2008ல் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் பார்த்தீர்களா? ஜெயம்ரவி நல்ல புத்திசாலியான இளைஞர். அவருடைய தந்தை பிரகாஷ்ராஜ் ரொம்பக் கண்டிப்பானவர். தனது மகன் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அபரிமிதமான அன்பைக் கொட்டி சர்வாதிகாரி போல நடந்து கொள்வார். என்ன உடை அணிய வேண்டும், எதைப் பேச வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், என எல்லாவற்றையும் மகனுக்கு அவரே தீர்மானிப்பார்.
தந்தையின் கெடுபிடிகள் மனதை வருத்தினாலும், குடும்பத்துக்காக பொறுத்துக் கொள்வார் ஜெயம்ரவி. மற்றவற்றில் தந்தை சொல்லைத் தட்டாதவர், தன் திருமணமாவது தனது விருப்பத்திற்கேற்பத்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் மகனின் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்ணை அவருக்கு மணமுடிக்கப் பார்ப்பார் பிரகாஷ்ராஜ்.
இதனால் மனமுடைந்து போகும் ஜெயம்ரவிக்கு வெகுளித்தனமாக நடந்து கொள்ளும் ஜெனீலியா மீது காதல் மலரும். பதிலுக்கு அவரும், ரவியை காதலிக்கத் தொடங்குவார். ஜெனீலியா, ரவி வீட்டில் தங்கி அக்குடும்பத்தாருடன் பழக வருவார்.ஆனால் அங்கு சுதந்திரமாக, இயல்பாக இருக்க முடியாது.தாக்குப் பிடிக்க முடியாமல், தன் வீட்டிற்கே திரும்பி விடுவார். அப்போது கோபமுற்று விரக்தியில் அப்பாவிடம் கொட்டித் தீர்ப்பார் ரவி.
‘என்னைப் பெரிய ஆளாக ஆக்க ஆசைப்படுவீர்கள். எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரணும் என நினைப்பீர்கள். ஆனால் எனக்கு என்ன வேணும், நான் எதற்கு ஆசைப்படுகிறேன் என்று கவலைப்பட மாட்டீர்கள். என்னை நம்ம ஆபிஸிற்கு போகச் சொல்வீர்கள்.
ஆனால் நான் போவதற்கு முன்பு நீங்களே எல்லாவற்றையும் செய்து வைத்து விடுவீர்கள்.அப்பா, அங்கே இருப்பவர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். என்னுடன் கேரம்போர்டு ஆட உட்கார்வீர்கள். ஆனால் என்னை ஆட விட மாட்டீர்கள். அந்த வெள்ளைக் காயைப் போடு, இந்தக் கருப்புக்காயை அடி, என எனது ஆட்டத்தையும் நீங்களே ஆடினால் நான் எதற்கப்பா ஆடணும்?' எனத் துக்கம் நெஞ்சை அடைக்கப் பொறிந்து தள்ளுவார்.
அவர் பேசப்பேச, நமக்கும் பொட்டில் அடித்த மாதிரி இருக்கும். அவரவர் ஆட்டத்தை அவரவர் தானேங்க ஆட வேண்டும்? அது எப்படிங்க ஒருவர் அவராக ஆடினால் நன்றாக ஆட மாட்டார், நமது யோசனைப்படி ஆடினால்தான் நல்லது என்று நாமாக முடிவு செய்வது?
ஐயா, இந்த ஆடு, மாடு, போன்றவை குட்டி போட்டால்,அக்குட்டிகள் சில நிமிடங்களிலேயே எழுந்து விடுவதை, நிற்பதை, நடப்பதைப் பார்த்து இருப்பீர்கள். பறவைகள் தம் குஞ்சுகளை தம் கூட்டை விட்டு வெளியேற, தானாகப் பறந்து பிழைத்துக் கொள்ள, நிர்ப்பந்திக்குமாம். முதலில் பஞ்சு போன்ற மிருதுவான பொருட்களை வைத்து இளம் குஞ்சுகளுக்கு வசதி செய்தாலும், உணவைக் கொண்டு வந்து வாயில் ஊட்டினாலும், பின்னர் அவை பறக்கக் கற்றுக் கொள்வதற்காக உணவைச் சிறிது தூரத்தில் மற்றொரு கிளையில் வைத்து விடுமாம்.
அதை எடுக்க முயற்சிக்கும் குஞ்சு ஓரிரு முறை கீழே விழுமாம். தான் விழாமல் இருக்கத் தன் இறக்கைகளை விரிக்கணும், அடிக்கணும் என கற்றுக் கொண்டு விடுமாம். தனது சிறகுகளை விரித்துத்தான் பறக்க முடியும், சொந்தக் காலில்தான் நிற்கணும் என்பது தானேங்க இயற்கையின் நியதி?
ஐயா, சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது ஞாபகம் இருக்கிறதா? முதலில், பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளும் வரை, கற்றுக் கொடுப்பவர், சீட்டைப் பிடித்துக் கொண்டு உங்கள் கூடவே ஒடி வந்திருப்பார்.
ஆனால் சிறிது நேரம் கழித்துப் பிடிப்பதை விட்டு விட்டிருப்பார். அவர் சீட்டைப் பிடிப்பதை விடாமலே இருந்திருந்தால், நீங்கள் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கவே மாட்டீர்கள்! ஏன், சமைக்கக் கற்றுக் கொள்வதும், மெக்கானிக்கிடம் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொள்வதும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்றுக் கொள்வதும், ஒரு கட்டத்தில் தனியாக விட்டால் தானேங்க சாத்தியம்?
பல சமயங்களில் நமக்குத் துணையாய் இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி விட்டால் நாம் அச்சப்படுகிறோம், கவலைப்படுகிறோம். அந்தச் சௌகரியத்தை, அரவணைப்பை இழக்க மனம் மறுக்கிறது. ஆனால் எந்த ஆதரவும் காலவரையின்றித் தொடர முடியாதே! ஒருவரை மற்றவர் எவ்வளவு நாட்களுக்குக் காப்பாற்ற முடியும்? ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் comfort zone ஐ விட்டு வெளிவந்து தானே ஆக வேண்டும்? எளிதானதையே விரும்பிச் செய்து கொண்டிருந்தால், அரிதான பெரியது கிடைக்காதல்லவா?
`என்னை விட்டுவிட்டுப் போய்விட்டவர்களுக்கு நன்றி. என்னால் தனித்தே சாதிக்க முடியும் என்பதை எனக்குப் புரிய வைத்தவர்கள் அவர்கள் தான்!’ என்கிறார் சாணக்கியர்! நமது நலம் விரும்பிகள் விலகிச்சென்றால் பிழைத்துக் கொள்வது போலவே, நாம் கெட்டுப் போகணும் என நினைப்பவர்கள் நம்மை விட்டுப் போனாலும் சாதித்துக் காட்டலாம், காட்டணும்!
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
29 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago