கடந்த 1983-ம் ஆண்டு இந்தியாவின் ஷாம்பு சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதுவரை ஷாம்பு பாட்டில்களில் பல நாட்களுக்கு பயன்படுத்தும் அளவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. கெவின்கேர் நிறுவனம் முதல் முறையாக ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் அளவில் சிறிய சாஷேகளில் ஷாம்புவை சந்தைப்படுத்தத் தொடங்கியது. இதனால் அதிக விலை கொடுத்து ஷாம்பு பாட்டில்களை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, 25 பைசாவில் ஒரு சாஷே ஷாம்பு வாங்கி பயன்படுத்தும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது.
இதுபெரிய ‘சாஷே புரட்சியாக’ இன்றளவும் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், பேடிஎம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை இணைந்து ‘ஜன் நிவேஷ்’ என்ற எஸ்ஐபி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி குறைந்தபட்சமாக, ரூ.250 முதல் முதலீடு செய்ய முடியும். இதற்கு முன்பும் சில மியூச்சுவல் பண்டுகள் எஸ்ஐபி திட்டத்தில் ரூ.100 மற்றும் ரூ.500 என்ற அளவில் முதலீடுகளை அனுமதித்தன. ஆனால் அவற்றின் செயல்பாட்டு செலவுகள் அதிகமாக இருந்ததால் அவை வெற்றி பெறவில்லை.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச் அவர்களின் கனவு திட்டம் என்றே இதைச் சொல்லலாம். அவர்தான் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தார். முதல்முறை முதலீட்டாளர்கள் மற்றும் கிராமப்புற, சிறுநகர மற்றும் நகரங்களில் குறைந்த வருவாய் ஈட்டுபவர்களை முதலீட்டு திட்டங்களில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்த திட்டம்.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான இந்திய குடும்பத்தினர் பயனடைவார்கள் என கருதப்படுகிறது. இந்த திட்டம், சிறு வியாபாரம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள் உட்பட சாமானிய மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பயன்பெற வழி வகுக்கிறது.
அதிக வருவாய் நீண்டகால அடிப்படையில்: பங்குச் சந்தையில் முதலீடு என்பது நீண்டகால அடிப்படையில் அதிக லாபம் தருவதாக பார்க்கப்படுகிறது. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, 30 வருட காலத்தில், இந்தியாவில் சென்செக்ஸ் சராசரியாக சுமார் 15% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR) வருவாயை வழங்கியுள்ளது. அதாவது நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இருப்பினும், இந்த காலக்கெடுவுக்குள் சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி முந்தைய ஆண்டுகளின் லாபங்கள் வரும் காலங்களில் தொடரும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஒருவர் மாதம் ரூ.250 முதலீடு செய்து வந்தால், 30 வருடங்களில் அவருடைய முதலீடு ரூ.90,000 ஆக இருக்கும். 15 சதவீத சிஏஜிஆர் அடிப்படையில் இதனுடைய வளர்ச்சி ரூ.17,52,455 ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
கட்டணம் இல்லை: இதுகுறித்து பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) தலைவர் சி.எஸ். செட்டி கூறும்போது, “இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு கட்டணம் அல்லது கமிஷன் எதுவும் விதிக்கப்பட மாட்டாது. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கான இலவச சேவையாக இருக்கும்” என்றார். தற்போது, இந்த திட்டம் எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் பிரத்தியேகமாக தொடங்கப்படுகிறது. வரும் காலங்களில் மேலும் செபியால் அனுமதிக்கப்பட்ட அளவில் மற்ற திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
- 1952kalsu@gmail.com