதைக்கு இவை வரைவு கொள்கைகளாக இருந்தாலும் கூட, சந்தையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான 70 நபர்கள் குழு இந்த வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த சர்ச்சைகளுக்கு என்ன காரணம், இது குறித்த துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பு இந்த வரைவுக் கொள்கையில் இருக்கும் முக்கியமான விஷயங்களை பார்த்துவிடுவோம்.

வரைவு கொள்கை

இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கி வரும் அதிகபட்ச தள்ளுபடியை இன்னும் இரு ஆண்டுகளில் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது இந்த வரைவு கொள்கையின் முக்கியமான நோக்கமாகும். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை (டேட்டா சென்டர்) இந்தியாவிலே அமைக்க வேண்டும். நிறுவனத்தின் கட்டுப்பாடு இந்திய நிர்வாகத்திடம் இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் 49 சதவீதத்துக்கு மேல் பங்குகள் இருக்கக் கூடாது. இ-காமர்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல கொள்கைகள் இருக்கின்றன.

அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு, உள்நாட்டு நிறுவனங்களை மேம்படுத்துவது என்பதுதான் இந்த வரைவுக் கொள்கையின் நோக்கம் என்கிறார்கள். ஆனால் இந்த துறை சம்பந்தப்பட்டவர்களே கடும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள்.

இ காமர்ஸ் பாலிசி (அ) ரீடெய்ல் பாலிசி

இது குறித்து இந்திய ரீடெய்ல் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலனிடம் பேசினோம்.

இந்த பாலிசியின் நோக்கம் என்ன, எதற்காக கொண்டுவரப்பட்டது என்றே புரியவில்லை. இது டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான பாலிசியா அல்லது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான பாலிசியா என்பதில் தெளிவில்லை. ஒருவேளை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான பாலிசி எனும் பட்சத்தில் எதற்காக இ-காமர்ஸுக்கு மட்டும் பாலிசி.? இ-காமர்ஸ் என்பது பொருட்கள் வாங்குவதுதானே. கடையில் ஒரு பொருளை வாங்கினால் என்ன, டிவி பார்த்து ஒரு பொருளை வாங்கினால் என்ன அனைத்துமே ரீடெய்ல்தானே.

இந்த துறைக்கென ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனில் ஒட்டுமொத்தமாக ரீடெய்ல் பாலிசி என கொண்டுவந்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இ-காமர்ஸுக்கு மட்டுமே பிரத்யேக கொள்கைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? அதேநேரத்தில் இந்த கொள்கைகளும் பயனுள்ளதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அந்நிய முதலீட்டு விஷயத்தில் பல குழப்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் சிங்கிள் பிராண்ட், மல்டி பிராண்ட் என பிரித்தார்கள் அதன் பிறகு உணவு  ரீடெய்ல் என பிரித்தார்கள்.

அந்நிய முதலீட்டு விஷயத்தில் தெளிவான கொள்கை இல்லை எனில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள இமேஜ் சரிவடையும். இந்தியாவில் ரீடெய்ல் தொழில் செய்வது மிகவும் சிக்கலானதாக மாறும். இந்த கொள்கையின் முக்கிய நோக்கம் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

பிரத்யேக பாலிசி தேவையா?

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களின் முன்னோடியான வைத்தீஸ்வரனிடம் இது குறித்து பேசினோம். முதலில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு என பிரத்யேக கொள்கையே தேவையில்லை என நினைக்கிறேன். இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் நிறுவன சட்டம், போட்டி ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அனைத்து ஆணையங்களுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க முடியும். அதனால் புதிய ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது விதிமுறைகளோ தேவையில்லை.

மற்ற துறைகளை பொறுத்தவரை விதிமுறைகளை உருவாக்கிய பிறகு தொழில் செய்யலாம். ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்களில் இது சாத்தியம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்து, அதனால் தொழில் விரிவடைந்த பின்புதான் விதிமுறைகளை உருவாக்க முடியும். ஆனால் இந்த விதிமுறைகள் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்க கூடாது. இந்த வரைவு கொள்கை இந்த துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

தவிர ஒரு பொருளை எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கத்தின் பணி என்பது தொழிலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதுதானே தவிர விலையை நிர்ணயம் செய்வது அல்ல. மேலும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

இதைவிட அந்நிய முதலீட்டு கொள்கையில் உள்ள குழப்பம். இன்வென்ட்ரி மாடல் (அதாவது பொருளை வாங்கி வைத்து விற்பனை) நிறுவனங்கள் 49 சதவீதத்துக்கு மேல் அந்நிய முதலீட்டை பெற முடியாது என்பதுதான். தற்போது இருக்கும் பல நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு இந்த அளவுக்கு மேல் இருக்கிறது. இது தெரிந்து எப்படி இந்த விதியை கொண்டுவந்தார்கள். அப்படியானல் இந்த விதியை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை இந்த விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என வைத்தீஸ்வரன் கூறினார்.

இந்த வரைவு கொள்கையால் எந்த நன்மையும் இல்லையா என்று கேட்டதற்கு, ஒரே ஒரு நன்மை இருக்கிறது. உதாரணத்துக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் முதலீட்டால் விரிவாக்கம் செய்யப்படுகிறது அதிக நிதி திரட்டும்போது நிறுவனத்தில், நிறுவனர்களுக்கான உரிமை குறைந்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக, நிறுவனர்களுக்கு கூடுதல் ஓட்டுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவில் இதேபோன்ற விதிமுறைகள் உள்ளன. தற்போது இங்கும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மட்டுமல்ல. அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் நல்லது என்று கூறினார்.

டேட்டா மையம்?

இ-காமர்ஸ் நிறுவனங்களின் தகவல் மையம் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பது மற்றுமொரு முக்கியமான பரிந்துரையாகும். ஆனால் அர்பன்கிளாப் நிறுவனத்தின் நிறுவனர் அபிராஜ் பஹல் கூறும்போது, இந்த விதியால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகம் செலவாகும். இதைவிட இந்த துறையில் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் எனில் இந்தியாவில் டேட்டா மையம்  அமைப்பதற்கு அதிகம் செலவாகும். அதனால் இந்த வரைவு நிச்சயம் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தொழில்துறை அமைப்பான அசோசேம், மீண்டும் `இன்ஸ்பெக்ட்ர ராஜ்’ உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறது. எந்த ஒரு தொழிலுக்கும் விதிமுறைகள் அவசியம்தான், ஆனால் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள இந்த துறையில் அதீத விதிமுறைகளால் புதிய தொழில்முனைவோர்கள் வரமாட்டார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறது.

தொழில் சம்பந்தமாக அரசு தவறாக யோசித்து தவறாகவே கொள்கைகளை உருவாக்கி இருக்கிறது. இ-காமர்ஸை பொறுத்தவரையில் அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும், தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியாக இருந்தாலும் கொள்கைகள் தவறாக இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். பயனுள்ள கொள்கைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

- karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்