மேலும் ஒரு ராஜினாமா!

By வாசு கார்த்தி

 

ர்விந்த் சுப்ரமணியனின் ராஜினாமா கடந்த வாரத்தில் முக்கிய பேசு பொருளாக இருந்தது. அதிகாரிகள் வருவார்கள் போவார்கள் என்றாலும், கடந்த ஓர் ஆண்டில் வெளியேறும் இரண்டாவது முக்கியமான நபர் என்பதால் ராஜினாமா குறித்த சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அர்விந்த் பனகாரியா ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது அர்விந்த் சுப்ரமணியனும் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

``என் ராஜினாமாவில் எந்த ரகசியமும் இல்லை. வரும் செப்டம்பரில் பேரக்குழந்தை பிறக்க இருக்கிறது. அதனால் குடும்பத்துடன் இருக்க அமெரிக்கா செல்கிறேன்,’’ என செய்தியாளர்கள் சந்திப்பில் அர்விந்த் சுப்ரமணியன் கூறினார்.

ஆனால் இவரது ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் இயக்கும் இந்த கப்பல் (மத்திய அரசு) பாறையில் முட்டப்போவது தெரிந்து அர்விந்த் சுப்ரமணியன் வெளியேறி இருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் கேப்டன் (பிரதமர் மோடி) ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்வதேசி ஜாக்ரான் மஞ்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் கூறும்போது, நாட்டை பற்றி முழுமையாக தெரிந்த நபரை ஆலோசகராக நியமனம் செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து ஆலோசகர்களை இறக்குமதி செய்யக்கூடாது. அவர்களுடைய திட்டம் என்ன என்பது குறித்து நமக்குத் தெரியாது. வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளை கிராமங்களில் இருந்து வெளியேற்றுவதுதான் அவருடைய முக்கியமான இரண்டு கொள்கைகள். விவசாயிகளுக்கான மறுவாழ்வு திட்டமும் அவரிடம் இல்லை.

விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் திட்டமும் இல்லை, கிராமங்களை மேம்படுத்தும் திட்டமும் இல்லை. ஆனால் விவசாயிகளை வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறார். விவசாயிகள் மற்றும் உள்நாட்டு சிறு தொழில்முனைவோர்கள் குறித்த நபர் ஆலோசகராக இருக்க வேண்டும். வேலையில் இருந்து விடுப்பு எடுக்கும் நபர் ஆலோசகராக இருக்கக் கூடாது என விமர்சித்திருக்கிறார்.

ஆனால் அஸ்வனி மகாஜன் கருத்துக்கு நேர் மாறாக, அருண் ஜேட்லி தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் அர்விந்த் சுப்ரமணியன் சாதனைகள் குறித்து பதிவிட்டு பேசி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வீடியோ கான்பெரன்ஸ் முறையில் உரையாடினோம். குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்ய இருக்கிறேன் என்று கூறினார். ஒப்புக்கொள்வதை தவிர வேறு வாய்ப்புகளை அர்விந்த் எனக்கு வழங்கவில்லை. ஒரு நாளில் பல முறை நாங்கள் சந்தித்து உரையாடுவோம்.

பல புதிய ஆலோசனைகள், கொள்கை முடிவுகளை உருவாக்கியவர், கல்விக்காக `ஸ்வயம்’ என்னும் ஆன்லைன் அமைப்பினை உருவாக்கியவர். ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொண்டு, வரி விகித கருத்தொற்றுமை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் இல்லாதது எனக்கு இழப்பு என்றும் ஜேட்லி கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அர்விந்த் சுப்ரமணியன் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியமனம் செய்யப்பட்டார். முதலில் மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர், அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு மே மாதம் வரை அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. 11 மாதங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.

``இப்போதைக்கு ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன். கடைசி நாள் குறித்து இன்னும் யோசிக்கவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியேறுவேன். என்னுடைய அடுத்த திட்டம், எனக்கு அடுத்து யார் வருவார்கள் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்,’’ என செய்தியாளர்கள் சந்திப்பில் அர்விந்த் சுப்ரமணியன் கூறினார். நீங்கள் செய்தது என்ன, என்ன செய்ய திட்டமிட்டீர்கள் என்பது தொடர்பாக தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த சந்திப்புடன் நான் ராஜினாமா செய்யப்போவதில்லை. இது கடைசி சந்திப்பும் அல்ல, இன்னும் வேலைகள் மீதமிருக்கிறது என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

அர்விந்த் செய்தது என்ன?

தலைமை பொருளாதார ஆலோசகரின் முக்கியமான பணி என்பது முக்கியமான விஷயங்களில் ஆலோசனை வழங்குவதுதான். இந்த ஆலோசனைகள் ஏற்கப்பட வேண்டும் என்னும் அவசியமில்லை. ஆனால் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் அருண் ஜேட்லி பல முறை கூறியிருக்கிறார். ஆனால் அர்விந்த் சுப்ரமணியன் ஒவ்வொரு விஷயத்திலும் அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். தவிர பல புதுமையான விஷயங்களை செய்திருக்கிறார் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. காரணம் இவர் தயாரித்த ஆய்வறிக்கைகள் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம்பிடித்துள்ளன.

வழக்கமான பொருளாதார ஆய்வறிக்கைகள் தயாரிப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பொருள் (தீம்) அடிப்படையில் பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்தார். இந்த ஆய்வறிக்கை குறித்து ஒரு விவாதத்தை உருவாக்கினார். இது தொடர்பாக பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தினார் என பொருளாதார பேராசிரியர் ஒருவர் நம்மிடம் கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம் செய்வதில் அர்விந்த் சுப்ரமணியனின் பங்கு முக்கியமானது.

நாடு முழுவதும் ஒரே வரி விகிதம் இருக்க வேண்டும் என்பதை பல முறை வலியுறுத்தினார். அதனால்தான் நான்கு வரிவிகிதங்களில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு வர முடிந்தது. இல்லை எனில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்ப வரிவிகிதம் இருக்க வேண்டும் என கேட்கத் தொடங்கி இருக்கும் என நம்மிடம் பேசிய பேராசியர் கூறினார்.

ஆனால் ஆடிட்டர் எம்.ஆர். வெங்கடேஷ் கூறும்போது ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயம் செய்வதில் அர்விந்த் சுப்ரமணியனுக்கு உள்ள பங்கினை மறுக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் இவரால் மட்டுமே நடந்தது என கூறமுடியாது. முந்தைய பாஜக அரசில் இருந்தே தொடங்கிய ஜிஎஸ்டி விவாதம், அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசிலும் விவாதம் நடந்தது. அதன் பிறகுதான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

தவிர வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள், மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இந்தியாவுக்கு வருகிறார்கள். ரகுராம் ராஜன், அர்விந்த் பனகாரியா மற்றும் அர்விந்த் சுப்ரமணியன் ஆகிய அனைவருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. இந்த மண்ணின் வாசனை தெரியாமல் செயல்படுகிறார்கள். இவருக்கு முன்பு ரகுராம் ராஜன் இருந்தார். அவருக்கு முன்பு யார் இருந்தார் என்பதை கூகுளை பார்க்காமல் சொல்ல முடியமா? இவர் வெளியேறுவதால் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என எம்.ஆர்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு மும்பை பல்கலைக்கழக மாணவர்களிடம் அர்விந்த் சுப்ரமணியன் உரையாற்றினார். அப்போது மாட்டுக்கறி தடை குறித்து மாணவர்கள் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு பதில் அளித்தால் என்னுடைய வேலை பறிபோகும் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். இந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு சர்ச்சைக்குரிய விஷயங்களில் பதில் அளிப்பதை இவர் தவிர்த்தார்.

சில கேள்விகளுக்கு நான் வேலையில் இல்லாத போது பதில் அளிக்கிறேன் என்று கூட தெரிவித்திருக்கிறார். ஆனால் பண மதிப்பு நீக்கம் குறித்த கேள்விக்கு கருத்து கூற மறுத்துவிட்டார். பணமதிப்பு நீக்கம் குறித்து இவரிடம் விவாதிக்கப்படவில்லை என்பதே ப.சிதம்பரத்தின் கருத்தாக இருக்கிறது. தொடர்ந்து எழுதும் பழக்கம் கொண்ட அர்விந்த் சுப்ரமணியன், இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகாவது பணமதிப்பு நீக்கம் குறித்து எழுதுவார் என நம்புவோம்.

-karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்