கேள்விகளே என்னை வழிநடத்துகின்றன! | ஏஐ மூலம் விவசாயம் - farm again ஸ்டார்ட்அப் நிறுவனர் பெஞ்சமின் ராஜா பேட்டி

By முகம்மது ரியாஸ்

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 21 | இந்தியாவின் ஜிடிபியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீத்துக்கும் மேல். நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 45 சதவீதத்துக்கு மேல் வேளாண் துறை மூலமே உருவாகி வருகிறது. ஆனால், தொழில்நுட்ப பயன்பாடு ரீதியாக, இந்திய வேளாண் துறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பயிர்களின் விளைச்சல் அதன் முழு சாத்தியத்தை எட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்பெயின், இத்தாலியில் ஒரு ஏக்கர் நிலத்தில்100 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது என்றால், இந்தியாவில் அது 20 டன் முதல் 30 டன்னாகவே உள்ளது. இந்நிலையில், துல்லிய விவசாய தொழில்நுட்பம் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கி இருக்கிறது கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபார்ம் அகைன் (farm again). லூயி உட்டான், ஹனிவெல் என முன்னணி சர்வதேச நிறுவனங்களில் மென்பொருள் பிரிவில் பணியாற்றி வந்த பெஞ்சமின் ராஜா, இந்தியாவில் மகசூல் சார்ந்து நிலவிவரும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் 2013-ம் ஆண்டு ஃபார்ம் அகைன் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேளாண் துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் ஃபார்ம் அகைன், இந்தியா தவிர்த்து சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய வெளிநாட்டுச் சந்தையிலும் தற்போது கால் பதித்துள்ளது. சமீபத்தில் இந்தோனேசிய வேளாண் அமைச்சகத்துடன் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. அடிப்படையில் மென்பொறியாளரான பெஞ்சமின் ராஜா, விவசாயத் துறையில் ஸ்டார்ட்அப் தொடங்கி செயல்பட்டுவருவதற்கு பின்னால் இருக்கும் கதை என்ன? அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் எப்படிப்பட்டது? - என்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில். அரசு ஐடிஐ-யில் முதல்வராக இருந்த என்னுடைய அப்பா அப்போதைய சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த, யுஎஸ்எஸ்ஆர் இதழை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதில், தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

அதன் மூலம் சிறு வயதிலேயே நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆர்வம் எனக்கு உருவாகி விட்டது. நான் எட்டாவது படிக்கும்போது கடலூருக்கு இடம்மாறினோம். 1980-களின் இறுதிப் பகுதி அது. அங்கு நான் சேர்ந்த பள்ளியில் கணினி இருந்தது. கணினியில் கோளாறு ஏற்படும்போது அதைச் சரி செய்ய நிபுணர்கள் வருவார்கள். அவர்களுடன் அமர்ந்து அனைத்தையும் உற்றுக் கவனிப்பேன். கணினி குறித்து நல்ல புரிதல் எனக்குக்கிடைத்தது.

இதனால், பள்ளி படித்துக்கொண்டிருந்தபோதே, கணினி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, நான் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு வீட்டை வீட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இனி சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்று முடிவு செய்தேன். கணினி தொழில்நுட்பம் சார்ந்து அனுபவம் இருந்தால், என்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கடலூரிலேயே ஒரு மேன்சனில் அறை எடுத்து வேலைகள் தேட ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் கணினியின் விலை மிக அதிகம். அதுவே அசெம்பிள் செய்தால் சற்று குறைவு. நான் சென்னையிலிருந்து கணினி பாகங்களை வாங்கிச் சென்று நண்பர்களுக்கு அசெம்பிள் செய்து கொடுப்பேன். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. அந்தப் பணத்தில் கணினி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 16. ஒரு பக்கம் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் மற்றொரு பக்கம் கணினி பயிற்சி நிலையம் என்று எனக்கான ஒரு தொழிலை உருவாக்கினேன். மாலையில் கல்லூரி செல்வேன். பகலில் என் தொழிலை கவனிப்பேன்.

எப்படி லூயி உட்டான், ஹனிவெல் என சர்வதேச நிறுவனங்களை நோக்கி நகர்ந்தீர்கள்? - எனக்கு தொழில் சிந்தனையை விடவும், தொழில்நுட்ப சிந்தனையே அதிகம். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் கணினி துறையில் முதுகலை படிக்க முடிவு செய்தேன். முழுநேரமாக படிப்பில் கவனம் செலுத்துவதற்காக, என் தொழிலை அப்படியே விட்டுவிட்டு மேற்படிக்கு கடலூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுவிட்டேன். முதுகலை முடித்த பிறகு ஓராண்டு டெல்லியில் வேலை பார்த்தேன்.

அதன்பிறகு பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்களில் ஒன்றான லூயிஉட்டான் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்துக்கான ஐடி கட்டமைப்பை உருவாக்குவது எனக்கு பணி. அங்கு எனக்கு நல்ல கற்றல் அமைந்தது. இதன் நீட்சியாக, எனக்கு 2004-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் நிறுவனத்தில் இணைந்தேன்.

விவசாயம் சார்ந்து ஸ்டார்ட்அப் தொடங்கும் ஐடியா எப்போது உருவானது? - எனக்கு வன விலங்குகள் மற்று பூச்சி இனங்களை புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அலுவலக வேலைக்கு நடுவே, புகைப்படங்களுக்காக ஊர் ஊராக பயணிப்பேன். அப்போது விவசாய நிலங்களுக்கு செல்வதுண்டு. அங்கு செல்லும் சமயங்களில் எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது.
வெளிநாட்டு விவசாயத்திலும் நம் நாட்டிலும் அவ்வளவு வேறுபாடு இருப்பதைப் பார்த்தேன்.

தக்காளிச் செடி இங்கு முட்டி உயரம்தான் இருந்தது. வெளிநாடுகளில் அது ஆளுயரம் இருந்தது. ஒரே ஹைபிரிட் விதைகள்தான். ஆனால், வெளிநாட்டில் அந்தப் பயிர் அதிக மகசூல் கொடுக்கிறது. இந்தியாவில் மிகக் குறைந்த மகசூல் கிடைக்கிறது. என்ன பிரச்சினை என்று அலச ஆரம்பித்தேன். அப்போதுதான் துல்லிய விவசாயம் (precision agriculture) குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.

இன்று வேளாண் துறையில் ஸ்பெயின், நெதர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மேம்பட்ட இடத்தில் உள்ளன. காரணம், அவை துல்லிய விவசாய முறைகளை முறையாக கடைபிடிக்கின்றன. ஆனால், இந்தியாவில் அவ்வாறு இல்லை. தக்காளியின் ஜெனடிக் கேபாசிட்டி ஒரு ஏக்கருக்கு 120 டன்னுக்கு மேல். ஆனால், இந்தியாவில் இன்னமும் பல்வேறு பகுதியில் 5 டன் மட்டுமே அறுவடை செய்கிறார்கள். ஏனைய பயிர்களின் நிலவரமும் இதுதான்.

இதற்கு ஒரு தீர்வை உருவாக்க வேண்டும் என்று தோன்றியது. 2013-ம் ஆண்டு ஹனிவெல் நிறுவனத்தில் என்னுடைய வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தேன். நகர் மையத்தில் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்தேன். பெரிய அணியை உருவாக்கி, துல்லிய விவாசயம் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

துல்லிய விவசாயம் சார்ந்து நீங்கள் உருவாக்கி இருக்கும் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது? - நிலத்தின் தன்மை என்ன என்பதை அறிந்து, பயிர்களின் வேர் மண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தை சரியாக நிர்வகிப்பதோடு பயிர்களுக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துகளை சரியான முறையில் வழங்குவதுதான் துல்லிய விவசாயத்தின் அடிப்படை. இதில் ஒவ்வொரு முறையும் நாம் கணக்கு வைத்து செயல்படுவது கடினம். இந்நிலையில், ஏஐ உதவியுடன் கூடிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.

எப்போது வேர் மண்டலத்தில் ஈரப்பதம் குறைகிறது என்ற தகவல் சென்சார் மூலம் பெறப்பட்டு, அந்தத் தகவலின் அடிப்படையில், தானியங்கி பம்ப் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். எவ்வளவு உரம் போட வேண்டும், எப்போது போட வேண்டும் என அனைத்தும் இந்தத் தொழில்நுட்பம் மூலமே நிர்வகிக்கப்படும். துல்லிய விவசாயம் மூலம் தண்ணீர் பயன்பாடும், உரப் பயன்பாடும் குறையும். மீத்தேன் வாயு வெளியேற்றம் குறைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.

இந்தியாவில் விவசாயத் துறையில் போதிய தரவுகள் கிடையாது. இந்நிலையில், துல்லிய விவசாய தொழில்நுட்பம் மூலம் நிறைய தரவுகளைப் பெற முடியும். வரும் காலங்களில் விவசாயத்தையும் அது சார்ந்த ஏனைய செயல்பாடுகளையும் வளர்த்தெடுக்க இந்தத் தகவல் மிக அடிப்படையானதாக இருக்கும்.

பத்து ஆண்டுகளாக ஃபார்ம் அகைன் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டுவந்த நீங்கள், தற்போது புதிய சிஇஓ-வை நியமித்துள்ளீர்கள். என்ன காரணம்? - நான் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவன். புதிதாக ஒன்றை உருவாக்குவதில் தீவிர ஆர்வம் உண்டு. ஆனால், அதை பிசினஸாக முன்னெடுத்துச் செல்வதில் என்னால் முழு தீவிரத்துடன் செயல்பட முடிவதில்லை. இந்நிலையில், ஃபார்ம் அகைன் ஸ்டார்ட்அப்பை முன்னகர்த்திச் செல்வதில் என்னைவிட திறமையான நபரைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் ஆதித்யன் எனக்கு அறிமுகமானர்.

ஆதித் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, இந்தோனேசியாவில் சில ஸ்டார்ட்அப் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். நிறுவனத்தை சந்தைப்படுத்துவதில் அவருக்கு நிபுணத்துவம் இருந்தது. இந்நிலையில், ஃபார்ம் அகைன் நிறுவனத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதற்கான பொருத்தமான நபராக ஆதித்தைப் பார்த்தேன்.

இந்தப் பயணத்தில் நீங்கள் கற்ற பாடம் என்ன? - இந்தியாவில் விவசாயத்தில் இறங்கினால் நஷ்டம்தான் என்ற பார்வை பரவலாக உண்டு. ஆனால், சரியான அணுகுமுறையில் விவசாயம் மேற்கொண்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும். புதிய விஷயங்களை முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். கேள்விகளே என்னை வழிநடத்தி வந்துள்ளன. என் முன் எழும் ஒவ்வொரு கேள்வியும் வாழ்க்கையில் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்நகர்த்தி வந்துள்ளது. நல்ல கேள்விகளை எழுப்புவதும், அதற்கான பதிலைத் தேடுவதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

- riyas.ma@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: விண்வெளி துறையில் கவனம் ஈர்க்கும் தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் | OrbitAID Aerospace நிறுவனர் & சிஇஓ சக்திகுமார் பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்