சென்ற ஞாயிற்றுக் கிழமை 2018 உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸும் குரேஷியாவும் மோதியதையும், 4- 2 எனும் கோல் கணக்கில் பிரான்சு வென்றதையும் பார்த்து ரசித்தீர்களா?
இந்தப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது என்பது தெரிந்திருக்கும்.2006ல் இதே பிரான்ஸ் இத்தாலியிடம் தோற்றது ஞாபகம் இருக்கிறதா? ஐயா, கூகுள் செய்யுங்கள், யூடியூபில் பாருங்கள். அது ஓர் அலாதியான விறுவிறுப்பான இறுதி ஆட்டம்.
2006 ஜூலை 9. பெர்லினில் பிரான்சுக்கும் இத்தாலிக்கும் மோதல்.
முதல் இருபது நிமிடங்களில் இருபுறமும் ஸ்கோர் செய்திருந்தனர். பிரான்ஸின் ஜினெதின் ஜிதான் ஏழாவது நிமிடத்தில் பெனால்டி பந்தைக் கோலில் போட்டு ஸ்கோரினைத் துவக்கினார். அந்தப் பந்து கோலின் விட்டத்தின் கீழ்ப்புறத்தை ஒரு கோணத்தில் தாக்கி , கோல் எல்லைக்கு அப்பால் எகிறி, தட்டாமாலை சுற்றி, விட்டத்தைத் தாக்கி, கோலின் எல்லைக்கு அப்பால் மீண்டும் எகிறியது. இன்று பார்த்தாலும், நாற்காலியின் விளிம்பிற்கு வந்து விடுவீர்கள், கண் இமைக்காமல் நகத்தைக் கடிப்பீர்கள்,பந்தோடு பயணிப்பீர்கள்!
இத்தாலிய வீரர் மார்கோ மாட்டராசி பத்தொன்பதாவது நிமிடத்தில் ஆன்டிரியா பிர்லாவின் கார்னர் பாலைக் கொண்டு இதைச் சமன் செய்தார். இரண்டு அணிகளுமே வெற்றியை ஈட்டும் நிலையிலிருந்தன. ஆட்டத்தின் இறுதியில் ஸ்கோர் 1-1 என்ற நிலையிலேயே இருந்தது. அதன் காரணமாக கூடுதல் நேரம் தரப்பட்டது.
ஆனால், இத்தாலிய வீரர் மார்க்கோவும் பிரெஞ்சு வீரர் ஜிதானும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஜிதானின் சட்டையை மார்கோ அடிக்கடி பிடித்து இழுக்கவே, ஜிதானுக்கு ஏகப்பட்ட எரிச்சல். `இப்ப இதை விட்டுவிடு, ஆட்டம் முடிந்த பின் உனக்கே கொடுத்து விடுகிறேன்’ என பிரெஞ்சுக்காரர் ஆத்திரத்தில் கேலியாய்ச் சொன்னதாகவும், அந்த இத்தாலிக்காரரோ, `அதற்குப் பதில் உன் சகோதரியைக் கொடுத்து விடேன்’ எனக் கேவலமாகப் பேசியதாகவும் சொல்வார்கள்.
இதைக் கேட்டால் யாருக்குத் தான் கோபம் வராது? ஜிதேனுக்கும் மூக்கிற்கு மேல் வந்திருக்க வேண்டும்.
மனுஷன் ஒரு கணம், தான் இருப்பது கால் பந்தாட்ட மைதானம், விளையாடுவது இறுதி ஆட்டம், அடிக்க வேண்டியது பந்தை என்பதையெல்லாம் மறந்து விட்டார். மார்கோவை தன் தலையால் ஒரே முட்டு முட்டிக் கீழே தள்ளி விட்டார்.
அப்புறம் என்ன? சிவப்பு அட்டை தான். ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அந்த சிறப்பான வீரர் இல்லாமல், பிரான்ஸ் போராட வேண்டியதாயிற்று. பின்னர் ஒரு பெனால்டி கோல் மூலம் இத்தாலி வென்று விட்டது. 24 ஆண்டுகளில் இத்தாலியின் முதல் வெற்றி அதுவாகும். அதன்முலம் அவர்கள் உலகக் கால்பந்துக் கோப்பைத் தரவரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடிக்க முடிந்தது. ஆனால், இத்தாலியினர் திட்டமிட்டே அவரைக் கோபத்துக்கு உள்ளாக்கி, வெளியேற வைத்தனர் என்ற குற்றச்சாட்டும் இருந்தது.
`கோபம் ஓர் முனை மழுங்கிய ஆயுதம் போன்றது. அது உங்களது எதிரிகளைக் காயப்படுத்தாது. ஆனால் உங்களைக் காயப்படுத்துவது என்னவோ உறுதி ' என்கிறார் சாணக்கியர்.
உண்மை தானே? முனை மழுங்கிய ஆயுதம் குத்தப்படுபனின் உடலில் இறங்காது. ஆனால் செலுத்திய ஆற்றல் எல்லாம் எதிராகத் திரும்பி, குத்தியவன் கையிலேயே இறங்கும். குத்துவாங்கியவன் அதைப் பார்த்து ரசிப்பான்.
இதனால்தான் நம்ம வள்ளுவரும் கோபப்படுபவனை நிலத்தை அறைந்தவனுக்கு ஒப்பிடுகிறார். சினத்தைச் சேர்ந்தாரைக் கொல்லி என்கிறார். ஐயா, சதுரங்கத்தை புத்தியின் விளையாட்டு என்பார்கள்.உண்மையில் அது மட்டுமா மூளையினால் விளையாடப்படுகிறது?
கைப்பந்தோ, கால்பந்தோ,கூடைப்பந்தோ, ஏன் ஓட்டப்பந்தயம், நீச்சலடிப்பது, பளு தூக்குவது, கராத்தே என்றால் கூட, மனம் சொல்வதைப் போல் தானே உடல் ஆடும், ஆட வேண்டும்? தம்பி, யாரும் எதுவும் சொன்னால், செய்தால், அதற்கு நாம் எப்படிப் பதில் சொல்கிறோம், அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தானே நமது வெற்றி அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் சொல்வார்களே, நாம் எதற்கும் `react’ செய்யக் கூடாது. `respond’ தான் செய்ய வேண்டும் என்று. அதாவது யோசிக்காமல், உணர்ச்சிவசப்பட்டுக் கோபத்தில் நடந்து கொள்ளக்கூடாது. சூழ்நிலைக்கேற்றவாறு சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
`கோபம் வந்தால் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுங்கள். அதிகக் கோபம் வந்து விட்டாலோ, நூறு வரை எண்ணுங்கள்’ என்கிறார் தாமஸ் ஜெபர்ஸன். ஆமாங்க, கோபம் வந்தால் பொறுமை வேண்டும், நிறையப் பொறுமை வேண்டும்!
மற்றவர் மேல் காட்டப்படும் கோபம் அவர்களை அதிகம் பாதிக்காது, உங்களுக்குத்தான் அதிகக் குந்தகம் விளைவிக்கும் என சாணக்கியர் சொல்வதை நாம் தினம்தினம் அனுபவத்தில் பார்க்கலாம்!
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago