20
15 ல் வெளிவந்த `தனி ஒருவன்’ திரைப்படத்தைப் பார்த்தீர்களா? ரசித்தீர்களா? வில்லன் அரவிந்த்சாமியின் அப்பாவி அப்பாவாகத் தம்பி ராமையா பிரமாதமாக நடித்து இருப்பார். அந்தப் பொல்லாத மகன், தனது யதார்த்தமான, நல்ல தந்தைக்குச் சொல்லும் அறிவுரைகள் சுவாரஸ்யமானவை. வசனங்கள் ஞாபகம் வருகிறதா? `நானாகச் சொல்கிற வரைக்கும் நீங்களாகச் சிந்தித்துச் சுயமாக முடிவெடுத்து எந்த ஒரு வார்த்தையும் பேசி விடாதீர்கள். இப்படி நடந்து கொண்டால்தான் உலகம் உங்களை மேதாவியென்று மதிக்கும்’ என்கிற ரீதியில் உபதேசம் செய்திருப்பார்.
வேறு ஒரு காட்சி. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. மேடையில் முதலமைச்சர் நாசர். சுகாதாரத் துறை அமைச்சரான தம்பி ராமையாவிற்கு அவர் படிக்க வேண்டிய கோப்பு மாற்றப்பட்டது தெரியாது. என்ன பேசுகிறோம் எனப் புரியாது உளறிக் கொட்டுவார். `நான் சிலகாலம் முன்பு எய்ட்ஸுக்கு வைத்தியம் செய்து கொண்டேன். அதே மருத்துவமனையில் எய்ட்ஸுக்குச் சிகிச்சை பெற்று வந்த வேறு ஒரு ஏழையினால் பணம் கட்ட முடியவில்லை. அதற்காக அவரது கிட்னி முதலான உறுப்புகளை எடுத்து விற்று விட்டனர். இதற்கெல்லாம் முதலமைச்சர்தான் உடந்தை’ என்று பேசிக் கொண்டே போவார்.
வில்லனின் அடியாள் அவரை நெஞ்சு வலி என நடிக்கச் சொல்லி இந்தக் குழப்பத்தை நிறுத்த முயற்சிப்பார். ராமையாவோ அதைக் கேட்டுக் கொண்டு, இப்ப எனக்கு மாரடைப்பு வரப் போகிறதென மைக்கிலேயே சொல்லிவிடுவார்! பின்னர், வலது புற நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, நெஞ்சு வலி வந்தது போல நடிப்பார். உதவியாளர் `எல்லோருக்குமே இதயம் இடது பக்கம் தான் இருக்கும்’ எனக் காதில் சொல்ல, பின்னர், இடது பக்க நெஞ்சில் கையை மாற்றி வைத்துக் கொள்வார்!
மொத்தத்தில் என்ன பேசுகிறோம், ஏன் பேசுகிறோம் என்பதே அவருக்குத் தெரியாது. படத்தில் அவரது பாத்திரம், முட்டாள்தனமும் அப்பாவித்தனமும் சேர்ந்து செய்த கலவையாக இருக்கும். அவரை அறியாமலே அவர் பல குழப்பங்களுக்கு வித்திடுவார். முதல் மந்திரியுடன் வில்லன் அரவிந்த்சாமியும் மாட்டிக் கொள்ளும் நிலைமை உருவாகிவிடும்.
ஐயா, திரைப்படமென்ன, அன்றாட வாழ்க்கையிலும் இப்படித் தானே? சிலரைக் கூட வைத்துக் கொண்டாலே, ஆபத்துதான். ஏடாகூடமாக எதையாவது சொல்லித் தொலைப்பார்கள்.அந்த மாதிரி அக்மார்க் முட்டாள்களுக்கு நமது சமிக்ஞைகளும் புரியாது. மேற்கொண்டு நம்மிடமே `என்ன ஜாடை காண்பிக்கிறாய், புரிகிற மாதிரி சொல்’ என்பார்கள்.
`அனுகூல சத்ரு’ என்பது இவர்களைத்தான். `முட்டாள்களின் மூலதனமே பேச்சுத்தான்’ என்கிறார் ஆங்கிலேய தத்துவ ஞானி தாமஸ் ஹாப்ஸ். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். பாவம் நல்லவர்கள். ஒரு முட்டாளிடம் அவனது தவறை எடுத்துச் சொல்லித் திருத்தப் பார்ப்பார்கள். முட்டாளோ தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பான்.கொஞ்ச நேரம் கழித்து அவர்களது வாக்குவாதத்தைப் பார்ப்பவர்களுக்கு இவர்களில் யார் முட்டாள் என்பதே குழம்பிப் போய்விடும்.
`அறிவாளிகள் பேசுவதற்கு விஷயம் இருப்பதால் பேசுவார்கள். அறிவிலிகளோ ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுவார்கள்’ என கிரேக்க அறிஞர் பிளாட்டோ கூறியது இன்றளவும் நடப்பதுதானே? ` துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையை நாமெல்லோரும் பெரும்பாலாகக் கடைப் பிடிக்கிறோம். ஆனால் அதே அளவு எச்சரிக்கையை நாம் முட்டாள்கள் விஷயத்தில் காட்டுவதில்லை.
இதற்கு அவன் முட்டாள் தானே, அவனுக்கெல்லாம் கெடுதல் செய்யக் கெட்டிக்காரத்தனம் போதாது எனும் எண்ணம் காரணமாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் நேரம் காலம் தெரியாமல், அவர்களை அறியாமலே பேசும் பேச்சுக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. முட்டாளை அருகில் வைத்துக் கொண்டு வீடு வாடகைக்குக் கேட்பீர்களா? சொத்தை விலை பேசுவீர்களா? மகனுக்குக் கல்யாணம் பேச முடியுமா?
முட்டாளுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். அவன் அறிவற்ற விலங்கிற்குச் சமமானவன். கண்ணிற்குத் தெரியாத முள் போல, கூர்மையான வார்த்தைகளாலேயே, உங்களைக் குத்தி விடுவான்’ என்கிறார் சாணக்கியர்.
ஐயா, அப்புறம் இந்த முட்டாள்தனத்தையும் படிப்பையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இவை இரண்டிற்கும் சம்பந்தமில்லை என்பது தானே உண்மை? நாட்டில் படித்த முட்டாள்களுக்கும் பஞ்சமில்லை, படிக்காத மேதைகளுக்கும் குறைவில்லை அல்லவா?
தம்பி, இந்தக் காரியச் சமர்த்து இல்லாதவனைத் தானே முட்டாள் என்கிறோம்? அப்படிப் பார்த்தால், முட்டாள்களின் சகவாசத்தைத் தவிர்க்காமல் இருப்பதும் முட்டாள்தனம் தானே? மேலும், பைத்தியக்காரத்தனத்தின் ஆரம்ப நிலை தானே இந்த முட்டாள்தனம்?
இந்திய ஒப்பந்தச் சட்டத்தில் கூட, ஒப்பந்தம் செய்பவர்கள், அது செல்லுபடியாக வேண்டுமெனில், அந்த ஒப்பந்தத்தினால் தங்களுக்கு ஏற்படக் கூடிய சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே? உதாரணமாக பைத்தியக்காரனுடன் செய்யப்படும் ஒப்பந்தம் செல்லாது. சாணக்கியர் சொல்வதைப் புரிந்து நடந்து கொண்டால் நன்மைதான்.
somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago