2019 -ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பிரசார வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. குறிப்பாக அரசாங்கம். அந்த கட்சியின் கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளை முன்வைத்து தொலைக்காட்சி, பத்திரிகைகளின் முன்பக்கங்களை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்த விளம்பரங்களில் பணமதிப்பு நீக்க பாதிப்பு, ஜிஎஸ்டி அமலாக்கத்தின் விளைவுகள் மறந்தும் இடம்பெறவில்லை. குறிப்பாக ஆட்சியின் 48 மாத பெருமையை பேச ‘தூய்மையான நோக்கம், சரியான பாதை’- என்கிற இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரசாரம் வரும் தேர்தலில் பிஜேபிக்கு பயன் தரலாம். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் சரியான பாதையில்தான் செல்கிறதா என்பதை அலச வேண்டியுள்ளது. ஏனென்றால் வெற்றிகரமான திட்டம் என பட்டியலிட்டுள்ள ஜன் தன் யோஜனாவின் உண்மை நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு.
இந்தியாவில் பெருவாரியான மக்கள் முறைப்படுத்தப்பட்ட நிதிச் சேவை அமைப்புகளுக்குள் இணைக்கப்படவில்லை என இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு என்கிற இலக்கு முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கி கணக்கிற்கு செயல்பாட்டுக் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை அவசியமில்லை. குறைந்தபட்ச வருமான வரம்பிற்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் வங்கி சேவை அளிக்கப்படும். பிரதமர் மோடியே நேரடியாக இதில் கவனம் செலுத்தினார். அதனால் திட்டம் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே இலக்குகள் எட்டப்பட்டன.
``இந்தியாவில் பெருவாரியான ஏழை மக்களின் நிதி நடவடிக்கைகள் வங்கி அமைப்புக்கு வெளியே இருக்கிறது. இதற்குக் காரணம் வங்கி கணக்குகளை தொடங்குவதில் உள்ள சிக்கல்கள், பல்வேறு விதமான நடைமுறைகள், பாரபட்சங்களும் ஏழை மக்களை வங்கி அமைப்புக்குள் வரவிடாமல் தடுக்கின்றன. இந்த சிக்கல்கள் களையப்பட்டதன் மூலம் ஏழை மக்கள் வங்கி சேவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் ’’என்று 2016 சுதந்திர தின உரையில் கூறினார் மோடி.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு வங்கிக் கடன் உதவி கிடைப்பதற்கும், அரசின் மானிய உதவிகள் நேரடியாக இந்த வங்கி கணக்குகளில் செலுத்தவும், இந்த கணக்கு உள்ளவர்களுக்கு குறைந்த தொகையில் காப்பீடும் அளிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 31.67 கோடி பயனாளிகள் ஜன் தன் கணக்கில் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்தது. சுமார் 40 சதவீத ஏழை மக்கள் வங்கிக் கணக்கு பெற்றனர் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.
ஆனால் இந்த திட்டம் வெற்றியடைந்ததா என்கிற கேள்வியை எழுப்புகிறது உலக வங்கி. சர்வதேச அளவில் வங்கிக் கணக்குகள் தொடர்பான அந்த ஆய்வில், உலக அளவில் செயல்படாத வங்கிக் கணக்குகளை கொண்ட நாடுகளில் இந்தியா இராண்டாவது இடத்தில் உள்ளது. தவிர இப்போதுவரை இந்தியாவில் 19 கோடி நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்கிறது.
இந்த நிலையில் வங்கி கணக்கு இல்லாமல் மீதம் உள்ள மக்களையும் ஜன் தன் கணக்கிற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் நோக்கம் பெருமைக்கு உதவலாம். ஆனால் இந்த பாதையும் பார்வையும் சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்புகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
போலி ஜன் தன் கணக்குகள்
மத்திய அரசு ஜன் தன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்த போது ஒவ்வொரு வங்கி களுக்கும் குறிப்பிட்ட அளவிலான கணக்கினை தொடங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் கடும் சிரத்தை மேற்கொண்டனர். பல போலி கணக்குகளையும் தொடங்கினர். பழைய வாடிக்கையாளர்களின் கணக்குகளை ஜன் தன் திட்டத்திற்கு மாற்றினர். இந்த வகையில் சுமார் 10 சதவீத போலி கணக்குகள் தொடங்கப்பட்டன என அப்போதே தகவல்கள் வெளியானது.
செயல்பாட்டில் உள்ள 31.67 கோடி ஜன் தன் கணக்குகளில் பிப்ரவரி மாதம் வரையில் 25.17 கோடி கணக்குகள் மட்டுமே செயல்படும் கணக்குகளாக உள்ளன. சுமார் 6.5 கோடி கணக்குகள் செயல்படாமல் உள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகளில் சென்ற ஆண்டு எந்த பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்கிறது உலக வங்கியின் புள்ளிவிவரம்.
அதாவது இந்த கணக்குகளில் பணம் டெபாசிட்டோ செய்வதோ, பணம் எடுத்தலோ நடைபெறவில்லை. இதன் காரணமாக செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது. சர்வதேச அளவில் செயல்படாத வங்கிக் கணக்குகளின் சராசரி 20 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவில் செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது. வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பயன்படுத்தும் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது.
இந்த இடத்தில்தான் ஜன் தன் யோஜனா செல்லும் பாதை சரியானதா என்கிற கேள்வி எழுகிறது. ஏனென்றால் இந்தியாவில் ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு அவசியமாக இருக்கவில்லை என்பதுதான் இந்த திட்டத்தின் மூலம் இறுதியாக தெரிய வந்துள்ளது. வங்கி சேவை மற்றும் கடன் முறைக்குள் ஏழைகளை இணைப்பதற்கான திட்டம் என்றுதான் அரசு அறிவித்தது. ஆனால் இலவசமாக எளிய நடைமுறையில் உருவாக்கிக் கொடுத்த வங்கிக் கணக்கைக் கூட பயன்படுத்த ஏழை மக்களுக்கு என்ன தயக்கம் என்கிற கேள்விதான் இந்த பாதை சரியானதுதானா என்கிற சந்தேகத்தினை உறுதிபடுத்துகிறது.
பயனில்லாதா சேவை
இந்தியாவில் ஏழைகளை விட பொருளாதார ரீதியாக வசதியானவர்கள்தான் வங்கிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த விகிதாச்சாரம் சுருங்கிவருவதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கம் கிராம புறங்களிலும் எதிரொலிக்கிறது. நகரங்களுக்கு வேலை தேடி செல்பவர்களால் கிராமபுறங்களில் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டிலேயே கிராமப்புற வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வங்கிக் கணக்குகளும் தொழிலாளர்களின் தேவைகளில் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அவர்களுக்கு வேலையளிக்கும் சக்திகளுக்கு வங்கி கணக்கு தேவையாக இருந்தாலும் தொழிலாளிகளுக்கு அவசியமிருக்கவில்லை.
பெண்களுக்கான செயல்படாத கணக்குகளை பொறுத்தவரை வளந்த நாடுகளில்கூட ஆண்களை விட 5 சதவீதம் அதிகமாகவே பெண்களின் செயல்படாத கணக்குகள் உள்ளன. இந்தியாவில் ஆண்களின் செயல்படாத கணக்குகள் 43 சதவீதம் என்றால் பெண்களின் கணக்குகள் 54 சதவீதமாக உள்ளது. ஆண்களின் பொருளாதார ஏழ்மை நிலையை விட பெண்களின் ஏழ்மை நிலை இந்தியாவில் அதிகம் என்பதை விளக்கத் தேவையில்லை.
இந்த இடத்திலிருந்துதான் வங்கி கணக்குகளின் தேவையை அணுக வேண்டியுள்ளது. மக்கள் வங்கி முறைக்குள் வராமல் இருந்ததற்கு காரணம் வங்கிக் கணக்கு தொடங்குவதை எளிமைப்படுத்தவில்லை என்பதால் அல்ல, அதற்கான பொருளாதாரம் அவர்களிடம் இல்லை என்பதுதான். இந்த எதார்த்த நிலைமையைதான் செயல்படாத ஜன் தன் கணக்குகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே ஏற்றத் தாழ்வுகளை களைவதற்கான கட்டமைப்புகளை உருவாக்காமல், சரியான பாதை என சுய தம்பட்டம் செய்கிறது மத்திய அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம்.
-maheswaran.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago