வங்கிகளில் ஏற்பட்டுள்ள ரூபாய் பற்றாக்குறையை நீக்குதல், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுத்தல் மற்றும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்தல் ஆகிய மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி டாலர்-ரூபாய் பரிமாற்ற (swap) ஏலங்களை மேற்கொள்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் செய்துள்ள போர்ட்போலியோ முதலீடுகளை அதிக அளவில் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை சமாளிக்க ஜனவரியில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆறு மாத கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலத்தினை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மூன்றாண்டு கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலங்களை பிப்ரவரியிலும் மார்ச்சிலும் மீண்டும் மேற்கொண்டது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்கள் உள்ளன.
புவிசார் அரசியல் பொருளாதாரம்: இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் போர், நிச்சயமற்ற கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக உள்ளது. இதுதவிர, உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை உருவாகும் என்ற அச்சம் காரணமாக, உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
ரூபாய் மதிப்பு சரிவு: இந்த புவிசார் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளால் உலக முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்போலியோமுதலீடுகளை பாதுகாப்பான சந்தைக்கு, குறிப்பாக அமெரிக்காவின் மூலதன சந்தைகளுக்கு மாற்ற முடிவுசெய்தார்கள். இதன்படி, இந்தியாவிலிருந்து போர்ட்
போலியோ முதலீடுகளை திரும்பப் பெற்று வருகிறார்கள். கடந்த ஜனவரியில் ரூ.78,027 கோடி, பிப்ரவரியில் ரூ.34,574 கோடி, மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ரூ.24,753 கோடி முதலீடுகள் வெளியேறின. அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது டாலர் முதலீடுகளை திரும்பப் பெற்றதால் இந்தியாவில் டாலர் சப்ளை குறைந்தது. இதனால் டாலர்களுக்கான தேவை உயர்ந்ததால் அதன் மதிப்பு உயர்ந்தது. அதேநேரம் டாலரை அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையால் ரூபாயின் மதிப்பு குறைந்தது.கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்தது. 2024 ஜனவரியில் 83.21 ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3.3% சரிந்து கடந்த மார்ச் 10-ம் தேதி வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில் 87.33 வரை சரிந்தது.
டாலர் விற்பனை: டாலர் பற்றாக்குறையினால் ரூபாயின் மதிப்பு குறைவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள அந்நியச் செலாவணி கையிருப்பிலிருந்து டாலர்களை இந்திய சந்தையில் அவ்வப்போது விற்பனை செய்தது. அந்த வகையில் கடந்த டிசம்பரிலிருந்து இதுவரை 111.2 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது. இதனால் டாலர் கையிருப்பு குறைய தொடங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் 640.28 பில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 2025 ஜனவரி 17ஆம் தேதி 623.98 பில்லியன் டாலராக குறைந்தது .
தொடர்ச்சியாக போர்ட்போலியோ முதலீடுகள் வெளியேறிவருவதால், டாலர் இருப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், வலுவான அந்நியச்செலாவணி கையிருப்பு உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். டாலர்களை அவ்வப்போது விற்றுவந்ததால் டாலர் தட்டுப்பாடு குறைந்து ரூபாய் மதிப்பு சரிவைஒரு டாலர் ரூ.87 என்ற அளவில் ரிசர்வ் வங்கியால் நிறுத்த முடிந்தது. மார்ச் இறுதியில் டாலர் மதிப்பு சரியத் தொடங்கியதால் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
ரூபாய் பணப் பற்றாக்குறை: ஆனால் அதேநேரம் இந்திய வங்கி துறையில் கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 23-ம் தேதி ரூபாய் தட்டுப்பாடு 3.15 லட்சம் கோடியை எட்டியது. ரிசர்வ் வங்கி டாலர்களை வங்கிகளுக்கு தொடர்ச்சியாக விற்றதாலும் அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகளை தனிநபர்களும் நிறுவனங்களும் முன்கூட்டியே செலுத்தியதாலும் ரூபாய் தட்டுப்பாடு அதிகரித்தது. பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் வெளிச்சந்தைகளில் கடன் வாங்கின.
இதனால் வங்கிகள் தங்களுக்கிடையே கொடுத்து வாங்கிக் கொள்ளும் கடன் மீதான வட்டியை, ரிசர்வ் வங்கி தருகின்ற குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டியைவிட அதிகமாகவே வைத்திருந்தன. சமீபத்தில் ரெப்போ வட்டியை 2 தவணைகளாக 6.5-லிருந்து 6 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்தாலும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க தயங்குகின்றன. பிப்ரவரி 20-ம் தேதி மதிப்பீட்டின்படி வங்கி துறையில் ஏற்பட்டுள்ள ரூபாய் தட்டுப்பாட்டின் மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடி ஆகும். இந்த ரூபாய் பற்றாக்குறையை நீக்கும் முயற்சியாக டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
டாலர் ரூபாய் பரிமாற்ற ஏல முறை: டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலமுறையில் முதற்கட்ட நடவடிக்கையாக, வங்கிகளிடம் உள்ள டாலர்களை ரிசர்வ் வங்கி வாங்கிக் கொள்ளும். அதற்கு ஈடான மதிப்பில் ரூபாய்களை வங்கிகளுக்கு வழங்கும். இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, பரிமாற்ற கால அளவான 3 ஆண்டுகள் கழித்து, வங்கிகள் தாங்கள் வாங்கியரூபாய்களை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்துவிட்டு தங்களின் டாலர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிமாற்றம் ஏலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஏலம் நடைபெறும் தேதியில் டாலர்களை அதிகமாக வைத்திருக்கும் வங்கிகள் ரிசர்வ்வங்கியிடம் டாலர்களை விற்பதற்கு முன்வரும். ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட துணை நிறுவனமான பைனான்சியல் பெஞ்ச்மார்க் இந்தியா (FBIL), டாலரின் விலையை ரூபாயில் தீர்மானிக்கும். அதன் அடிப்படையில்வங்கிகள் தங்களது டாலர்களை ரிசர்வ் வங்கிக்கு விற்பனை செய்யும். மூன்று ஆண்டுகள் கழித்து, டாலரின் ரூபாய் விலை மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதால் எவ்வளவு ரூபாய் கொடுத்து டாலர்களை திரும்ப வாங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றன என்பதை வங்கிகள் ஏலத்தின்போது தெரியப்படுத்தும். மேற்படி நிறுவனம் குறிப்பிடுகின்ற நாணய மாற்று விகிதத்தை (எக்ஸ்சேஞ் ரேட்டை) அடிப்படை குறிப்பு விகிதமாக கணக்கில் கொண்டு ஏலம் நடைபெறும்.
எந்த வங்கி குறைவான விலையில் டாலர்களை திரும்ப வாங்கிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளதோ அந்த விலையில் ஏலம் முடிவு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் கழித்து அந்த விலையில் டாலர்களை வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி விற்பனை செய்யும். ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தபட்ச விற்பனை வரம்பாக 10 மில்லியன் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏல முறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் 10 மில்லியன் டாலர்களின் மடங்குகளாக, கூடுதல் டாலர்களை வங்கிகள் விற்க முடியும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்புகின்ற டாலர் டெபாசிட்டுகளை, கணிசமான அளவில் வைத்துள்ள வங்கிகளிடமிருந்து டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலம் மூலம் ரிசர்வ் வங்கி வாங்குகிறது. இந்த ஏலத்தின் மூலம் 10 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி வாங்கும்போது அதற்கு ஈடாக வங்கிகளுக்கு (தோராயமாக) 86,000 கோடி ரூபாய்கிடைக்கிறது..இதை வங்கிகள் கடனாக கொடுப்பதன் மூலம் தங்களது ரூபாய் இருப்பை அதிகப்படுத்திக் கொள்ளவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முடியும். அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி குறைந்து வரும் டாலர் இருப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள்: ரூபாய் பற்றாக்குறையை நீக்குவதற்காக, மார்ச் வரை இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு திறந்த வெளிச்சந்தை நடவடிக்கைகள் மூலமாக ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்களை வங்கிகளிடமிருந்து வாங்கி உள்ளது. மாறும் விகித ரெப்போ ஏலத்தின் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளுக்கு கடன் வழங்கி உள்ளது. இந்த முயற்சியில் ரிசர்வ் வங்கியின் வெற்றி என்பது சந்தை நிலவரங்களை பொறுத்தே அமையும். மேலும் மூன்று ஆண்டு கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலத்தினை கடந்த முறை இந்தியா மேற்கொண்ட போதும், அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் இருந்தார், ரூபாய் மதிப்பும் அப்போது சரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகள் ரூபாய் பற்றாக்குறை சிக்கல்களை குறைக்கவும், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்கவும், டாலர் கையிருப்புகள் உயர்ந்து நிலையான நிதிமேலாண்மைச் சூழலை ஏற்படுத்தி உலக முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.
- முனைவர் அ.ஜ.ஹாஜா முகைதீன்
பொருளியல் துறை தலைவர்,
ஜமால் முகமது கல்லூரி திருச்சி
ajhajamohideen17@gmail.com