சபாஷ் சாணக்கியா: உடம்பெல்லாம் விஷம்...!

By சோம.வீரப்பன்

1979-ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் படம் பார்த்திருப்பீர்கள். ஆமாம், விஜய்யின் தெறி படத்தில் வெள்ளை வேட்டி சட்டையில், வில்லனாய் வருவாரே, அந்த மகேந்திரன்தான்.

உதிரிப்பூக்கள் படம் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை கவிதையாய்ச் சொல்லும். பொல்லாத பணக்கார விஜயனுக்கு, அடக்கமான, மென்மையான அஸ்வினி மனைவி. உடல் நலம் குறைந்த மனைவியையும், வயோதிகரான மாமனார் சாருஹாசனையும் வார்த்தைகளால் குத்திக் குத்திக் காண்பித்துப் பாடாய்ப் படுத்துவார் விஜயன். சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் ஒரு கல் வந்ததும் அவர் மனைவியைக் கடிந்து கொள்வதைப் பார்த்தால், அந்தக் கல்லும் கரைந்து விடும்.

விஜயனுக்கு யாரும் நல்ல சட்டை போட்டுக் கொண்டால் கூடப் பிடிக்காது. உர்உர்ரென்று பொருமுவார். தம் பள்ளியின் இளம் ஆசிரியர் ஒருவரை, கலர் சட்டை போடக்கூடாதென்று சொல்லி, வெளுத்த நிறத்தில் ஜிப்பா போட வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

மலர்களைப் போல் இரு குழந்தைகள் இருந்தும் பாசம் காட்ட மாட்டார். ஆனால் தன்னை விட வயதில் மிகவும் குறைந்த மச்சினியைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வற்புறுத்துவார்.

இறுதியாக தன் மனைவியைத் தவறாகப் பேசுவார். வேறு ஒருவருக்கு மச்சினியை கல்யாணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டதும், அப்பெண்ணிடம் துச்சாதனனைப் போல் நடந்து கொள்வார். வக்கிர மனதின் உச்சம் அது.

அதுவரை பொறுத்திருந்த ஊர் வெகுண்டெழும். அவரைத் துரத்தி துரத்தி ஆற்றில் இறங்க வைத்து, மூழ்கித் தற்கொலை செய்து கொள்ள வைக்கும். பார்ப்பதற்கு சாதாரணமாய்த் தெரியும் ஒரு மனிதன் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியும் என்பதை எடுத்துச் சொல்லும் அப்படம், அத்தகையவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை என்பதையும் சொல்லாமல் சொல்லும்.

தற்பொழுது பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களில் வில்லத்தனம் செய்வது பெண்கள்தான். அந்த வில்லிகளையும், அவர்கள் செய்யும் விடாத தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து நொந்து விட்டீர்களா?

அந்த மெகா தொடர்களைப் பார்க்காமல் இருந்தால், அதிலிருந்து தப்பி விடலாம். ஆனால், அன்றாடம் நம் வாழ்க்கையில் குறுக்கிடும் வஞ்சகர்களிடமிருந்து நாம் அப்படித் தப்பிவிட முடியுமா ?

நான் வடநாட்டில் பணிபுரிந்த பொழுது ஒரு சக அதிகாரி. மகா வஞ்சகன். ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாதவை என அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் எனும் நான்கைச் சொல்வாரே நம்ம வள்ளுவர், அவை அனைத்தும் கொஞ்சமும் குறையாமல் சேர்ந்து செய்த கலவை அவர், கயவர்.

மொத்தத்தில் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில்' நான் நானில்லை' ( I am not what I am) எனச் சொல்லும் வில்லன் இயாகோ போன்றவர் அவர்.

எதிலும், எப்பவும் ஒரு சிடுசிடுப்பு, கடுகடுப்பு. யாரைக் கண்டாலும் ஓர் எதிர்ப்பு, வெறுப்பு.முகமும் அப்படி, மனமும் அப்படி. இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவரது பொறாமை, ஆற்றாமை தானோ?

ஒருமுறை கிளையில் பணியாளர் ஒருவர், தன் மகன் பள்ளியில் முதலாவதாக வந்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் இவருக்கோ தனது மகன் தேறாமல் போனது போன்ற வருத்தம். சிரிக்கவில்லை. ஒப்புக்குக் கூட வாழ்த்துச் சொல்லவில்லை. படித்து என்ன பலன் என்கிற ரீதியில் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் யாரும் விடுமுறை கேட்டால் உடனே கொடுத்து விட மாட்டார். ஊருக்குக் கிளம்பும் நாள் வரை காக்க வைப்பார். வெளிநாடு போனால் கூட, அலுவலகத்தில் தேவைப்பட்டால், விடுமுறையைப் பாதியில் ரத்து செய்து கூப்பிடலாம் எனச் சொல்வார். செய்தும் இருக்கிறார்.

இவரிடம் விநோதமான பழக்கம் ஒன்று இருந்தது. உணவு இடைவேளையில் மற்றவரது கைப்பை, சாவிக்கொத்து போன்றவற்றை எடுத்து ஒளித்து வைத்து விடுவார். அவர்களை நெடு நேரம் தேட வைப்பார். இதன் மூலம் மற்றவர்களுக்கு மன அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்ப்பார்.

`பாம்பிற்கு விஷமிருப்பது நாக்கில்.தேளுக்குக் கொடுக்கில். பூச்சிகளுக்கு வாயில். ஆனால் வஞ்சகர்களுக்கோ உடம்பெல்லாம் விஷம் தான்’ என்கிறார் சாணக்கியர்.

ஐயா, கயவர்களுக்கு, இரக்கம் கிடையாது, பாவ புண்ணியம் கிடையாது. மனிதத் தன்மை கிடையாது.நேர்மை கிடையாது, வாய்மை கிடையாது. அவர்களுக்குத் தெரிந்தது, அவர்கள் நாடுவது எல்லாம் அவர்களது உடல் சுகமும், உள்ளத்துக் களிப்பும் தான்.

எழுத்தாளர் ரோபின் சேக்ரட்ஃபைர் சொல்வது போல, கொடுமைக்காரர்களால், மற்றவர்களின் சோகத்தை, ஆற்றாமையை,கோபத்தைக் கூட ரசித்து மகிழ முடியும்!

தம்பி, சயனைட் தெரியுமல்லவா? கொடிய நஞ்சு அது.மிகவும் ஆபத்தானது. எனவே சயனைட் அருகில் போகவே கூடாதில்லையா? மனித உருவில் நடமாடும் கயவர்களும் அப்படித்தான். சாணக்கியர் சொல்வது போல அவர்களையும் அருகில் வர விடவே கூடாது.

-somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்