சபாஷ் சாணக்கியா: கணவன் அமைவதெல்லாம்...

By சோம.வீரப்பன்

உங்களிடம்,IQ, EQ என்பவை என்னவென்று கேட்டால் உடனே, Intelligence Quotient என்றும் Emotional Quotient என்றும் சொல்லிவிடுவீர்கள்.சரி, FQ கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? உளவியல் பேராசிரியை சுஜானே டெக்கஸ் Friendship Quotient (FQ) பற்றிச் சொல்பவை சுவாரசியமானவை!

நல்ல நட்புக்கு 13 குணங்களைக் குறிப்பிடும் அவர், அவற்றை மூன்று தகுதிகளாகப் பிரிக்கின்றார். அதில் முதலாவது நம்பகத்தன்மை. இல்லையா பின்னே? நண்பர்களுக்குக் கடிதம் எழுதினால் கூட, `உனது உண்மையான’ ( yours sincerely) என்று தானே முடிப்போம்?

நண்பர் ஆகப்பட்டவர் நம்மை முழுமையாக நம்பணும்,அத்துடன் நாம் அவரை சுத்தமாக நம்புகிற மாதிரியும் நடந்து கொள்ளணுமில்லையா? நல்ல நண்பர்களிடையே ஒளிவு மறைவு இருக்காது, எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்வார்கள் என்கிறார்.

அவர் கூறும் இரண்டாவது தகுதி ஒருவர் மேல் மற்றவர் காட்டும் அக்கறை. நண்பன் என்றால் சோதனை வரும் பொழுது கூப்பிடாமலேயே ஓடி வரணும் இல்லையா? உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையணும் அல்லவா? இது , அனுதாபத்திற்கும், பச்சாதாபத்திற்கும் ஒரு படி மேலே.வள்ளுவர் கூறும் கண்ணோட்டம் இது.

ஆஸ்திரிய உளவியலாளர் ஆல்பர்ட் அட்லர் சொல்வது போல, இதனை `மற்றவர் கண்ணால் பார்ப்பது, மற்றவர் காதால் கேட்பது, மற்றவர் இதயத்தால் உணர்வது’ எனலாம். மேலும் , ஒருவரை அவரது குறைகளோடு ஏற்றுக் கொள்பவன் தானே நண்பன்? தளபதி திரைப்படத்தில் ரஜினி மாதிரி, நண்பனிடம் தவறுகள் இருந்தாலும், அதைப் பெரிது படுத்தாமல் அவனுக்குத் தோள் கொடுக்கணும்.

நண்பனுக்கான மூன்றாவது தகுதி இருவருக்கும் இடையே எப்பொழுதும் ஓர் இறுக்கமற்ற, இசைவான (congenial) சூழ்நிலையை, ஒரு மகிழ்ச்சியான உறவை வைத்துக் கொள்வது என்கிறார். அவர்களிடையே கேலி, கலகலப்பு, கலாய்ப்பு இருக்கணுமாம்.

அண்ணே, இப்ப உங்கள் நெருங்கிய நண்பர்களை நினைத்துப் பாருங்கள்.இந்த மூன்று குணங்களும் அவர்களிடம் இருக்கிறதா, இல்லையா? `வெளி தேசத்தில், உன் அறிவே உனக்கு நண்பன். வீட்டுக்குள், உன் மனைவியே உனது நண்பன். வியாதிஸ்தனுக்கு, மருந்து நண்பன்; மரணத்திற்குப் பின்னர் நீ செய்த தர்மமே நண்பன்’ என்கிறார் சாணக்கியர்.

சரியாய்ப் போச்சு, மனைவியாவது நண்பன் ஆவதாவது என்கின்றீர்களா? `நண்பேண்டா’ என்பதில் உள்ள மகிழ்ச்சி, துள்ளல், குஷி இங்கே எங்கே என அங்கலாய்க்கின்றீர்களா? சும்மா சந்தேகப்படுகிற மனைவி எங்கே, என்னை முழுவதும் நம்புகிற நண்பன் எங்கே என்கின்றீர்களா? பணக்கஷ்டம் தெரியாமல் செலவழிக்கணும் என்கிற மனைவியையும், பணம் கொடுத்து உதவுகிற நண்பனையும் ஒருசேரப் பார்க்க முடியாது என்கின்றீர்களா?

`நல்ல மனைவி அமைவதற்கு நல்ல கணவன் வேண்டும்’ என இத்தாலியப் பன்மொழியறிஞர் ஜான் பஃளாரியோ சொல்லியது இங்கே ஆழமாகச் சிந்திக்க வேண்டியது. தம்பி, இந்தக் கணவன் மனைவி உறவு என்பது, தாய், தந்தை, சித்தப்பா,அத்தை போன்ற மற்ற எல்லா உறவுகளப் போல ரத்த சம்பந்தத்தினால் வருவதில்லையே. பல ஆண்டுகள் வெவ்வேறு குடும்பங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த இருவரை, இனி ஒரே கூரையின் கீழ் ஒன்றாக இருங்கள் என்றால் அதற்குப் புரிதலும் விட்டுக் கொடுத்தலும் அல்லவா அவசியம்?

எனது நண்பர் ஒருவர் தொழிலதிபர். நிறம் குறைவு. அதிகம் படிக்கவும் இல்லை. ஆனால் சொந்த முயற்சியில் நிறையச் சம்பாதிப்பவர். அவர் மனைவியோ நிறையப் படித்தவர்.சிகப்பு. அவர்கள் குடும்பம் நடத்தும் பாங்கு யாரையும் பொறாமைப்பட வைக்கும். நண்பர் பெண்டாட்டியிடம் எதையும் மறைக்க மாட்டார். வியாபாரத்தில் கஷ்ட நஷ்டங்கள், தனது சொந்தங்களுக்குப் பண உதவி செய்வது, நண்பர்களுடன் மது அருந்தியது என எதுவாக இருந்தாலும்.

அந்தச் சகோதரியும் அப்படித்தான். அவர்களிடையே அன்பென்றால் அப்படியொரு அன்பு! `அழகை விட ஆரோக்கியம் முக்கியம், நிறத்தை விட சுத்தம், வயதை விட இளமை, படிப்பை விட அறிவு, தோற்றத்தை விடக் குணமே முக்கியம்’ என்பார் அவர்!

பணியாட்கள் விடுமுறையில் சென்றால் நண்பரே காய்கறி நறுக்குவார். மனைவியைக் காஃபியுடன் எழுப்புவார். மனைவி பிரசவத்திற்கு மருத்துவமனை சென்றிருந்த பொழுதும், பின்னரும், ஒரு செவிலியைப் போலவே பணிவிடைகள் செய்தார். மிக அரிய விஷயம் இது. இருவரும் ஒருவரை ஒருவர் நம் முன்னாலேயே கேலி செய்து கொள்வார்கள், வாய் விட்டுச் சிரிப்பார்கள்.

`நல்ல நண்பன் கிடைத்து விட்டால் மகிழ்ச்சியே; மனைவியே நல்ல நண்பனாக அமைந்து விட்டால் வேறென்ன வேண்டும்?’ என இசைக் கலைஞர் ப்ரான்ஜ் ஸ்கூபர்ட் சொல்வதற்கு அவர்கள் நல்ல உதாரணம். ஐயா, சாணக்கியர் அறிவுரைப்படி மனைவியிடம் நண்பனைப் போல் நடந்து கொண்டு விட்டால், மனைவியும் நட்புப் பாராட்டி விட்டால், பின்னர் எல்லாம் சுகம் தானே !

-somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்