தகித்துக்கொண்டிருக்கிறது வெனிசுலா. தலைநகர் கராகஸில் உள்ள கடையில், இரண்டு முட்டைகள் வாங்கும் பெண்மணி, தன் கைப்பையிலிருந்து ஒரு கரன்சி கட்டை எடுத்துக் கொடுக்கிறார். வாடகை பைக்கில் ஏறிச் செல்லும் பயணி, 2,000 பொலிவர் நோட்டுக்களை பைக் ஓட்டுநருக்குக் கொடுக்கிறார்.
பணவீக்கத்தின் உச்சத்தை அடைந்திருக்கும் வெனிசுலாவில் மக்கள் அன்றாட வாழ்க்கைக்குச் செலவிட வேண்டிய தொகையின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. எங்கும் பதற்றம். பணவீக்கம் 1 லட்சம் சதவீதத்தை எட்டலாம் என்று வரும் தகவல்கள் வெனிசுலா மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சியின் தோல்வி இது என்று எதிர்க்கட்சியினரும், அமெரிக்காவின் தூண்டுதலின்பேரில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் போரின் விளைவு இது என்று அதிபரும் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். என்னதான் நடக்கிறது வெனிசுலாவில்?
ஒரு காலத்தில் தென் அமெரிக்க நாடுகளிலேயே வளமான பொருளாதாரம் கொண்ட நாடாக இருந்தது வெனிசுலா. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு அது. 1910-களில் அந்நாட்டில் அபரிமிதமான எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்தது. 1922-ல் வட மேற்கு நகரமான காபிமாஸில் உள்ள எண்ணெய்க் கிணறிலிருந்து எண்ணெய் பீறிட்ட நொடியில் அந்நாட்டின் பொருளாதார வளத்தின் பாதை துலக்கமானது.
உலக நாடுகள் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில், மத்தியக் கிழக்கு நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதியில் இறங்கின. எனினும், உலகம் முழுவதும் எண்ணெய் தேவை அதிகரித்த நிலையில் வெனிசுலாவுக்குப் பெரிய இழப்பு இல்லை. ஈரான், இராக், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஓபெக் அமைப்பை உருவாக்கியதிலும் வெனிசுலாவின் பங்கு பெரியது.
வெனிசுலாவின் பொருளாதாரம் 95%-க்கு மேல், எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருந்தது. இன்றுவரை அதுதான் நிலை. இன்றைய வீழ்ச்சிக்கும் அது மிக முக்கியக் காரணம்!
சாவேஸின் சமூக நலத் திட்டங்கள்
1999-ல் வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ், எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயை சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே அந்நாட்டில் 50% வறுமையைக் குறைத்தார். வேலைவாய்ப்புகளை அதிகரித்தார். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களே வியந்து பாராட்டும் வகையில் பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய அவர், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக, அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ.வில் புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உத்தரவிட்டார்.
இதன் மூலம், லட்சக்கணக்கானோர் அரசுப் பணியில் சேர்ந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. வெனிசுலா பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் நடவடிக்கைகளை எடுத்தார். தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விளைநிலங்கள் என்று பலவற்றை அரசுடைமையாக்கினார். எனினும், நிர்வாகரீதியான பிரச்சினைகள் காரணமாக இந்த முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின.
ஏழை மக்களுக்குச் சாத்தியமாகும் விலையில் உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும் என்று விரும்பிய சாவேஸ், கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு கொண்டுவந்தார். நல்ல நோக்கம் என்றாலும் நாளடைவில் இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நஷ்டமடையத் தொடங்கின.
அதேபோல், வெளிநாட்டு கரன்சி பரிமாற்றத்தில் சாவேஸ் ஏற்படுத்திய கட்டுப்பாட்டின் காரணமாக, அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை வாங்குவதில் வெனிசுலா மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இது கள்ளச் சந்தை உருவாகக் காரணமாகிவிட்டது.
அரசியல் அழுத்தங்கள்
சாவேஸுக்கு முன்பு, தனக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த வெனிசுலா ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்துவந்தது அமெரிக்கா. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் பெரிய அளவில் முதலீடு செய்துவந்தன. தீவிர இடதுசாரிக் கட்சியான வெனிசுலா சோஷலிஸக் கட்சியைச் சேர்ந்த சாவேஸ் அதிபரானதும் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. 2002 ஏப்ரலில் சாவேஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இரண்டே நாட்களில் சதியை முறியடித்து மீண்டும் அதிபரான அவர், இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் மேலும் மோசமடைந்தது. பின்னர், ஒபாமா ஆட்சிக்காலத்தில் நிலைமை சற்றே மாறினாலும் தற்போதைய ட்ரம்ப் அரசு மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறது. வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரித்திருக்கும் அமெரிக்கா, ராணுவத் தலையீடு மூலம் மதுரோவின் ஆட்சியை அகற்றப்போவதாக எச்சரித்தும்வருகிறது.
வெனிசுலாவில் மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறை நடப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூறிவரும் நிலையில், மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. உலக நாடுகள் வெனிசுலா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் கோரிவருகிறது. பிரேசில், சிலி, கனடா உள்ளிட்ட நாடுகளும் மதுரோ மீண்டும் அதிபராகியிருப்பதை ரசிக்கவில்லை. இப்படி அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் வெனிசுலா தடுமாறிவருகிறது.
கடும் வீழ்ச்சிக்கான காரணங்கள்
வெனிசுலாவின் இன்றைய நிலைக்குக் காரணமாகப் பல்வேறு அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஒன்று, எண்ணெய் விலை சரிவு. 2013 வரை பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாத நிலையில், சாவேஸின் மறைவுக்குப் பிறகு, 2014-ல் எண்ணெய் விலை சரிவின் மூலம் தடுமாறத் தொடங்கியது வெனிசுலா.
சமூக நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய நிதி ஆதாரமாக இருந்த எண்ணெய் ஏற்றுமதியில் விழுந்த அடி, மக்களை நேரடியாகப் பாதித்தது. வேலையில்லாத் திண்டாட்டங்கள் அதிகரித்தன. வேலைவாய்ப்பின்மையில் உலகிலேயே ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது அந்நாடு.
தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதிலிருந்து பின்வாங்குகின்றன.
டாலருக்கு நிகரான பொலிவர் மதிப்பில் இருக்கும் குளறுபடிகளால், ஏற்பட்டிருக்கும் நிச்சயமின்மை பணவீக்கத்துக்கு மிக முக்கியக் காரணமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட அன்றாடம் விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. கடைகள், உணவகங்கள் நடத்துபவர்கள் அன்றாடம் விலைப் பட்டியலைத் திருத்திக்கொண்டே இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில், 10,000 பொலிவர் சம்பளம் கிடைத்தாலே குடும்பச் செலவுகளைச் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு அதே தொகையை வைத்து ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளை உணவு வாங்குவதே பெரும்பாடாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள் மக்கள்.
பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில், புதிய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க முடிவுசெய்திருக்கிறது அரசு. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது எனும் அளவுக்கு விண்ணை எட்டுகிறது விலைவாசி. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள் வாங்க முடியாமல் தவித்து நிற்கிறார்கள் மக்கள். இந்தப் பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, வன்முறை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. தற்காப்புக்காகத் துப்பாக்கிகளை எடுத்துச் செல்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
“எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று போராடத் தயாராகிறார்கள் மக்கள். ‘டெமாக்ரட்டிக் யூனிட்டி ரவுண்ட் டேபிள்’ எனும் பெயரில் கூட்டணியாக இயங்கிவரும் எதிர்க்கட்சிகள் மதுரோ அரசுக்கு எதிராகக் களம் காணத் தயாராகிவருகின்றன. வெனிசுலா இந்தக் குழப்பங்களிலிருந்து வெளிவருமா என்பதைக் காலம்தான் முடிவுசெய்ய வேண்டும்!
- chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago