இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தன. நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை, டாலர் மதிப்பு உயர்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன போர், ரஷ்யா-உக்ரைன் பேர் உள்ளிட்டவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இப்போது வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சரிவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மனதில் எழுகிறது. இதுபற்றி பார்ப்போம்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் (மார்ச் 20 முதல் 27 வரையில் ரூ.33,850 கோடி) முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். ஆனாலும், இந்திய பங்குச் சந்தைகளின் உயர்வுக்கு, பரந்த சந்தைகளை இயக்கும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (டிஐஐ) நடவடிக்கைதான் காரணம் என்றுதான் நான் நினைக்கிறேன். வரும் காலத்திலும் அவர்களின் நடவடிக்கை தொடர வாய்ப்பு உள்ளது.
சாதகமான அம்சங்கள்: எப்ஐஐ-களைப் பொருத்தவரையில் அவர்களின் பார்வையில் இந்திய பங்குச் சந்தைகள் நேர்மறையானதாக உள்ளது. குறிப்பாக, சமீப காலமாக அதிகரித்து வந்த டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது (டாலர் குறியீடு 109-லிருந்து 103 ஆக குறைந்துள்ளது), அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் 2 முறை வட்டி விகிதங்களை குறைக்கும் என அறிவித்திருப்பது ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமான அம்சம் ஆகும்.
இந்தியாவைப் பொருத்தவரையில், கச்சா எண்ணெய் விலையில் நிலைத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்திய பங்குகளின் விலை மதிப்பு வரலாற்று ரீதியிலான மதிப்புடன் ஒத்துப்போவதாக உள்ளது என கருதப்படுகிறது. பங்குகளின் விலை அதிகமாக இருக்கிறது என இனி கூற முடியாது. சொல்லப் போனால் நீண்டகால சராசரி விலையில்தான் பங்குகள் இப்போது வர்த்தகமாகி வருகின்றன.
எனவே, இந்தியா உள்ளிட்ட வளரும் சந்தைகளில் முதலீடு வரத் தொடங்கும். ஆனால் இந்த செயல்முறை மெதுவாக இருக்கும். ஏனெனில், அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. இதுதவிர 2025-26 நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் கண்ணோட்டம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை இன்னும் நீடிக்கிறது. இந்த 2 அம்சங்களும் முக்கிய பங்கு வகிப்பதால், எப்ஐஐ-களின் உண்மையான நடவடிக்கை ஏப்ரல் மாத நடுப்பகுதியில்தான் தொடங்கும்.
ரூ.2.5 லட்சம் கோடி ரொக்கம்: இது ஒருபுறம் இருக்க, இந்திய முதலீட்டாளர்களின் எஸ்ஐபி முதலீடு தொடர்வதால், டிஐஐ-கள் கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடியை ரொக்கமாக கையிருப்பில் வைத்துள்ளனர். இந்தப் பணம் பெரிய நிறுவனங்களின் (லார்ஜ் கேப்) முதலீட்டுக்கானது மட்டுமல்ல. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் முதலீட்டையும் (மிட் அன்ட் ஸ்மால் கேப்) உள்ளடக்கியது. இதுமட்டுமல்லாமல், பங்குச் சந்தைகள் தொடர்ந்து இறங்கியதால், சிறிய மற்றும் நடுத்தர
நிறுவன பங்குகளை டிஐஐ-கள் அதிக அளவில் விற்று அவற்றை ரொக்கமாக வைத்துள்ளனர். அதில் ஒரு பகுதியை எப்ஐஐ-கள் விற்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்தனர். இதனால், நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகள் விலை சரிந்த அளவுக்கு பெரிய நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடையவில்லை. எப்ஐஐ-கள் இந்திய பங்குச் சந்தைக்கு திரும்பினால், சமீபத்தில் விலை உயர்ந்த பெரிய நிறுவன பங்குகளை மீண்டும் அவர்களுக்கு விற்க டிஐஐ-கள் முயற்சிப்பார்கள். அந்த பணத்தை மீண்டும் நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வார்கள்.
வட்டி குறைய வாய்ப்பு: அமெரிக்க பெடரல் ரிசர்வின் மென்மையான கொள்கை நிலைப்பாடு மற்றும் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையால் அந்நாட்டு பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் 2 முறை வட்டி குறைப்பை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது இந்திய (10 ஆண்டு - 6.63%) மற்றும் அமெரிக்க (10 ஆண்டு - 4.28%) கருவூல பத்திரங்களுக்கு இடையே உள்ள தற்போதைய வட்டி வருவாய் வித்தியாசத்தை அதிகரிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்காவிட்டால், ரூபாய்க்கு நெருக்கடி ஏற்படும். எனவே, இந்த செயல் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையை ஆதரிக்கும் என்று நம்புகிறேன். இதற்கு மேலும் ஆதரவாக, இந்திய உணவு பணவீக்கம் குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை நிலையானதாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இன்னும் ராக்கெட் வேகத்தை எட்டவில்லை. அதாவது ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது.
கவர்ச்சிகரமான துறைகள்: மேலும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி வரிச் சலுகை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஒரு பகுதி நுகர்வாகமாறும். மற்றொரு பகுதி சேமிப்பு மற்றும் முதலீடாக மாறும். இதனால், வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள், காப்பீடு, சொத்து மேலாண்மை, பங்குத் தரகு மற்றும் பங்குச் சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் பயன் அடையும்.
வரிச்சலுகையால் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைத்தால் மக்கள் வீடு, வாகனங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை மாதத் தவணையில் வாங்கக் கூடும். இதனால், ரியல் எஸ்டேட், வாகனம், நுகர்பொருள் துறை பங்குகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
களையிழந்த ஐ.டி. துறை: பங்குச் சந்தைகள் சரிவில் இருந்தபோது, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வந்தது. இதனால், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் டாலரில் வர்த்தகம் செய்யும் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) சார்ந்த பங்குகளை அதிக அளவில் வாங்கி குவித்தனர். ஆனால், இப்போது டாலர் மதிப்பு சரிந்து ரூபாய் மதிப்பு மீண்டும் நிலைபெற்று வருகிறது. இரண்டாவதாக, அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் ஐ.டி. துறைக்கான செலவை நிறுவனங்கள் அதிகரிக்காது என்ற கருத்து நிலவுகிறது. இத்தகைய காரணங்களால், ஐ.டி. துறை பங்குகள் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காது என டிஐஐ-கள் கருதுகின்றனர். இதனால் ஐ.டி. பங்குகளில் கிடைத்த லாபத்தை வெளியில் எடுத்து வேறு துறை பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடு இனி ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இருக்காது என கருதுகிறேன். மாறாக, லாபம் ஈட்டும் திறனை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளில் முதலீடு செய்வார்கள் எனத் தெரிகிறது.
ஏனெனில், வரவிருக்கும் வருவாய் பருவத்தில் தான் அடுத்த ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும், ஒரு பங்கு ஈட்டும் வருமானம் (இபிஎஸ்) வழிகாட்டுதலில் உண்மையான தெளிவைக் கொடுக்கும். மேலும் சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நிறுவன பங்குகள் மற்றும் துறைகள் இன்னும் சிறிது காலம் ‘காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு' பட்டியலில்தான் இருக்கும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரவுள்ளது. இது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்துதான் இந்திய பங்குச் சந்தைகளின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும்.
- sunilsubramaniam27@gmail.com