சில பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மாற்றப்படுவார்கள் எனும் சமீபத்திய செய்தியைப் பார்த்து இருப்பீர்கள். இத்தருணத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமை அதிகாரியான ஆதித்யா பூரி குறித்தும் இரண்டு செய்திகள் வந்துள்ளனவே தெரியுமா?
தப்பான செய்தி ஒன்றுமில்லைங்க. பேரோன் (Barron) எனும் அமெரிக்காவின் முன்னணி நிதிப் பத்திரிகை, 2018-ம் ஆண்டுக்கான உலக அளவில் சிறந்த 30 தலைமை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வாரன் பஃபெட் போன்றோருடன் இவர் இடம் பெற்றுள்ளார். அதுவும் தொடர்ந்து நான்காம் முறையாக!
இரண்டாவது செய்தி அவர் அக்டோபர் 2020-ல் பணி ஓய்வில் செல்ல இருக்கிறாராம். சரி, இப்ப அதற்கென்ன அவசரம், அதுதான் இன்னும் 30 மாதங்கள் அவகாசம் இருக்கிறதே என்கிறீர்களா?
அங்கே கதையே வேறு. வங்கியைத் தலைமை ஏற்று நடத்துபவரை 18 மாதங்களுக்கு முன்பே `தேட’ ஆரம்பித்து விடுவார்களாம். அதற்கென்று குழு அமைத்துச் சல்லடை போடுவார்களாம். வங்கியின் அடுத்த தலைவராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும், தற்பொழுதுள்ள தலைவரே 12 மாதங்களுக்கு அப்பணியில் தொடர்வாராம். அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தற்போதுள்ள தலைவருடன் இணைந்து பணியாற்றுவாராம். இந்த நல்லதொரு ஏற்பாட்டினால் வங்கியைப் பின்னர் வழிநடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை புதியவர் நேரடியாக அறிய முடியுமல்லவா?
ஒரு வங்கியின் தலைமை அதிகாரியைத் தேர்வு செய்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும், இவ்வளவு விஸ்தீரணமான தேர்வு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் வியப்பு அளிக்கிறதா?
பின்னே என்னங்க? ரூ.2 முக மதிப்புள்ள அதன் பங்கின் சந்தை விலை சுமார் ரூ.2100க்கு வர்த்தகமாகிறதே. இந்த வங்கியின் பங்குகளின் முழுவதையும் வாங்க வேண்டுமென்றால் ( market capitalisation) சுமார் ரூ.5,47,000 கோடி வேண்டும்!
சரி, அதை விடுங்கள்.இந்தக் கதையைக் கேளுங்கள். 22 பொதுத்துறை வங்கிகளின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பே 5,00,000 கோடிக்கும் குறைவுதானாம். அதாவது இந்த ஒரு வங்கியின் விலை மதிப்பு, எல்லாப் பொதுத் துறை வங்கிகளின் மொத்த மதிப்பை விடக்கூட அதிகமாம்!
மார்ச் 31 வரை இந்த வங்கியின் டெபாசிட் சுமார் ரூ.7,88,000 கோடி. அதன் பணியாளர்கள் சுமார் 84,000. அவர்கள் அனைவரும் திறமையாகச் செயல்பட்டிருந்தால் தானே நிகர லாபம் ரூ. 17,847 கோடியாகவும், மொத்த டெபாஸிட்டில் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளின் (CACA) பங்கு 43% ஆகவும், மொத்த வாராக்கடன், நிகர வாராக்கடன் விகிதங்கள் நம்பமுடியாத 1.30%, 0.40% என்றும் சாதித்திருக்க முடிந்திருக்கும்?
இப்படி இந்த வங்கி ஊழியர்களைத் திறமையாக வழிநடத்தி வருபவர்தான் இந்த ஆதித்யா பூரி.இவர் இந்த வங்கியின் தலைமை ஏற்றது செப்டம்பர் 1994 ல், ஆமாம், இவர் 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதன் தலைவராக இருந்து வருகிறார். வங்கியை இந்த மகோன்னத நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
`ஹெச்டிஎப்சி வங்கி என்றால் ஆதித்யா பூரி, ஆதித்யா பூரி என்றால் ஹெச்டிஎப்சி வங்கி’ எனும் அளவுக்கு அதனுடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.
`மன்னன் சுறுசுறுப்பாக இருந்தால் , அந்நாட்டின் மக்களும் அதேபோல் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.மன்னன் உத்வேகமின்றி இருந்தால், அந்நாட்டு மக்களும் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். இதனால் அரசாங்க வருவாயும் பாதிக்கப்படும்’ என்கிறார் சாணக்கியர்.
உண்மை தானே? தலைமை தானே நிறுவனம் செல்லும் திசையையும், வேகத்தையும் முடிவு செய்யும்? இந்தியாவில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில், டாடா குழுமத்தில் தலைமைகள் மாறியதும், தலையெழுத்துகளும் மாறிவிட்டதையும் பார்த்திருக்கிறோமே! உலக அளவில் , மைக்கேல் டெல் போனதும், டெல் நிறுவனம் சரியத் தொடங்கியது. அவரே திரும்பி வந்து சரி செய்தார் இல்லையா?
ஐயா, நிறுவனம் பெரிதோ,சிறிதோ, பணியாளர்கள் எவ்வளவு வேலை செய்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நேரடியாகச் சட்ட திட்டங்கள் போட்டும், உற்சாகமூட்டியும் முடிவு செய்வது அதன் தலைவர் தானே?
`ஓர் ஆடு தலைமை தாங்கி நடத்தும் பொழுது, அது சிங்கங்களின் படையாக இருந்தாலும் நான் அஞ்ச மாட்டேன். ஆனால், ஒரு சிங்கத்தின் தலைமையில் வருவது வெறும் ஆடுகளின் கூட்டமாக இருந்தாலும் அஞ்சவே செய்வேன் ' என்கிறார் மாவீரர் அலெக்சாண்டர்.
ஐயா, தலைமை, தலை போன்றதல்லவா? தலைவர்தான் சிந்திக்க வேண்டும், திசை காட்டவும், திசை திருப்பவும் வேண்டும்; செயல்படுத்தவும் வேண்டும். எனவே, பணியாளர்களின் பணி சிறக்க, நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க, சாணக்கியர் சொல்வது போல, சரியான தலைவரிடம் மட்டுமே பொறுப்பைக் கொடுப்பது நல்லது.
-somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
39 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago