சமீபத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சந்தித்துப் பேசிய செய்தியைப் படித்து இருப்பீர்கள். சிங்கப்பூரில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சி மாநாடு உலகின் தலைவிதியையே மாற்றக் கூடும் என்கிறார்கள்.
அதிபர் கிம் ஜாங், ‘நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. இனி உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் காணும். மேலும், இனி வடகொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார். இது உண்மையில் நடந்து விடுமா, அல்லது வெறும் கண் துடைப்பா என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும், பேரழிவுப் பாதையிலிருந்து விலகி , ஏதோ நல்லதொரு மாற்றம் நிகழும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. சரி இதற்கெல்லாம் காரணம் விதியா அல்லது மனித முயற்சியா?
ஐயா, நாம் ஆத்திக, நாத்திக வாதங்களை விட்டு விடுவோம். எல்லாம் தலைவிதிப்படியே நடக்கும், நடக்கட்டும் என அந்த இரு நாடுகளும் சும்மா இருந்திருந்தால் இந்த அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகி இருக்குமா?
`வெற்றியாளர்களுக்கும் தோல்வியுறுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தமது முயற்சிகளில் ஒவ்வொரு முறை விதி குறுக்கிடும் பொழுதும், அதை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதே’ என்று அதிபர் ட்ரம்ப் ஒரு முறை சொல்லியது சரி தானே?
எனது நண்பர் ஒரு கதை சொல்வார். ஒருவன் கடவுளிடம் தனக்கு லாட்டரியில், ஒரு வாரத்திற்குள் ஒரு கோடி பரிசு விழ வேண்டும் என வேண்டிக் கொண்டானாம். அவரும் அவன் முன் தோன்றி, சரி அதற்கு ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லி மறைந்து விட்டாராம். ஒரு வாரம் கழிந்ததும், பக்தன் மீண்டும் கடவுளை வேண்டினானாம். கடவுள் தன்முன் தோன்றியதும், என்ன இன்னும் பரிசு வரவில்லையே எனக் கோபித்துக் கொண்டானாம். அவரோ, `பக்தா, நீ இன்னும் லாட்டரி சீட்டே வாங்கவில்லையே. சீட்டு வாங்கியிருந்தால்தானே, நான் பரிசு விழ ஏற்பாடு செய்திருக்க முடியும்’ எனக் கடிந்து கொண்டாராம்.
பின்னே என்னங்க? உட்கார்ந்த இடத்தில் ஒரு முயற்சியும் செய்யாதிருப்பவனுக்குக் கடவுள் கூட உதவ மாட்டாரில்லையா?அந்த நண்பர் மேலும் சொல்வது இன்னும் நல்ல தத்துவம். அதாவது கடவுள் `தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றும் `கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்றும் தானே சொல்கிறார். எனவே தட்ட வேண்டியதும், கேட்க வேண்டியதும் நம் கடமை அல்லவா என்பார்.
`ஊழிற் பெருவலி யாவுள ?’ என்கிறார் வள்ளுவர். விதி வலியதாக இருக்கலாம், இருக்கட்டும். இவ்வுலகில், நம் வாழ்வில், பல நிகழ்வுகள் நம் சக்திக்கு, நம் கட்டுப்பாட்டிற்கு மீறியவையாகவே இருக்கின்றன. நமது பிறப்பு, இறப்பு, குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பது, இத்யாதி. எனவே இவை நாம் விரும்பியபடி அமையாவிட்டால் விதியின் மீது பழியைப் போடலாம். `நதியின் பிழையன்று, நறும்புனல் இன்மை...அது விதியின் பிழை’ என்று இராமன் வாய்வழியாக கம்பரே சொல்வாரே அது போல.
ஆனால் பதவி உயர்வையோ, இடமாற்றத்தையோ, நல்ல மாப்பிள்ளை கிடைப்பதையோ, பணம் சேர்ப்பதையோ, குழந்தைகளை நன்கு படிக்க வைப்பதையோ, நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பதையோ, நாம் விதிப்படி நடக்கட்டும் என்று விடலாமா? விடுவோமா? அங்கே குறள் சொல்வது போல `ஊழையும் உப்பக்கம் காண்போம்’ அல்லவா ?
`உலக வாழ்க்கை எனும் சீட்டு விளையாட்டில், உங்களுக்கு நல்ல சீட்டுகள் கிடைக்காதது தலைவிதி என்றால், அதற்காக விளையாடாமலேயே இருப்பீர்களா? கிடைத்த சீட்டுகளை வைத்துச் சிறப்பாக விளையாட வேண்டுமில்லையா? ' என்கிறார் அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் லெஸ் பிரவுன்!
உண்மை தானே? எதிலும் எங்கும் வெற்றி பெறத் தேவை முயற்சியும், பயிற்சியும் அல்லவா? சும்மா விதியை நம்பி உட்கார்ந்து கொண்டா இருப்பது? தடங்கல்கள் வந்தால் அவற்றை மீறிச் செயல்பட வேண்டுமில்லையா? `விதி உனக்கு வெறும் எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்தாலென்ன, அதைக் கொண்டு நல்ல எலுமிச்சை பானம் செய்து கொண்டாடு `என எழுத்தாளர் டேல் கார்னிகி சொல்வது சரி தானே?
தம்பி,எந்த ஒரு பெரிய சாதனைக்கும் மனதில் முதலில் தோன்றும் எண்ணம்தான் விதை. அந்த விதையுனுள் இருப்பது பெரிய ஆலமரம். அது வெளிவர, வளர, உயர, படரத் தேவை நம்பிக்கை எனும் நீர், திட்டமிடுதல் செயல்படுத்துதல் எனும் உரங்கள். எனவே விதியை ஓரங்கட்டிவிட்டு, உழைப்பில் இறங்கணும்.
`விதியை நம்பிக் கொண்டிருப்பவன் எதையும் செய்ய மாட்டான்' என்கிறார் சாணக்கியர். அப்படி இருப்பவனுக்குப் போர் கிடையாது, போராட்டம் கிடையாது. அப்படியென்றால், சண்டை தொடங்கும் முன்பே தோல்விதானே. எனவே வாழ்வில் வெற்றி பெற நாம் மதியைத் தான் நம்பணும் இல்லையா?
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago