சபாஷ் சாணக்கியா: பணத்திற்கு அணிகலன்...

By சோம.வீரப்பன்

திருக்குறளில், ஒப்புரவு, ஈகை என அடுத்தடுத்து இரு அதிகாரங்கள் உள்ளனவே, இவை இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டைச் சொல்லுங்கள் பார்ப்போம். சரியாய் தெரியவில்லையே என்கிறீர்களா?அட, charity, philanthropy எனும் ஆங்கிலச் சொற்களுக்கான வித்தியாசத்தையாவது சொல்லுங்களேன்!

தம்பி, தாகம் என்று வருபவனுக்கு தண்ணீர், நீர்மோர் கொடுத்தால் அது உதவி அல்லது ஈகை. ஆனால் ஊருக்கே குளம் வெட்டி வைத்தால் , தண்ணீர்க் குழாய் அமைத்துக் கொடுத்தால் அது மனிதநேயம், அதாவது, ஒப்புரவு! ஒரு பள்ளிச்சிறுவனுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டினால் அது உதவி, ஊருக்கே பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தால் அது ஒப்புரவு.

இந்த நற்குணம் உள்ளவரை, நம்ம வள்ளுவர், பயன்தரும் பழங்களாய்ப் பழுத்துள்ள மரம், ஊரின் நடுவே இருப்பதற்கு ஒப்பிடுவார். குறளுக்கு உரை எழுதிய வரதராசனார், ஒப்புரவை, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்துமாறு செய்யப்படும் தர்மம் என விளக்குவார். தொடர்ந்து தர்மம் நல்ல படியாய் நடக்க அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்படுவது தமிழ் நாட்டில் தொன்று தொட்டு நடைபெறுவது. ராசராச சோழனின் இத்தகைய தர்மங்களை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் காணலாம்!

ஐயா, உங்கள் வாழ்க்கையில் பல பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். பல வகையான பணக்காரர்களையும் பார்த்திருப்பீர்கள். அவர்களில் இந்தப் பகட்டு காண்பிக்கின்ற பணக்காரர்களைப் பார்த்தால் எரிச்சல், எரிச்சலாக வரும் இல்லையா? இரவில் கூட கருப்புக் கண்ணாடி போட்டுக் கொள்வது, வயதிற்கும், தட்பவெப்ப நிலைக்கும் பொருந்தாத ஆடைகள் அணிவது, பணத்திமிரில் உணவை, மற்ற பொருட்களை வீணடிப்பது, இத்யாதி.

வேறு சில பணக்காரர்களுக்கோ ஊதாரித்தனமாய் செலவு செய்யத் தெரியுமே தவிர, பாதுகாப்பாகச் சேமிக்கவோ, வருங்காலத்தில் தொடர்ந்து பலன்தரும் வழியில் முதலீடு செய்யவோ தெரியாது. இவ்வளவு ஏன், பலருக்குச் சம்பாதிப்பதற்குத் தேவையான கெட்டிக்காரத்தனம் கூட நிறையவே இருக்கும். ஆனால் அதைச் சரியாய்ப் பயன்படுத்தும் சாமர்த்தியம், மனோபக்குவம் கொஞ்சம் கூட இருக்காது. இவர்கள் பாடுபட்டுத் தேடிய பணத்தை பலவழிகளில் பாழாக்குவார்கள்.

அழகிய தோற்றத்திற்கு அணிகலன் ஒழுக்கம் ஆகும், உயர் பிறப்பிற்கு அழகு நன்னடத்தை, கல்விக்கு அழகு வெற்றி, செல்வத்திற்கு அழகு அதைச் சரியாய்ப் பயன்படுத்துவதே ' என்கிறார் சாணக்கியர்.

உண்மை தானே? அழகாயிருப்பவர் ஒழுக்கமானவராகவும் இருந்து விட்டால் , அந்த அழகே தனி தானே? உயர் பதவியில், உயர் குடும்பத்தில் இருப்போர் அன்பாக, பண்பாக நடந்து கொண்டால் மனதிற்கு எவ்வளவு இதமாக இருக்கும்! படித்தவன் வெற்றிபெற்றால் தானே சிறப்பு?இவை போலவே பணக்காரனுக்கு அழகு சேர்ப்பது அவன் அப் பணத்தைச் சரியான வழியில் பயன்படுத்துவது தானே?

சரி, அபிராமி அந்தாதி கேட்டு இருப்பீர்கள். திருக்கடவூர் அம்மனிடம் தம் வேண்டுகோள்களை வைக்கும் அபிராமி பட்டர், கல்வி கொடு எனக் கேட்காமல், கலையாத கல்வியைக் கொடு என்று தானே கேட்பார்? கன்றாத வளமை, குன்றாத இளமை, அன்பு அகலாத மனைவி, தொலையாத நிதியம் என்று அவை ஒவ்வொன்றிற்கும் அவர் அடைமொழி சொல்வது மாதிரி, இந்தச் செல்வத்தின் சிறப்பு அதன் பயன்பாட்டில் தானேங்க இருக்கிறது?

`செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் புறநானூற்றில் நக்கீரனார் சொல்வது உண்மை தானே? மனித நேயமுள்ள மானிடர் யாவர்க்கும் இது இயற்கையாய்த் தோன்றும் உணர்வு அல்லவா? `தர்மம் செய்யுங்கள் என சட்டமியற்றவோ, யாரையும் கட்டாயப்படுத்தவோ முடியாது. அது உள்ளுணர்வின் வெளிப்பாடாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தான் அது ஆத்ம திருப்தி தரும்' என்கிறார் நம்ம விப்ரோவின் அசிம் பிரேம்ஜி.

தனிநபர்களே கூட, தமக்கு வரும் வருவாயில் கால் பங்கை, மற்றவர்க்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பது தமிழர் பண்பாடாகச் சொல்லப் பட்டுள்ளது.

பலர் இன்று பல தொண்டுகள் செய்து வந்த பொழுதும், செய்வதற்கு இன்னமும் நிறையவே இருக்கிறது. இந்திய ஒப்புரவு அறிக்கை- 2018, என்ன சொல்கிறது தெரியுமா? 2004 ஆண்டிலிருந்து 2015 வரை பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் சுமார் 22 லட்சம். 2017 ஆண்டில் மட்டும் 5 வயதிற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இவற்றையெல்லாம் சரி செய்ய, அரசாங்கத்துடன் சமூக அக்கறையுள்ள அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

ஒப்புரவு உண்மையில் நல்ல பயன்தர வேண்டுமெனில், அதற்கு அதை எப்படி எப்படிச் செய்யலாம் எனும் புதிய சிந்தனை வேண்டும், அப்படிச் சிந்திக்க நேரமும் ஒதுக்க வேண்டும். ஒப்புரவும் வணிக நிறுவனம் போலத்தான். சிறப்பாக அமையத் நிறையத் திறமையும் கவனக்குவிப்பும் தேவை’ என்கிறார் மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸ். மொத்தத்தில், சாணக்கியர் சொல்வது போல, பணத்திற்கு அணிகலன், அதன் நல்ல பயன்பாடுதான்!

-somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்