சபாஷ் சாணக்கியா: அறிவாளி, ஆனால்...

By சோம.வீரப்பன்

நண்பர் ஒருவரின் மகன். பொறியியல் படித்து விட்டு, மேலாண்மையும் படித்தவர். ஆமாம், படிப்பில் `Golden combination’ என்று ஐஐடியில் படித்துவிட்டு ஐஐஎம்-ல் படித்தவர்களைக் கொண்டாடுவார்களே அது போல. உடம்பெல்லாம் மூளை. ஆள் பலே கெட்டிக்காரர். ஆறு அடி உயரம். கூரிய மூக்கு. ஊடுருவும் சல்லடைக் கண் பார்வை. யாரையும் எள்ளி நகையாடும் ஏளனச் சிரிப்பு. எப்பவும், `எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாதே’ எனச் சொல்லாமல் சொல்லும் அலட்சியப் போக்கு.

ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் சேர்ந்தார். மிகக் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஆண்டுச் சம்பளம் எட்டு இலக்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

நண்பர் தன் மகனின் பெருமைகளை அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதே சமயம், மகன் தன்னையே மதிக்கவில்லை என வருத்தமும் பட்டுக் கொள்வார். `அப்பா நீயெல்லாம் வேஸ்ட். உன் வயசுக்கு ஏதாவது சாதித்திருக்க வேண்டாமா? சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற மாதிரி ஒரே ஊரில், ஒரே வங்கியில் சாதாரண வேலையில் காலத்தை வீணடித்து விட்டாய்’ என என்னைக் கேட்டுச் சிறுமைப் படுத்துகிறான் எனப் பொருமுவார்.

சரி, இந்த மகா புத்திசாலி நிறுவனத்தில் என்னென்ன சாதித்தார் என நண்பரைக் கேட்டேன். அவரது பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மகனை வேலையை விட்டு விடச் சொல்லி விட்டார்களாம். எப்பப் பார்த்தாலும் தனது அறிவைப் பறைசாற்றுவாராம். ஆனால் மற்றவர்களிடம் எந்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். எனவே அவரது அறிவு அந்நிறுவனத்திற்குப் பயன்படாது போயிற்று. அவருடைய மேலதிகாரி அவரிடம், `நீங்கள் அசாத்திய புத்திசாலி என்பதை மறுக்கவில்லை. உங்களை நாங்கள் தேர்வு செய்தது உங்கள் அறிவினால் என்பது உண்மையே. அது முடிந்த கதை. ஆனால், உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது அதற்கல்ல, அது நீங்கள் செய்யும் பணிக்காக’ என்று கூறியிருக்கின்றனர். இந்த உண்மை எந்தப் பணியாளருக்கும் பொருந்துமல்லவா?

`அறிவு இருந்தும், திறமையைப் பயன்படுத்தா விட்டால், உலகம் அவனை மதிக்காது’ என்பது சாணக்கியர் கூற்று. இது மறுக்க முடியாத உண்மை அல்லவா? எந்தப் பொருளும் இருப்பதால் மட்டுமே பலனில்லை. அது பயன்படுத்தப்பட்டால் தானே பலன்?

`எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் அறிவாளி’ என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ்.

அருமையான கோட் சூட் வைத்திருப்பவர் அதை 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் போட வாய்ப்பில்லை என்றால்? பட்டு சேலையோ, வைர நகையோ, அணிவதில் தானே உண்மையான மகிழ்ச்சி, பலன்? விலை உயர்ந்த கார்களை வாங்கிப் போர்ட்டிகோவில் நிறுத்துவதே சிலருக்குப் பெரும் பயனாய் இருப்பது வேறு விஷயம்.

செட்டிநாட்டுக் கல்யாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.இன்றும் கூட சில திருமணங்களில் பெண்ணுக்குச் சீராக வைரம், தங்கம், வெள்ளியுடன் பித்தளை, எவர் சில்வர், மரச் சாமான்கள் என அடுக்கடுக்காய் கொடுப்பார்கள். அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்றவை கூட மிக நேர்த்தியாகக் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். அடடா, இவற்றில் ஓரிரண்டையாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்களே, இவை இருந்தென்ன பலன் எனப் பலர் நினைப்பதுண்டு.

சரி, அறிவு நிறைய இருந்தும், சிலர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அதாங்க தயக்கம், பயம். `செய்து தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக இறங்கி விட மாட்டார்கள் இந்தத் `தயக்கத் திலகங்கள்’. தம்பி, நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள, புத்தகத்தில் படித்தால் போதாதே, தண்ணீரில் இறங்கவும் வேண்டுமில்லையா?

இன்றைய உலகில், கடினமாய் உழைத்தால் போதாது, சாமர்த்தியமாய் பிழைத்துக் கொள்ளவும் தெரியணும் என்பார்கள். `நீங்கள் செய்யக்கூடியது உங்கள் திறமையைப் பொறுத்தது. செய்வது உங்கள் ஊக்கத்தைப் பொறுத்தது. சிறப்பாகச் செய்வது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது’ என்கிறார் அமெரிக்கக் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான லோ ஹோல்ட்ஜ்.

இதற்கு எளிய வழி நமது முன்னேற்றத்திற்குத் தேவையானவர்களுடன், உதவக் கூடியவர்களுடன் நட்புப் பாலம் அமைத்துக் கொள்வது (networking) தானே? மேலும் பலரும் தம் திறமையை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லையே. `நம்மால் செய்ய முடிந்தவை எல்லாவற்றையும் நாம் செய்து விட்டோமென்றால், நாம் நம்மையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விடுவோம்' என்கிறார் கண்டுபிடிப்புக்களுக்குப் பேர் போன தாமஸ் ஆல்வா எடிஸன்.

என்னங்க, ஒருவரை உலகம் அவர் எவ்வளவு அறிவாளி என்பதற்காக மதிக்காது, எவ்வளவு திறமையைத் தம் செயலில் காட்டுகிறார் என்பதை வைத்தே மதிக்கும் எனச் சாணக்கியர் சொல்வது முற்றிலும் சரி தானே?

-somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்