விண்வெளி துறையில் கவனம் ஈர்க்கும் தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் | OrbitAID Aerospace நிறுவனர் & சிஇஓ சக்திகுமார் பேட்டி

By முகம்மது ரியாஸ்

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 20 | உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு செலுத்தப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி விண்வெளியில் 7,500-க்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரையில், எரிபொருள் தீர்ந்துவிட்டால், அவை அப்படியே கைவிடப்பட்டுவிடும்.

இதுவரையில், 2,000 செயற்கைக்கோள்கள் எரிபொருள் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மதிப்பு 100 பில்லியன் டாலராக (ரூ.8.5 லட்சம் கோடி) கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், செயற்கைக்கோள்களுக்கான எரிபொருளை நிரப்பும் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்பிட் எய்டு ஏரோஸ்பேஸ் (OrbitAID Aerospace). ஆர்பிட் எய்டு நிறுவனத்தின் முன்னெடுப்பு விண்வெளித் துறையில் கவனம் பெற்றுள்ளது.

சக்திகுமார் (35), ஆர்பிட் எய்டு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிக பின்தங்கிய பின்புலத்திலிருந்து வந்தவரான சக்திகுமார், விண்வெளித் துறை மீதான ஈடுபாட்டால் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) ஆய்வு மாணவராக இணைந்தார்.

10 ஆண்டுகள் அத்துறையில் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் நீட்சியாக, 2021-ம் ஆண்டு தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். 2025-ம் ஆண்டில் ஆர்பிட் எய்டு ஏரோஸ்பேஸ் தனது கண்டுபிடிப்பை விண்வெளியில் சோதிக்க உள்ளது. அந்தச் சோதனை வெற்றி பெறும்பட்சத்தில் உலக விண்வெளித் துறையில் அது முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறப்படுகிறது. சக்திகுமாரின் ஸ்டார்ட்அப் பயணத்துக்கு பின்னிருக்கும் கதை என்ன? அவருடன் உரையாடினேன்.

விண்வெளி குறித்த ஆர்வம் முதன்முறையாக எப்போது ஏற்பட்டது? - என்னுடைய சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமம். நான் படித்த உள்ளூர் அரசுப் பள்ளியில் ஒரு சிறிய நூலகம் உண்டு. நான் 6-ம் வகுப்பு முதல் நூலகம் செல்வதை வழக்க மாக்கிக் கொண்டேன். அப்போது பத்திரிகைகளில் வரும் அறிவியல் துணுக்குகள் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன. பள்ளிப் பாடங்களில் இல்லாத விஷயங்கள் பத்திரிகைகள் வழியாக எனக்கு அறிமுகம் ஆகின.

அதன் தொடர்ச்சியாக, அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகங்களைப் புரிந்து படிக்கும் அளவுக்கு அப்போது முதிர்ச்சி கிடையாது. ஆனால், அறிவியல் விஷயங்களைப் படித்தபோது அவை எனக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை அளித்தன. அப்படியாக, ராக்கெட், விண்வெளி ஆராய்ச்சி குறித்த கனவுகள் என்னுள் முளைவிட ஆரம்பித்தன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரையின் பேச்சுகள் எனக்கு பெரும் உத்வேகம் அளித்தன.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு என்ன செய்தீர்கள்? - எங்கள் ஊரில் அம்பேத்கர் படங்கள் நிறைந்திருக்கும். அந்தப் படங்களில் அவர் என்னென்ன பட்டங்கள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அம்பேத்கர் புகைப்படத்தைப் பார்த்து வளர்ந்ததால் அவரைப் போல படித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே என்னுள் ஆழமாகப் பதிந்தது. எனக்கு விண்வெளி மீது ஈடுபாடு இருந்ததைப் புரிந்து கொண்ட என் அண்ணனும் பெற்றோரும் என்னை பொறியியல் படிக்க ஊக்குவித்தார்.

ஏரோனாட்டிக்கல் பிரிவைத் தேர்வு செய்தேன். சிறிய கிராமத்தில், அரசுப் பள்ளியில் கல்வி பெற்ற எனக்கு, கல்லூரி புதிய திறப்பாக இருந்தது. என் துறை சார்ந்து ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போது, இஸ்ரோவில் இணைய வேண்டும் என்ற கனவு உருவானது. இதனால், மேற்படிப்புக்குச் செல்ல முடிவு செய்தேன். ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இடம் கிடைத்தது. விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து என்னுடைய ஆர்வத்துக்கு அக்கல்லூரி களம் அமைத்துத் தந்தது.

ஸ்டார்ட்அப் தொடங்கலாம் என்ற எண்ணம் எப்போது வந்தது? - முதுகலை முடித்துவிட்டு, 2011-ல் பெங்களூரு இந்திய அறிவியல்கழகத்தில் ஆய்வு மாணவனாக சேர்ந்தேன். அங்கு ராக்கெட்டுக்கான எரிபொருள் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆரம்பித்தேன். செயற்கைக்கோளுக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டால் அதை தூக்கிப் போட்டுவிடுவார்கள். அதற்குப் பதிலாக, மீண்டும் எரிபொருள் நிரப்பினால் என்ன என்ற ஐடியா உதயமானது.

உலக அளவில் செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்புவது குறித்து பெரிதளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அது சாத்தியமா என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது. நானும் அந்தக் கேள்வியின் வழியாகவே என்னுடைய ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆழமாகச் செல்லச் செல்ல, செயற்கைக்கோளுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்புவது சாத்தியம் என்பதைக்கண்டுபிடித்தேன்.

அதன் பிறகு, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். இதனிடையே, 2019-ம் ஆண்டில் என்னுடைய பேராசிரியர் ஒருவர் ராக்கெட் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கான ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவின் தலைவராக என்னை நியமித்தார்.

கரோனா வந்ததால், அந்த நிறுவனத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பேராசிரியரின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பங்கேற்றதால், ஸ்டார்ட்அப் அணுகுமுறையின் சாத்தியம் குறித்த புரிதல் எனக்கு ஏற்பட்டது. சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்கினால், என்னுடைய ஆராய்ச்சியை இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு செல்ல முடியும் என்று தோன்றியது. இதனால், நண்பர்களின் உதவியுடன் ஸ்டார்ட்அப் ஆரம்பித்தேன்.

என்ன விதமான சவால்கள் உங்கள் முன் இருந்தன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்? - முதல் சவால். பணம். இந்தியாவில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் சன்மானம் வழங்கப்படுவதில்லை. நான் 2011-ல் ஆராய்ச்சி மாணவனாக இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தபோது எனக்கான மாத சன்மானம் ரூ.18 ஆயிரம். 2019-ல் அது ரூ.40 ஆயிரமாக உயர்ந்தது. இதனால், என்னிடம் போதிய பணம் இல்லை. நண்பர்களிடம் கடன் பெற்றே ஸ்டார்ட்அப் தொடங்கினேன். என் மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார்.

இரண்டாவதாக, என்னுடைய ஆராய்ச்சியை எப்படி பிசினஸாக மாற்றுவது என்பது எனக்கு ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள விஞ்ஞானிகளிடம் உரையாடினேன். பல்வேறு ஸ்டார்ட்அப் கூட்டங்களில் கலந்துகொண்டேன். படிப்படியாக ஸ்டார்ட்அப் செயல்பாடு எனக்கு புலப்பட ஆரம்பித்தது.

என்னுடைய பேராசிரியர் சிவக்குமார் எனக்கு உறுதுணையாக இருந்தார். அதேபோல், எங்கள் நிறுவனம் டீப்டெக் ஸ்டார்ட்அப் என்பதால் நிதி திரட்டுவது சவாலாக இருந்தது. செயற்கைக் கோளுக்கான எரிபொருளை நிரப்புவது, விண்வெளியில் எரிபொருள் நிலையம் அமைப்பது குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதனால், முதலீடு செய்ய தயக்கம் காட்டினர்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ‘ஸ்டார்ட்அப் தமிழ் நாடு' அமைப்பை அணுகினேன். எங்கள் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, எஸ்.சி. / எஸ்.டி. பிரிவின்கீழ் ரூ.4.5 கோடிக்கு பங்கு முதலீடு செய்தது. இந்தியாவிலேயே மாநில அரசு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பங்கு முதலீடு மேற்கொண்டது எங்கள் ஸ்டார்ட்அப்பில்தான். அதன் பிறகு வெளி முதலீடுகள் வரத் தொடங்கின. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும், குறுகிய காலத்திலேயே எங்கள் தயாரிப்பை உருவாக்கிவிட்டோம்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எங்கள் தயாரிப்பை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளோம். அது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், செயற்கைக்கோள் எரிபொருள் சார்ந்து உலக அளவில் பெரிய சந்தை வாய்ப்பு உருவாகும். இத்துறையில் உலகின் முன்னோடி நிறுவனமாக ஆர்பிட் எய்டு ஏரோஸ்பேஸ் அடையாளம் பெறும்.

இந்தப் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? - பொறுமை. விண்வெளித் துறையைப் பொறுத்தவரையில் நினைப்பவை எதுவும் உடனே நடந்துவிடாது. பொறுமையுடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டும். அதன் நீட்சியாக வாழ்க்கையையும் பொறுமையுடன் அணுகக் கற்றுக்கொண்டேன். அதேபோல், விண்வெளியிலிருந்து பார்க்கையில் பூமியில் உள்ள அனைத்தும் மிகச் சிறியதாக தோன்றும்.

இது என் முன் இருக்கும் பிரச்சினைகளை விலகி நின்று பார்க்கும் பக்குவத்தைக் கற்றுத் தந்தது. நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டு நாம் துவண்டுவிடக் கூடாது. நாம் விலகி நின்று பார்க்கையில், அவை சிறியதாக தெரிய ஆரம்பித்துவிடும். நமக்கு இதெல்லாம் வராது என்று நாம் எதையும் நினைத்துவிடக் கூடாது. எல்லாராலும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும். உழைப்பும், ஈடுபாடும்தான் முக்கியம்.

- riyas.ma@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: சமூகப் பிரச்சினைகளை தீர்க்க ஸ்டார்ட்அப் அணுகுமுறை கைகொடுக்கும்! - ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ சிஇஓ சிவராஜா ராமநாதன் பேட்டி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE